ஓய்வு என்கிற பெயரில் வீட்டுப் பெரியவர்களை கூண்டில் அடைக்கிறோமா நாம்? மனநல ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்!
By மாலதி சுவாமிநாதன் | Published on : 16th February 2018 04:10 PM |
தினந்தோறும் வாழ்வில் அர்த்தம் செய்து கொண்டு, மற்றவர்களுக்கும் நம்மால் பிரயோஜனம் உண்டு என்று இருந்தாலே வயதானாலும், உடல், மன நலம் கூடி இருக்கும்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வயதானவர்கள் பலவற்றை செய்வதைப் பார்க்கிறோம். பலர், தினம் வாக்கிங் போவது, பூங்காவில் சந்தித்து, குழுவாக பேசிக் கொள்வது, கச்சேரிக்குப் போவது, ட்யூஷன் எடுப்பது என்று இருப்பார்கள். இன்னும் சிலர் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது, பள்ளிக்குக் கூட்டி செல்வதும் உண்டு. பூத்தொடுத்து விற்பது, மீன், முட்டை, கீரை, காய்-கனிகள் விற்பது என்று தொழில் செய்வோர்களையும் பார்க்கிறோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மோர் விற்கும் தாத்தா மிகப் பிரபலமானவர்!
இவர்களைப் போல் இல்லாமல், துவண்டு போய், ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ இருக்கும், அல்லது நாள் முழுவதும் டிவி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் வயதானவர்களும் உண்டு.
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை, நாம் மிக அக்கறையாக பார்த்துக் கொள்ள எண்ணுவோம். அதனால் அவர்களை எதையும் செய்ய விடமாட்டோம், சிரமப் படுவார்களோ, அல்ல தடுமாறி, விழுந்து விடுவார்களோ என்ற பயத்தினால் நாமே எல்லாவற்றையும் செய்து விடுவோம். நாம் வயதானவரை வேலை வாங்குகிறோம் என்று யாரேனும் எண்ணி விடுவார்களோ என்று கூட அஞ்சிச் செய்வோம்.
பார்த்துக் கொள்வது நல்லது தான். ஆனால், கூண்டில் அடைத்த பறவை போல் அல்ல. அவர்களும், முடிந்த அளவிற்கு தன் வேலையை சுயமாக செய்யலாம், வீட்டிலும் எதிலாவது தன் பங்கிற்கு உதவி செய்யலாம். அப்போது, தன்னாலும் உபயோகம் உண்டு என்பதை உணருவதே அவர்களின் நலனை மேம்படுத்தும். ஆனால், வற்புறுத்திச் செய்ய வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எதைச் செய்வது என்று அவர்கள் சொந்தமாக முடிவெடுத்தால் நன்மை உண்டாக்கும். அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதும் ஒரு விதமாகும்.
நாற்பது வருடத்திற்கு முன்னால், வெளி நாட்டில், தேர்ந்தெடுத்த சில முதியோர் இல்லங்களில் இதைப் பற்றின ஆராய்ச்சி செய்தார்கள். அங்குள்ளவர்களில் சிலருக்கு பூந்தொட்டி கொடுத்து அதைப் பாதுகாக்கும் பணி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களின் தீர்மானத்திற்கே விட்டு விட்டார்கள். தண்ணீர் விடுவது, காய்ந்த இலைகளை அகற்றுவது அவர்களாகப் பார்த்துச் செய்தார்கள் . ஆராய்ச்சி செய்வோர் என்ன கவனித்தார்கள் என்றால், செடியை ஈடுபாட்டுடன் கவனித்த முதியோரின் உடல் நலன் நன்றாகத் தேறி வந்தது. அவர்களின் ஞாபகத் திறன், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன்களிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது .
அர்த்தமுள்ள செயலை செய்வதால், அதிலும் சொந்தமாக தேர்ந்தெடுப்பு இருந்து விட்டால், அதற்கு நம் உடலைச் சீர் செய்யும் சக்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில், அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் நம் அரசாங்க கணிப்பின் படி 8.6% உள்ளார்கள். இவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம் .
ஆரோக்கியம் என்றால் என்ன? உலகளவில், WHO-வின் (வர்ல்ட் ஹெல்த் ஆர்க்கனைஸேஷன்) ஆரோக்கியத்தின் வர்ணனையையே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் படி, ஆரோக்கியம் என்றால் “நோய் இல்லாததும், நலிந்த, தளர்ந்த நிலை இல்லாதிருப்பதை மட்டும் குறிப்பது அல்ல; உடல், மனம், சமூக தொடர்பு நலன் எல்லாம் உட்கொண்டுள்ளது”. உடல்/மனம்/சமூக தொடர் நலனில், ஏதாவது ஒன்றில் ஏற்றத்தாழ்வு நேர்ந்து விட்டால், நலன் தடுமாறிவிடக்கூடும்.
