Thursday, March 1, 2018


கிலியூட்டும் சங்கிலித் திருடன்

By ஆர். நடராஜ் | Published on : 01st March 2018 01:31 AM

| நெரிசலான பஸ் பயணம் அல்லது திருவிழா காலங்களில் திரளும் கூட்டம், நாளும் கிழமைகளிலும் கோயில்களுக்குச் செல்லும் பெண்கள் இவர்களைக் குறி வைத்து திருடர்கள் கூட்டத்தோடு கலந்து செயின் பறிப்பது அல்லது மணி பர்ஸ் திருடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் செயின் பறிப்பதே தெரியாமல் லாகவமாக கழட்டுவார்கள். கூட்டங்களில் திருடுவது ஒருவகை. பின்பு சைக்கிளில் சென்று நடந்து செல்லும் பெண்களிடமிருந்து செயின் பறிப்பு நடக்கும். அது ஒரு கால கட்டம்.

அடுத்து மோட்டார் சைக்கிள் புழங்க ஆரம்பித்தவுடன் அதில் வந்து திருடும் கும்பல் பெருகியது. இப்போது அதி நவீன வேகமாக செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் வந்துவிட்டன. அதில் சில வண்டிகளில் பின்னால் இருக்கை உயரமாக இருக்கும். அதில் உடகார்ந்து செயின் பறிப்பது சுலபம். ஹெல்மட் அணிந்திருப்பார்கள் தங்கள் முகம் தெரு கண்காணிப்பு கேமராக்களில் பதியாமல் இருக்க.

ஒரு சுற்று கிளம்பினார்கள் என்றால், ஒரு மணி நேரத்தில் பல இடங்களில் திருடிவிட்டு மறைந்துவிடுவார்கள். குறைந்தது ஒரு சவரனாவது ஒரு செயினில் கிடைக்கும். பத்து இடத்தில் நிச்சயமாக பத்து சவரன். இன்றைய விலைக்கு சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம். நடந்த குற்றங்களில் பாதி வழக்குகள் காவல் நிலையத்திற்கே வராது. பாதிக்கப்பட்டவர் மனு கொடுத்தாலும் எவ்வளவு பதிவாகிறது என்பது கேள்விக்குறி!

செயின் பறிப்பு என்னும் கொடுங்குற்றம் காவல்துறைக்கு எந்த காலகட்டத்திலும் ஒரு சவாலான நிகழ்வு. மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத வேளை அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் செயின் பறிப்பு குற்றங்கள் நிகழும். ஆனால் இப்போது நேரம் பொழுது என்றில்லாமல் எப்போதும் நிகழலாம் என்பது காவல்துறையை திணற அடிக்கும் நேர்வு.
நாடு பல விதத்தில் முன்னேறுவது போல் குற்றவாளிகளும் நவீன யுக்திகளை கையாள்கிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். ஓரிரு தினம் கைவரிசையை காட்டிவிட்டு விமானத்தில் சென்றுவிடுகின்றனர்.

சென்னையில் தங்குவதும் சௌகரியமான நட்சத்திர ஹோட்டலில். இத்தகைய ஹைடெக் குற்றவாளிகளுக்கு கடிவாளம் போடுவது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது போல் என்றால் மிகை ஆகாது.
செயின் பறிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையா அல்லது குற்றப்பிரிவு கவனிக்க வேண்டியதா என்பதில் எப்போதும் காவல் நிலைய அளவில் அதிகாரிகளிடையே வேறுபட்ட கருத்து இருக்கும். குற்றப்பிரிவுதான் கவனிக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் ஒதுங்கிவிடுவார்கள். எல்லா பிரச்னையும் வாகனம், ஆட்கள் குறைவாக உள்ள குற்றப்பிரிவு தலையில்தான் விடியும்! சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இந்நிலையில்தான் உயர் அதிகாரிகள் தலையிட்டு, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துவதில் எல்லோரையும் இணைக்க வேண்டும்.

ஒரு திரைப்படத்தில் வடிவேலு, 'நானும் ஒரு ரெளடி, என்ன கைது பண்ணி விலங்கு மாட்டி எடுத்துட்டு போங்கய்யா; கைது பண்ணலேனா ஊர்ல என்ன யாரும் மதிக்க மாட்டாங்கய்யா' என்று கெஞ்சுவார்.

