Tuesday, March 6, 2018

ஓட்டை படகாய் உதவாத அரசு மூழ்கும்: கமல்

சென்னை : ''எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என, மக்கள் நீதி மைய தலைவர், நடிகர் கமல் கூறினார்.



கல்லுாரி மாணவர்கள் பலர், நேற்று, மக்கள் நீதி மையத்தில் இணைந்தனர். அவர்கள் மத்தியில், கமல் பேசியதாவது:என்னிடம், நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். உங்களுடைய ஆதரவு, எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, காலம் வரும் போது அறிவீர்கள்.

தயவுசெய்து, படித்து விட்டோம் என்ற அகந்தை மட்டும் வேண்டாம்; படித்தவர்களும், விவசாயத்திற்கு வர வேண்டும். அது, ஏழைகள் மட்டுமே செய்யக்கூடிய வேலை அல்ல

.நான் கூறும் கருத்தை, உங்களால் ஏற்க முடியவில்லை என்றால், நீங்கள் கூறுங்கள். அந்த கருத்தை, அனைவரும் ஏற்றால், நானும் ஏற்பேன். அது தான் மக்களாட்சி. தான் பிடித்த முயலுக்கு, மூன்று கால் என, நினைக்கக் கூடாது.
தமிழகத்தில், தற்போது காலே இல்லை.தமிழகத்தில் வெள்ள பாதிப்பின் போது, நான், 'டுவிட்டரில்' கேள்வி கேட்டேன் என்பதற்காக, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்டனர். அதனால் தான், இப்போது இங்கு வந்து நிற்கிறேன்.மாணவர்கள் தான் என் பேச்சு; தமிழகம் தான் என் மூச்சு.

எதிர்காலத்தை மாற்றியமைக்க, மாணவர்கள் முன்வர வேண்டும். நீங்கள் இல்லாமல், என்னால் எதுவும் செய்ய முடியாது. நம்மிடம் இருந்தே, அனைத்து மாற்றத்தையும் துவக்க வேண்டும்.என்னை பார்த்து, 'தலைவா' என, அழைக்க வேண்டாம். நான் உங்களை பார்த்து, 'தலைவா' எனக் கூற வேண்டும்.

தமிழக அரசியலை சுத்தம் செய்ய, இதுவே சரியான தருணம். தவறுகள் எல்லா அரசிலும் நிகழும். மக்களுக்கு உதவாத அரசு, ஓட்டை படகு போல் மூழ்கி விடும். வேலையில்லாமல் அலைவதற்கு, ஸ்கூட்டர் எதற்கு...

கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், கல்வி இருக்க வேண்டும். அமைச்சர்களின் பிள்ளைகளை, அரசு பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சரியான நேரம்

'உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்' என, மக்கள் நீதி மைய, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, கமல் உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் நேற்று, 32 மாவட்ட பொறுப்பாளர்களை, கமல் சந்தித்து பேசினார். மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர் சேர்க்கை, இணையதளத்தில் மட்டுமே நடந்த நிலையில், தற்போது, உறுப்பினர் படிவம் மூலமாகவும் நடத்த, கமல் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான படிவங்களை, மாவட்ட பொறுப்பாளர்களிடம், கமல் வழங்கினார். அப்போது, நிர்வாகிகளிடையே, கமல் பேசுகையில், 'உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில், அரசியல் மாற்றத்திற்கான சரியான நேரம் வந்துள்ளது. அதை, நாம் பயன்படுத்த வேண்டும். யார் ஊழல் செய்தாலும், அதை தட்டிக் கேளுங்கள்; அது குறித்த தகவல்களையும் சேகரியுங்கள்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024