Thursday, March 1, 2018

 சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

 DINAMALAR

எம்.ஜி.ஆர். போல நிறமிருக்கலாம்; ஆனால்...

Added : பிப் 22, 2018 00:56







நான் சொல்வது உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம், கமல். ஆனால், உங்களை, எம்.ஜி.ஆருடனும், கருணாநிதியுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கீழ்க்கண்ட விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது...

எம்.ஜி.ஆரின் உருவம், வெண்மை நிறம் கொண்டது. பொதுவாக, இந்த நிறத்தில் உள்ளவர்களை, எங்களைப் போல திராவிடர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கறுமை தான், எங்களுக்குப் பிடிக்கும். ஆனால், தான் நடித்த படங்களில், தனி மனித ஒழுக்கத்தைப் பின்பற்றுபவராகவும், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளைக் களைபவராகவும் தன்னை, எம்.ஜி.ஆர்., காட்டிக் கொண்டார். கிட்டத்தட்ட, காமராஜரின் வாழ்க்கையைப் பின்பற்றுபவர் போல!அதுவே, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு, மிக உறுதியான அடித்தளம் இட்டு விட்டது. எங்களைப் போன்ற அன்றாடம் காய்ச்சிகள், அவர் தான், உலகிலேயே மிகச் சிறந்த தலைவர் என்று நம்பி இருந்தோம்; அரசியல் வாழ்க்கையிலும், அவர் அப்படியே நடந்து கொண்டார்.

கருணாநிதிக்கு இப்படி நடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. ஏனெனில் அவர், எங்களைப் போல, திராவிடர்களின் சாயலைக் கொண்டிருந்தார்; எங்களின் மனநிலை புரிந்து, கூட்டங்கள் நடத்தினார். அரசியல் வாழ்க்கையில் மட்டும், அரிதாரம் பூச வேண்டி இருந்தது; அதையும் நன்றாகவே செய்து, வெற்றி பெற்றார்.நீங்கள்... கிட்டத்தட்ட, எம்.ஜி.ஆர்., நிறத்தைக் கொண்டிருக்கிறீர்கள். அவரைப் போல, கட்சி நடத்தி வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்; அதில் தவறில்லை. ஆனால், எம்.ஜி.ஆரைப் போல, சமூகப் பிரச்னைகளைச் சார்ந்த படங்களில் நீங்கள், பெரும்பாலும் நடித்ததில்லை.உங்களின் புகழைப் பறைசாற்றும் படங்கள் என்னவென்று பார்க்கும்போது, அவர்கள், மன்மத லீலை, பதினாறு வயதினிலே, மீண்டும் கோகிலா, மரோ சரித்ரா, அபூர்வ சகோதரர்கள், கைதியின் டயரி, சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், நாயகன், மகாநதி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என்று நீள்கிறது; அவை அனைத்திலும், உங்களின் நடிப்பை மெய்மறந்து பார்க்க முடிந்ததே தவிர, சமூக மேம்பாட்டுக்கென, நீங்கள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி என, ஒரு சில படங்களிலேயே, சமூக அக்கறை பிரதிபலித்திருக்கிறது.ஆனால், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை மையமாக வைத்தே அமைந்தது. சினிமா முடிந்து, அரசியலுக்குள் அவர் நுழைந்தபோது, கிட்டத்தட்ட, கடவுள் மாதிரியான தோற்றத்தில் தான் அவர் தென்பட்டார்.

