Saturday, March 24, 2018

ஆஸ்திரேலிய விசா முறை மாற்றம்: இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு

Added : மார் 24, 2018 03:30 



மெல்போர்ன் : இந்தியர்கள் அதிகம் பயன் படுத்தும், விசா நடைமுறை, 457ஐ, ஆஸ்திரேலியா அரசு கைவிட்டது. அதற்கு மாற்றாக, பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய விசா முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்தோருக்கு, '457' என்ற விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 95 ஆயிரம் வெளிநாட்டவருக்கு இந்த விசா வழங்கப் படுகிறது. இதில், 25 சதவீதத்தை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 19.5 சதவீதமும், சீனாவைச் சேர்ந்தவர்கள், 5.8 சதவீதமும் பயன்படுத்துகின்றனர்.

தகுதி மற்றும் திறமையுள்ள தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ள இந்த விசா முறை தவறாகப்பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்து வந்தது. அதையடுத்து, 'வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் விசா முறையில் மாற்றம் செய்யப்படும்' என, ஆஸ்திரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல், கடந்தாண்டு அறிவித்து இருந்தார்.

அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த, விசா முறை கைவிடப்பட்டு, புதிய விசா முறை, 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்காலிக திறன் பற்றாக்குறைவிசா திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விசா முறையில், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

'ஆங்கிலம் நன்கு பேசத் தெரிய வேண்டும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. 'கிரிமினல் குற்றங்கள் இல்லை என்பதற்கான தடை இல்லா சான்று தேவை, விண்ணப்பிக்கும் பணிக்கான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும்' என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

முன்பு, 6 ஆண்டுகளுக்கு விசா வழங்கப் பட்டது. தற்போது, பணியின் தன்மைக்கு ஏற்ப, இந்த விசா காலம் மாறுபடுகிறது. ஆஸி., அரசின் நடவடிக்கையால், அங்கு பணிபுரிய செல்லும் இந்திய தொழிலாளர் களுக்கு பாதிப்பு ஏற்படும் என, அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024