Saturday, March 24, 2018

மாநில செய்திகள்

தமிழக தலைமை கணக்காயர் கைது சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை

பணி நியமனத்துக்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் தமிழ்நாடு மாநில தலைமை கணக்காயரை சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

மார்ச் 24, 2018, 04:45 AM
சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு மாநில கணக் காயர் (கணக்கு) அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த அருண் கோயல் மாநில கணக்காயராக (அக்கவுண்ட்டன்ட் ஜெனரல்) பதவி வகித்து வருகிறார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை திட்டங்களுக்கான தொகுப்பு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டங்கள் (டிவிஷன்) அளவில் கணக்கு தணிக்கை அதிகாரிகளை இவர் நியமனம் செய்து உள்ளார்.

இப்படி சுமார் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணையை வழங்கியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

மாநில கணக்காயர் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த கூட்டுறவு சங்கங்கள், மனமகிழ் மன்றங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அருண் கோயல் முயற்சித்து உள்ளார். 62 ஆண்டுகளாக இயங்கி வரும் மாநில கணக்காயர் அலுவலர்களுக் கான கூட்டுறவு சேமிப்பு சங்கத்தில் தற்போது ரூ.68 கோடி நிதி உள்ளது.

இந்த கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, ரூ.68 கோடி நிதியை சுருட்ட அவர் திட்டமிட்டு இருந்ததாக புகார் கூறப்படுகிறது. அதற்கான முயற்சியில் நேற்று மாலை 4 மணி அளவில், அருண் கோயல் ஈடுபட்டதாகவும், இதற்காக தனி அதிகாரிகள் சிலரை அனுப்பி கூட்டுறவு சங்கத்தில் உள்ள நிதியை அதிகார துஷ்பிரயோகம் செய்து கைப்பற்ற முயன்றதாகவும் தகவல் வெளியானது.

இதனால் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் ஒன்றிணைந்து தேனாம்பேட்டையில் உள்ள அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறையில் உதவியாளராக பணிபுரியும் எஸ்.சிவலிங்கம் என்பவர், விழுப்புரத்தில் டிவிஷனல் கணக்காளராக பணியாற்ற விரும்பியதாகவும், இதற்காக அவரிடம் அருண் கோயல் ரூ.5 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, அருண் கோயலிடம் கொடுப்பதற்காக தேனாம்பேட்டை கணக்காயர் அலுவலகத்தில் பணி புரியும் மூத்த கணக்கு அதிகாரி கஜேந்திரன் நேற்று மாலை சிவலிங்கத்திடம் இருந்து ரூ.5 லட்சத்தை பெற்று உள்ளார். இதற்கு திருவள்ளூரில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எல்.எஸ்.ராஜா என்பவரும் உடந்தையாக இருந்தார்.

தேனாம்பேட்டை கணக்காயர் அலுவலக வளாகத்தில் லஞ்ச தொகை கைமாறுவது பற்றிய ரகசிய தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லஞ்ச தொகை கைமாறியது தெரியவந்தது.

விசாரணையின் போது, லஞ்சமாக பெற்ற தொகையில் ரூ.3 லட்சத்தை அருண் கோயலிடம் கொடுத்துவிட்டதாக கஜேந்திரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அருண் கோயலிடம் இருந்து அந்த தொகையை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மற்றவர்களிடம் இருந்த மீதி தொகையும் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தலைமை கணக்காயர் அருண் கோயல், கஜேந்திரன், சிவலிங்கம், எல்.எஸ்.ராஜா ஆகிய நால்வரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்ட தகவலை சி.பி.ஐ. செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறது.

அதிகாரி அருண் கோயல் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து மாநில கணக்காயர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் கூறியதாவது.

தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் இருந்து வரும் அரசுக்கான வருவாய்கள் இவரது அலுவலகத்தின் மூலம் தான் அரசு வங்கிகளில் காசோலையாக போடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படும். இவ்வாறு அரசு வங்கிகளில் போடப்படும் பணத்துக்கு வட்டி கிடையாது.

எனவே அருண் கோயல் தனியார் வங்கியில் தனியாக கணக்கு தொடங்கி உள்ளார். அதன்மூலம் பண பரிமாற்றம் செய்து உள்ளார். இந்த வகையில் அந்த தனியார் வங்கியில் மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கும் வட்டி இல்லை என்றாலும், கணக்கில் வராத வகையில் மாதா மாதம் லட்சக்கணக்கான பணத்தை தனியார் வங்கி அதிகாரிகளிடம் இருந்து, அருண் கோயல் பெற்று வந்து உள்ளார்.

மேலும் அந்த தனியார் வங்கியில் தனது மனைவிக்கு உயர் பதவியும் பெற்றுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024