எதையும் செய்யாமல் இருந்தால், தன் தேவைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்தால், மற்றவர்களே முடிவுகளை எடுத்தால், இல்லை தனிமைப்பட்டு இருந்தால், இவற்றினாலேயே நலன் கெடும். அதற்காகத்தான் நம் கலாச்சாரத்தில் பெரியவர்களுடன் கலந்து ஆலோசிப்பது, முக்கியமான காரியங்களில் அவர்களுக்குப் பங்களிப்பு என்று அமைந்து இருக்கின்றது. இப்படிச் செய்து வருகையில், அவர்கள் இருப்பதற்கு அர்த்தம் இருக்கிறது என்பதைச் செயல் மூலம் காட்டுகிறோம்.
அதே நேரத்தில் ஒரு சிலருக்கு ஞாபக மறதி, பக்கவாதம், பார்க்கின்ஸன்ஸ், டிமென்ஷியா, மனச்சோர்வு என இருக்கலாம். இதற்கு மாத்திரை மருந்து அவசியமே. அத்துடன் சிறிதளவு சுறுசுறுப்பைச் சேர்த்துக் கொண்டால் நலனைக் கூடுதலாக்கும்.
எந்த வயதினரையும் உடலையும், மூளையையும் ஆக்டிவாக வைத்துக் கொள்ளவே டாக்டர் பரிந்துரைப்பார்கள். தினம் ஏதாவது ஒன்று செய்வது என்றும், வெவ்வேறு விதமாக வைத்துக் கொண்டால், ஆவலுடன் செய்யத் தோன்றும். எந்த அளவு முடிகிறதோ அந்த அளவிற்கு மட்டும் செய்து வந்தால், தொடர்ந்து செய்யலாம்.
சிலருக்கு, முன் போல், செய்ய முடியாததாலோ, அடுத்தவர்கள் செய்து கொடுப்பதினாலோ தயக்கமும் தடுமாற்றமும் வரலாம். மற்றவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றும் சிலர் மௌனமாக, ஊமையாக இருப்பார்கள்.
இப்படி எந்த மனப்பாங்குடன் இருந்தாலும் அவர்களின் நலனை உயர்த்திக் கூடுதலாக்கச் செய்யலாம். செய்யக் கூடிய பல வகைகளை வரிசைப் படுத்த போகிறேன். இதில், எதைத் தேர்ந்தெடுத்தாலும் வயதினரின் உடல் நலனை மனதில் வைத்தே தேர்வு செய்ய வேண்டும்.
I. ஒரே இடத்தில், படுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
- வீட்டுக் குழுந்தைகளுக்கோ , பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கோ சில பாடங்களை படிக்கும்போது, செய்யும்போது கவனிக்கலாம் . உதாரணத்திற்குக் கணக்கு வாய்ப்பாடு, கவிதை மனப்பாடம் செய்வதை, க்ராப்ஃட் செய்வதை என்று.
- தினசரி நாளிதழ்களை வாசிப்பது: அவர்கள் அருகில் உட்கார்ந்து, வாய் விட்டுப் படிக்கலாம்.
- கதை, கவிதை, கட்டுரைகள் படிக்கலாம்.
- அவர்களுடன் பாட்டு கேட்கலாம், பாடலாம்.
- வார்த்தை, பாடல் அந்தாக்க்ஷரி விளையாடலாம்
- அவர்களுடன் சுடோகு (Sudoku), க்ராஸ்வர்ட் (crossword) போடலாம்.
- பல்லாங்குழி, தாயக் கட்டை, லுடோ விளையாடலாம்.
அவர்களையும் சேர்த்துக்.கொண்டு செய்வது என்பது பாசம் காண்பித்து, அவர்கள் உயிர் வாழ்வதை நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும். இதனால், அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
II.அவர்களுக்கு, நாம் தெரிவிப்பது, “உங்களின் இடம், என் வாழ்க்கையில்..
- ஆலோசிக்க, பகிர்ந்துகொள்ள, முடிவுகள் எடுப்பதில்.
- அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் உள்ளது என்பதைக் காட்டுவது முக்கியம்: நம்முள் ஒருவராகக் கருதுகிறோம் என்பதைக் காட்ட, நம் நண்பர்களை அறிமுகம் செய்வது, விருந்தாளிகளுடன் கலந்து கொள்வது.
நடந்து கொள்ளும் முறை முக்கியமானது. பெரியவர்களுடன் வாழும் நபர்களே இதை வார்த்தைகளாலும், செயலாகவும் காட்டலாம்.
