Tuesday, March 6, 2018

என்னால் எம்.ஜி.ஆர்., ஆட்சியை தர முடியும்: ரஜினி

 Added : மார் 05, 2018 20:49 |

சென்னை: ‛அரசியல்வெற்றிடம் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை அருகே வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர்., சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

கட்அவுட் வேண்டாமே..

விழாவில் அவர் பேசியதாவது: தற்போது கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கையில் கட்சி கூட்டம் போல் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட், பேனர்களை வைக்க வேண்டாம் என ரசிகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கல்லூரி விழாவில் அரசியல் பேசக்கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் பேசக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.






அரசியல் தெரியும்:

எம்.ஜி.ஆர்.,க்கும் ஜெயலலிதாவுக்கும் திரை உலகமே தாய்வீடு. நடிக்க வந்த நான், 67 வயதிலும் எனது வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அரசியலில் உள்ளவர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லையே.என் மீது 96லேயே அரசியல் தண்ணீர் பட்டுவிட்டது. எனது அரசியல் வருகையை யாரும் மலர் தூவி வரவேற்க வேண்டாம். ஆனால் என்னை ஏளனம் செய்யாமல் இருந்தால் போதும். அரசியல் என்ன என்பது எனக்கு தெரியும். கருணாநிதி, மூப்பனாரிடம் நான் அரசியல் கற்றுள்ளேன்.

ஆன்மீக அரசியலை பார்ப்பீர்கள்:

எம்.ஜி.ஆர்., வழங்கிய ஆட்சியை என்னால் தர முடியும். அரசியல் பாதை பூப்பாதையல்ல முள் பாதை, பாம்புகள் நிறைந்த கரடு முரடான பாதை என்பது எனக்கு தெரியும். ஆன்மீக அரசியல் என்ன என்பதை இனி பார்ப்பீர்கள். சாதி மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மீக அரசியல்.

நல்ல தலைவன் தேவை:

ஜெயலிலதாவும், கருணாநிதியும் சிறந்த தலைவர்களாக இருந்தனர். ஜெயலலிதா இறந்து விட்டார்; கருணாநிதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது; நல்ல தலைவனுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். புகழ் பாடிய ரஜினி

அவர் பேச்சின் போது எம்.ஜி.ஆர். குறித்து புகழ்ந்து பேசினார். தொடர்ந்து அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே உள்ள நினைவுகள் குறித்து பகிர்ந்தார். அவர் மனைவி லதாவை திருமணம் செய்தது, ராகவேந்திரா மண்டபம் கட்டியது உள்ளிட்டவற்றிக்கு எம்.ஜி.ஆர். தான் காரணம் எனவும் கூறினார்.

மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்

மனித பிறவிலேயே மாணவ பருவம் தான் சிறந்த பருவம். மாணவ பருவத்தில் அரசியல் குறித்து தெரிந்து கொள்ளுங்கள், தேர்தலிலும் ஓட்டு போடுங்கள், படிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வராதீர்கள், என் கட்சியிலும் மாணவர்கள் சேர வேண்டாம். மாணவர்களுக்கு ஆங்கிலம் முக்கியம், அது தான் அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யும், தமிழர்கள் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024