Tuesday, March 13, 2018

அன்பார்ந்த முதியோரே...

2018-03-12@ 16:47:16


நன்றி குங்குமம் டாக்டர்

வணக்கம் சீனியர்

‘‘மழை, பனி போன்ற குளிர்காலங்கள் முதியவர்களுக்குக் கொஞ்சம் சவாலானவை. இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற சாதாரண பிரச்னைகளிலிருந்து ஏற்கெனவே இருக்கும் ஆஸ்துமா போன்ற வேறு உடல்நலக் கோளாறுகளும் தீவிரமாகும் காலம் இது. எனவே, உடல்நலனில் போதுமான அக்கறை செலுத்துவது அவசியம்’’ என்கிற முதியோர் நலன் மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் முதியோர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் பற்றி நினைவுபடுத்துகிறார்.

*மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள், முதியவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான நோய்கள் தொற்றுமூலமாகத்தான் பரவுகின்றன. இவற்றில் வைரல் இன்ஃபெக்‌ஷன், நீர் வழியாக பரவும் தொற்று முக்கியமானவை.

*குளிர்காலங்களில் Adult vaccination போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் H1N1 இன்ஃபெக்‌ஷனைத் தடுக்க முடியும். இதன்மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சர்க்கரை அளவு இருப்பவர்கள் வாக்ஸின் போட்டுக் கொள்வது நல்லது.

*ஈரப்பதம் அதிகமாக உள்ள இந்த காலக்கட்டத்தில், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் தொற்றுகளால் அதிகளவில் பாதிப்புக்கு ஆளானவர்கள். இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுற்றுப்புறத்தையும், தங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது அவசியம். குடிக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.

*வயோதிகக் காலத்தில் பலர் விடியற்காலையில் நடைப்பயிற்சி போவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். மழை மற்றும் குளிர்காலத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை வாக்கிங் செல்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், மப்ளரால் காதுகளை நன்றாக மூடியும், உல்லன் ஸ்வெட்டர் அணிந்தும் செல்வது நல்லது.

*மழை, குளிர்காலங்களில் நிறைய பசியெடுக்கும். அதற்காக, ஒரே நேரத்தில் தேவையைவிட, கூடுதலாக சாப்பிட்டுவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவ்வப்போது கொஞ்சம்கொஞ்சமாக சாப்பிடலாம். தண்ணீர் அடிக்கடி குடிப்பதும் அதிக பசியைக் குறைக்கும்.

*பொதுவாக, முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தொற்று மூலம் பரவக்கூடிய நோய்கள்(Communicable Diseases), தொற்றா நோய்கள்(Non Communicable Diseases) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில், தொற்றா நோய்களின் பாதிப்புகளால்தான் வயதானவர்கள் சமீபகாலமாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

*இன்ஃபெக்‌ஷன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளும், அதனால் ஏற்படுகிற விளைவுகளும் தொற்று நோய்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயோதிகம் காரணமாக ஏற்படுகிற கை, கால் மூட்டுகளில் உண்டாகிற வலி, ஞாபக மறதி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தொற்றாநோய்கள் ஆகும். இவற்றின் தாக்கம் முதுமை பருவத்தில் அதிகமாக காணப்படும்.

*எதிர்கால முதியவர்களாகப் போகும் இன்றைய இளைஞர்களுக்கான அறிவுரை இது. வயோதிகக் காலத்தில் ஏற்படுகிற ஆரோக்கிய சவால்களை எளிதாகத் தடுக்க இளவயது முதலே முறையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

*உடற்பயிற்சிகள் செய்தல், சத்தான உணவுவகைகள் சாப்பிடுதல், தீய பழக்கங்களைக் கைவிடுதல் போன்ற நெறியான வாழ்க்கைமுறையைக் கொண்டு இருந்தால், முதுமைப்பருவம் இனிமையாகும்.

*60 வயது வரையிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், சமீபகாலமாக சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஞாபக மறதி போன்றவை வந்துவிட்டால் அவை ஆரம்ப நிலையில்தான் இருக்கும். எனவே, சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி வெற்றி காணலாம்.

*60 வயதைக் கடந்தவர்கள், ‘எனக்கு எந்த நோயும் இல்லை; இனியும் எந்த பாதிப்பும் வராது’ என்று நினைப்பதைவிட, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம் உங்களுடைய அடிப்படை உடல்தகுதி என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

மேலும், மருத்துவருக்கும் உங்கள் உடல்நலனைப் பற்றி ஒரு தெளிவான பார்வை கிடைத்துவிடும். அதன்பின்னர், ஏதேனும் உடல்நலக் குறைபாடு காரணமாக நீங்கள் மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால், தகுந்த சிகிச்சை அளிக்க அவருக்கும் எளிதாக இருக்கும்.

*மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சுவையுணர்வு குறையத் தொடங்கும். இதை சரி செய்ய, தேநீரில் எலுமிச்சை ஜூஸ் கலந்து குடிக்கலாம். உணவுக்கு முன்பு தக்காளி சூப் எடுத்துக் கொள்ளலாம். மேலும், புளிசாதம், எலுமிச்சை சாதம் சாப்பிட்டு வருவதும் பசியைத் தூண்டி சுவையுணர்வை அதிகரிக்கும்.

*3 மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புத் தேய்மானம் என ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்னைகள் இருந்தால், அடிக்கடி மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

- விஜயகுமார்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...