III. ஒதுக்கி வைத்து விடுவதலின் காரணங்கள்
- தினசரி வாழ்வில் இடைஞ்சல் என்று கருதி ஒதுக்கி வைப்பது.
- பாரம் என்று கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது
- மறதி இருப்பதால்
- நலன் குறைந்ததால்
இவர்களின் நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று
யோசிக்காமல், மிக எளிதாக எதிர்மறை முடிவெடுப்பது.
தீர்வு: டாக்டரை சந்தித்து ஆலோசித்து மேற்கொண்டு எப்படிப் பார்த்துக் கொள்வது என்ற தெளிவு பெறலாம்.
யோசிக்காமல், மிக எளிதாக எதிர்மறை முடிவெடுப்பது.
தீர்வு: டாக்டரை சந்தித்து ஆலோசித்து மேற்கொண்டு எப்படிப் பார்த்துக் கொள்வது என்ற தெளிவு பெறலாம்.
IV. பெரியோர்கள்
வீட்டில், பக்கத்தில் இருக்கும் ஸ்கூல், மருத்துவ மனை, கோயில்களில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம்.
நலன் இருப்பதைப் பொருத்து, முடிந்த அளவில் தன்னுடைய திறன்களைப் பகிர்ந்து கொண்டால், மேலே குறித்த மூன்று நலன்களும் நன்றாக இருக்கச் செய்யும்.
நலன் இருப்பதைப் பொருத்து, முடிந்த அளவில் தன்னுடைய திறன்களைப் பகிர்ந்து கொண்டால், மேலே குறித்த மூன்று நலன்களும் நன்றாக இருக்கச் செய்யும்.
- தன் பேரக்குழந்தைக்கோ, மற்ற குழந்தைகளுக்கு கற்றுத் தருவது
- பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் கதை சொல்லலாம் (கலாச்சாரம், வீரர்கள் பற்றி, சாதனையாளர்கள்…)
- கண் பார்வை இல்லாதவர்களுக்கு எழுதி உதவுவது
- பாடங்களை விளக்கிச் சொல்வது .
- பாடங்களைப் கேஸட்டுகளில், பதிவு செய்தல்
- ஹாஸ்டல், அனாதை விடுதி பிள்ளைகளுக்குப் பாடம், பாட்டு, நடனம் கற்பிப்பது.
- பூக்களைத் தொடுப்பது
- பூச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது.
- துணிகளை மடிப்பது
- குடும்பத்தினருடன் வேலையைச் செய்வது: சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைப்பது.
- எப்பொழுது சாப்பிட விரும்புகிறார்கள் என்பதின் முடிவை அவர்களிடமே விட்டு விடலாம்.
- அவர்கள் அணியும் ஆடையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது.
- டிவி பார்ப்பதா? இல்லையா என்பதையும். நாம் பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
V. “ரிட்டையர்மென்ட் கம்யூனிடி ” ஓய்வு பெற்றவர்கள் இருப்பிடம்
சமீப காலங்களில், வயதானவர்கள் இருப்பிடமாக இது அமைந்து வருகிறது. இந்த இல்லங்களிலும் தங்குவோரின் வாழ்விற்கு அர்த்தம் தர பலவற்றைச் செய்து வரலாம். அன்றாடம் ஏதாவது ஒன்றைக் குறிக்கோளுடன் செய்வதால் அவர்களின் நலன் மேலோங்கும்.
ரிட்டையர்மென்ட் கம்யூனிடியில் வாழலாம் என்று முடிவெடுப்பது பெரியோர்களே. தங்கள் பிள்ளைகளுக்கு பாரம் இல்லாமல் இருக்கவும், அதே சமயம், தங்களுக்குத் தேவைப்படும் வசதிகளுடன் இடமாக இருப்பதால் இதைத் தேர்வு செய்கிறார்கள். பெற்றோர் தங்களின் முடிவினால் அங்குச் சேர்வதால் பெற்றோர்-பிள்ளைகள் இருவருக்கும், குற்ற மனப்பான்மை இல்லாமல் இருக்கும்.
மொத்தத்தில், வயதானவர்களிடம் பல சொத்துக்கள் உண்டு. அனுபவம் என்ற மிகப் பெரிய சொத்து. வேறொன்று அறிவும், அவர்களிடம் இருக்கும் பல திறன்கள். இதை எல்லாமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், புரிய வைக்கலாம், வாதாடலாம். இதில் எதைச் செய்து வந்தாலும் அவர்களின் நலன் கூடும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எதற்காக வயதானால், பாரம், அல்லது முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து?
மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
No comments:
Post a Comment