Monday, March 19, 2018

மொபைல்போன் கோளாறு : ரூ.47 ஆயிரம் இழப்பீடு

Added : மார் 19, 2018 02:36

சென்னை: மொபைல்போன் கோளாறு பிரச்னையில், தயாரிப்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், கார்த்திக், 45. இவர் அங்குள்ள, தனியார் மொபைல்போன் விற்பனை நிறுவனத்தில், 'சாம்சங்' மொபைல்போன், 32 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு வாங்கினார்.சில நாட்களில், கோளாறு ஏற்பட்டதால், சர்வீஸ் மையத்தில் கொடுத்தார். கோளாறு சரி செய்து கொடுத்தும், பயன்படுத்த முடியவில்லை. புதிய போன் வழங்க கேட்டதற்கு, நிறுவனம் மறுத்துவிட்டது.புதிய போன் வழங்க வேண்டும் அல்லது செலுத்திய தொகையுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கார்த்திக் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையில், 'உற்பத்தியில் குறைபாடில்லை. புதிய உதிரி பாகம் இணைத்து, கோளாறு சரி செய்யப்பட்டது. மனுதாரர், போனை வாங்க மறுத்துவிட்டார். சேவையில், குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மொபைல்போன் நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் உயிரொலிகண்ணன் பிறப்பித்த உத்தரவு:மொபைல்போன் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின், சேவையில் குறைபாடுள்ளது. இந்நிறுவனங்கள், மனுதாரருக்கு, மொபைல்போன் தொகை, 32 ஆயிரத்து, 500 ரூபாய் திரும்ப வழங்குவதுடன், இழப்பீடு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என, மொத்தம், 47 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024