அவருடைய வசீகரப் பேச்சு, ஆளுமைத்திறனைப் பார்த்து, கருணாநிதியை வியந்தார் என்பதே உண்மை.கருணாநிதியுடன் உங்களை இங்கே ஒப்பிட்டுப் பேசவே முடியாது. அவரின் தேன் சொட்டும் அல்லது விஷம் சொட்டும் பேச்சுகள், திராவிட மக்களை உணர்ச்சி பொங்க வைத்தன; அவருக்கு அடிமையாக்கி விட்டன.இந்த இரண்டு விஷயங்களுமே, உங்களிடம் மைனஸ். நேற்று மீனவர்களைக் கட்டிப் பிடித்த பாணி, கொஞ்சம் நாடகத்தனமாகவே இருந்தது.உங்களை குறை கூற விரும்பவில்லை. ஏனெனில், 'பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூன்' என்ற, ஆங்கிலச் சொலவடை உண்டே... அது போல தான் உங்கள் பிறப்பும், வாழ்க்கையும்!பிறந்த சில ஆண்டுகளிலேயே, உயர்தர, நறுமணம் மிக்க சென்ட், லிப்ஸ்டிக், அரிதாரம் என வளைய வந்தவர்களுடன், உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்கி விட்டது; 60 ஆண்டுகளாய், அப்படியே பழகி விட்டீர்கள்.இனி, நிலைமை அப்படி இருக்கப் போவதில்லை. வியர்வை நாற்றத்துடன், ஓடி ஆடி வேலை செய்ய வேண்டிய உங்கள், பி.ஏ., முதல், கடைமட்ட தொண்டர்கள் வரையிலானோரின் நெருக்கத்தில் தான் நீங்கள் பணியாற்ற வேண்டும். அதற்குப் பழகி இருக்கிறீர்களா?இங்கு தான், எம்.ஜி.ஆரை நினைவுகொள்ள வேண்டி இருக்கிறது. அவருடைய இளமைப் பருவம், மிகவும் வறுமை வாய்ந்ததாகவே அமைந்திருந்தது. ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவராக, ஏதாவது ஒரு நாடகக் கம்பெனியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா, கண்ணால் காசைப் பார்க்க முடியாதா என்று ஏங்கித் தவித்த வாழ்க்கை அவருடையது. வயிற்றுப் பசியின் வலியும், வியர்வையின் நாற்றமும்

அவருக்குப் பழக்கப்பட்டே இருந்திருக்கின்றன.இவற்றை உணர்ந்திருக்க, இவ்வளவு நாள் பழக்கப்பட்டிருக்கா விட்டாலும், இனி நீங்கள் பழகியாக வேண்டும்; சற்றே உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளும் உங்களுக்கு இதுநாள் வரை, எதிரியாகவே அமைந்து விட்டன. சரி... இனி, இவை எல்லாவற்றையும் மறப்போம்.கட்சியின் கடைமட்டத் தொண்டரையும் அனுசரித்துப் போக வேண்டிய நேரமிது; மற்ற கட்சியினரின், எடக்கு மடக்குப் பேச்சை, அவர்கள் மனம் நோகாமல் சமாளிக்க வேண்டிய தருணம்; தொண்டர்கள், நிர்வாகிகள் சற்றே ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வரும் நேரத்திலெல்லாம், சினிமா வாழ்க்கையில் நீங்கள் பின்பற்றிய, 'பர்பெக்ஷன்' எனும் ஆயுதத்தைக் கைவிட வேண்டிய நிர்ப்பந்தம்; ஒரு வேளை, முதல்வர் நாற்காலி கிடைத்தால், நிர்வாகம், மாநிலத்தின் பாதுகாப்பு ஆகிய இரண்டையும், கண்ணும், கருத்துமாகக் கையாள வேண்டிய கடமை என, பல விஷயங்கள் காத்திருக்கின்றன.அடுத்து வர இருக்கிறார், கண்டக்டராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி, சினிமாவில் ஆட்டோக்காரன், பால்காரன், தாதா போன்ற வேடங்களில் நடித்த உங்கள் நண்பர்... அவரையும் சமாளிக்க வேண்டும்!
முடியுமா உங்களால்... பொறுத்திருந்து பார்ப்போம் நாங்கள்!

வீ.சீனிவாசன், சமூக நல விரும்பிமைலாப்பூர், சென்னை.

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT .‘Officers Knew Rule When They Opted For Scheme’

Recovery of commutation: Ex-forest officials move CAT . ‘Officers Knew Rule When They Opted For Scheme’ SagarKumar.Mutha@timesofindia.com 29...