உங்கள் மொபைல் போனுக்கு சார்ஜ் போடப் போகிறீர்களா? ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!
By சினேகா | Published on : 18th March 2018 06:35 PM
நமது அன்றாட வாழ்க்கையில் எதைவிடவும் முக்கியமானது செல்போன்கள்தான். வீட்டில் செல்போனை விட்டுவிட்டு வந்துவிட்டால் ஆபிஸில் வேலை செய்யவே மனம் ஓடாது எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோர் பலர். செல்போனுடன் இலவச இணைப்பாக ஒரு பிரச்னை ஆண்டாண்டு காலமாக இருந்தே வருகிறது. அதுதான் சார்ஜ் நிக்கமாட்டேங்குது மச்சி என்ற குறைபாடு. அதிலும் விலையுயர்ந்த போன்களுக்குத் தான் இந்த பரிதாப நிலை. உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இவை.
விலை குறைவாகக் கிடைக்கிறது என்று மலிவு விலை சார்ஜரை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் ஃபோனின் பேட்டரியை பதம் பார்த்துவிடும். போலவே ஒரிஜினல் ப்ராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். யூஎஸ்பி கேபிள் வழியாக லேப்டாப் அல்லது டெஸ்ட்டாப்பில் சார்ஜ் செய்தால் அது போதிய அளவில் மின் அழுத்தம் கிடைக்காமல் போகும். முழுவதும் சார்ஜ் ஆகாத நிலையில் அதிலிருந்து நாம் அடிக்கடி உருவி தேவைப்படும் போது மறுபடியும் போட்டு என கேம் விளையாடிக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான். வெகு விரைவில் உங்கள் பேட்டரி பல்லிளித்துவிடும். அதன் பின் புது ஃபோன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே உங்கள் செல்போனின் ஸ்பெசிஃபிகேஷனுக்குத் தகுந்த மின் அழுத்தத்தை ஏற்கும் சக்தியுள்ள ஒரிஜனல் சார்ஜரையே பயன்படுத்துவது சாலச் சிறந்தது. உங்கள் ஒரிஜினல் தொலைந்துவிட்டால் மார்கெட்டில் கிடைக்கும் இன்னொரு ஒரிஜினல் சார்ஜரை வாங்கி பயன்படுத்துங்கள். இரவல் கேட்டு மற்ற ப்ராண்ட் சார்ஜரை போடாதீர்கள்.
சிலர் சார்ஜர் தேடி அலையாமல் பவர் பேங்கை கைவசம் வைத்திருப்பார்கள். தரமான கம்பெனி ப்ராண்டையே பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் அந்த பவர் பேங்க் அதிக மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்திவிடலாம். பவர் பேங்க் பயன்படுத்துகையில் ஹெட்போனை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஓவர் ஹீட்டாகி போனின் பேட்டரி அதிவிரைவில் பழுதடையும்.
சிலர் சார்ஜ் போடும்போதும் பேனல் கவரை கழற்ற மாட்டார்கள். அது தவறு. ஓவர் ஹீட்டாக இருக்கும் போனை சற்று கூலிங்காக வைக்கவும் கீழே விழுந்தாலும் உடைந்து நொறுங்காமலும் இருக்க உதவுகிறது பேனல். ஆனால் சார்ஜ் செய்யும் போது அதையும் சேர்த்து சார்ஜில் போட்டால் சூடு அதிகரித்து போன் சீக்கிரம் ரிப்பேர் ஆகிவிடும். எனவே காட்டன் துணியில் கீழ் வைத்து சார்ஜ் போடுங்கள்.
சிலர் இரவில் தூங்கப் போகும் முன் லைட்டை அணைக்கிறார்களோ இல்லையோ, மறக்காமல் போனை சார்ஜரில் போட்டுவிட்டு ஆழ்நிலை உறக்கத்திற்குள் சென்றுவிடுவார்கள். விடிய விடிய போன் ப்ளக் பாயிண்டில் இருந்தால் அதன் பேட்டரி மிக விரைவில் செயல்படும் திறன் குறைந்து ஆயுள் முடிந்துவிடும். இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள் ஒரு மணி நேரம் அல்லது சார்ஜ் நூறு சதவிகிதகம் வரும்வரையில் போட்டுக் கொள்ளுங்கள்.
மேலும் அனாவசியமான ஆப்களை பின்னணியில் வைத்திருக்க வேண்டாம். அவை சார்ஜ் போடும் போது தாக்குப் பிடிக்க அதிக நேரம் சார்ஜ் செய்யும்படி நேரும். அத்தனை ஆப்களையும் அணைத்துவிட்டு, சார்ஜ் போடுவது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நன்மை தரும்.
சிலர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும்தான் சார்ஜ் போடுவார்கள். குறைந்தது 15 சதவிகிதம் இருக்கும்போதே சார்ஜ் போட்டுவிடுங்கள். இன்னும் சிலர் கொஞ்சூண்டு சார்ஜ் போட்டுக்கறேன் என அவசரத் தேவைக்கு 20 அல்லது 30 சதவிகிதம் போட்டு எடுத்துவிடுவர்கள். அது தவறு. போனில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் அளவுக்காவது சார்ஜ் ஏறவேண்டும். அப்போதுதான் உங்கள் பேட்டரியின் செயல்திறன் சரியாக இருக்கும்.
No comments:
Post a Comment