Tuesday, March 6, 2018

விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் முன் குட்காவை ஒழிக்கச் சொன்ன எடப்பாடி! - கலெக்டர் மாநாடு காமெடி

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி




தமிழகத்தில் குட்கா, பான் மசாலாப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித் துறையினர், சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது 250 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதமாக வியாபாரம் நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். குட்கா தயாரிப்பாளரான மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கியதற்கான விவரங்கள் கிடைத்தன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் 39 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை திரட்டியது வருமானவரித் துறை.

இப்படிக் கிடைத்த ஆவணங்களை வைத்து வருமானவரித் துறை புலானாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர், அப்போதைய டி.ஜி.பி அசோக் குமாருக்கு 2016 ஆகஸ்ட் 11-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பினார். அதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2016 செப்டம்பர் 2-ம் தேதி அனுப்பினார் அசோக் குமார்.

இந்த விவகாரம் வெளியே கசிந்தது. லஞ்சம் வாங்கிக்கொண்டு அமைச்சரும் போலீஸ் அதிகாரிகளும் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை அனுமதித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார் ஸ்டாலின். இந்த நிலையில், டி.ஜி.பி-யாக டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அதற்கு எதிர்க்கட்சிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ், லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால், பிறகு அவரை பணியிட மாற்றம் செய்தார்கள்.

டி.ஜி.பி. நியமனம், குட்கா விவகாரத்தை வைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.க. இந்த வழக்கில் வருமானவரித் துறை முதன்மை இயக்குநர் சுசீ பாபு வர்கீஸ் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மாதவ்ராவிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் HM - CP எனக் குறிப்பிட்டிருந்தது. ஹெல்த் மினிஸ்டர் மற்றும் கமிஷனர் ஆஃப் போலீஸ் என்பதன் சுருக்கம் இது என அந்தப் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போயஸ் கார்டனில் வருமானவரித் துறையினர் சோதனை போட்டபோது அசோக் குமார் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பட்டது.



குட்கா விவகாரத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என வாதாடியது. 'சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் எனக் கூறுவதைப் பார்த்தால் வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது' என உயர் நீதிமன்றம் கருத்துச் சொன்னது. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற மாநில அரசு தயங்குவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில் குட்கா ஊழலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளையும் வழக்கில் சேர்ப்பதை தவிர்க்கத்தான் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறது. விஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்காமல் அவர்களை தமிழக அரசு காப்பாற்றி வருகிறது.

இப்படியான சூழல் இன்று தொடங்கிய கலெக்டர்கள் - போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஒரு நம்பர் லாட்டரி, இணைய தளம் வாயிலாக நடைபெறும் சூதாட்டங்கள், குட்கா விற்பனை, போதைப்பொருள்கள் விற்பனை போன்றவை பொதுமக்களை, குறிப்பாக எதிர்காலச் சந்ததியினரைப்

பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து இவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.'' எனச் சொன்னார்.

''குட்கா விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும்'' என எடப்பாடி சொன்னபோது அந்த அரங்கத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் இருந்தார்கள். குட்கா விவகாரத்தில் லஞ்சப் புகார் சொல்லப்பட்ட நபர்களை வைத்துக் கொண்டுதான், ''குட்கா விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும்'' என எடப்பாடி பேசியிருப்பது விந்தை.

No comments:

Post a Comment

The Medical Counselling Committee (MCC) is expected to release the schedule for the NEET PG counselling process on November 11, 2024.

The Medical Counselling Committee (MCC) is expected to release the schedule for the NEET PG counselling process on November 11, 2024.  Repor...