Sunday, March 18, 2018

பி.எஸ்.சி., 'ரேடியோதெரபி' பட்டம் படித்தவர்களுக்கு அனுமதி: ஐகோர்ட்

Added : மார் 17, 2018 23:23

சென்னை, 'ரேடியோதெரபி' பணியிடங்களுக்கு, பி.எஸ்.சி., ரேடியோதெரபி முடித்தவர்களின் விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி, சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, திவ்யா, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த, ஹேமலதா உள்ளிட்ட, ௧௦ பேர், தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

சென்னை மருத்துவ கல்லுாரியில், மூன்று ஆண்டு ரேடியோதெரபி தொழில்நுட்ப படிப்பை முடித்துள்ளோம். ௨௫ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரேடியோதெரபியில், இரண்டு ஆண்டு பட்டய படிப்பை முடித்தவர்கள், விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது. பட்டய படிப்பு முடித்தவர்களை விட, நாங்கள் கூடுதல் தகுதி பெற்றுள்ளோம்.

எங்களுக்கு தகுதி இருந்தும், அறிவிப்பில் விட்டு விட்டனர். இதுகுறித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். எங்களையும் பரிசீலிக்கும்படி கோரினோம். ஆனால், அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். ரேடியோதெரபி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எங்களுக்கு தகுதி உள்ளது. எங்கள் விண்ணப்பங்களை ஏற்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

மனுக்களை விசாரித்த, நீதிபதி, டி.ராஜா பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள், மூன்று ஆண்டு பட்டப் படிப்பை முடித்துள்ளனர். சென்னை மருத்துவ கல்லுாரி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பு பெற்றது. பட்டப் படிப்புக்கு, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமும் அங்கீகாரம் வழங்கி உள்ளது. எனவே, மனுதாரர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்களின் விண்ணப்பங்களையும் பெற வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024