இது நகைச்சுவைக் காட்சி என்றாலும் அதில் அர்த்தமுள்ளது, நிதர்சன உண்மைகள் உள்ளன. ரெளடி என்று ஒருவனுக்கு அங்கீகாரம் கொடுப்பதே காவல்துறைதான். வட்டாரத்தில் சேட்டை செய்பவனை கண்காணிக்க வேண்டும், எச்சரிக்கை செய்ய வேண்டும். சேட்டை அதிகமானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது நடவடிக்கை எடுத்தால் சிறைக்குச் சென்று வந்தவுடன் ரௌடியை கண்டு மற்றவர் ஒதுங்குவார்கள். அதை அவன் தனக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, தன்னைச் சுற்றி ஒரு கும்பலை வைத்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடத் துவங்குகிறான். இவ்வாறு ஒரு கொம்பு சீவிய ரெளடி உருவாகுகிறான்.

எங்கு பணம் புரளுகிறதோ அங்கு ரெளடிகள் ஆஜர். ரியல் எஸ்டேட், வீட்டு மனை வியாபாரத் தொழில், தொழிலாளர்கள் அதிகமாக உள்ள தொழிற்சாலைகள், வியாபார மையங்கள் இவை ரௌடிகள் தங்கள் கைவரிசை காட்ட உகந்த இடங்கள். நில அபகரிப்பு, அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்வது, குடித்தனக்காரர்கள், குத்தகைக்காரர்களை அச்சுறுத்தி காலி செய்ய வைப்பது போன்ற சட்ட விரோத 'கட்டப்பஞ்சாயத்து', வன்முறையில் இறங்கி பணம் ஈட்டி தனது பலத்தை நிரூபிக்கும் ரொளடிகள் இருக்கிறார்கள். காவல் துறையில் சிலர், மற்றும் தரம் கெட்ட அரசியல்வாதிகள் இணக்கமாக இருப்பது ரௌடிகள் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

'அண்ணன் உங்க வீட்ட வாங்கணும்னு சொல்றாரு, வித்துடுங்க' என்ற அன்பு மிரட்டலுக்கு பயந்து கைமாறிய வீட்டு மனைகள் பல.
கோடிகள் விலையில் வீடுகள் அல்லது விலை உயர்ந்த வாகனங்கள் வாங்கினால் அதற்கு ரொளடி மாமூல் வாங்க வந்துவிடுவார்கள். வீடு கட்ட மணல் செங்கல் அடுக்கினால் மாமூல் வாங்க வந்துவிடுவார்கள். ஒரு ஃப்ளாட்டுக்கு அதன் விஸ்தீரணத்திற்கு ஏற்றவாறு பாதுகாப்பு பணம்!
மும்பை, தில்லி போன்ற நகரங்களில் ரொளடி மாமூல் அதிகம், சென்னையில் கொஞ்சம் குறைவு, மற்றபடி செய்யும் தொழிலுக்கு வஞ்சகம் இல்லாது வசூல்! கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்குப் பல இடைஞ்சல்கள். இத்தகைய சட்ட விரோத 'வரிகள்' மீண்டும் வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்தப்படும். மக்கள்தான் சகித்துக் கொள்ள வேண்டும்.

இம்மாதிரி உருவாகும் ரெளடிகளை தரம் பிரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை உஷாராக செயல்பட வேண்டும். கொஞ்சம் தவறவிட்டாலும், நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டாலும் காளான்கள் தோன்றுவதுபோல் ரொளடி கும்பல் ஆங்காங்கே முளைத்துவிடும். கூடிக் குலாவி கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். நல்ல வேளை, சென்னை காவல் சுதாரித்து கொண்டு பூந்தமல்லியில் ரொளடி கும்பலை சுற்றி வளைத்தது. பலரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது அமைதியை காப்பதில் காவல் துறை பல கோணங்களில் யோசித்து, வரும் தகவல்களை ஆராய்ந்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது அமைதி மூன்று வகையாகப் பிரித்து ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கியுள்ளது. ஒரே மையமுள்ள மூன்று வட்டங்களாக பிரித்தால், வெளிவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அடங்கும்; அடுத்த உள்வட்டத்தில் பொது அமைதியும், மையத்தில் உள்ள வட்டம் தேசிய பாதுகாப்பு வளையத்தைக் குறிக்கும்.

சாதாரண வட்டார வழக்குகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பொது அமைதி பாதிக்கும் வளையத்திற்குள் வராது.

ஒரு குற்ற நிகழ்வு பரவலாக பீதியை கிளப்பும் வகையில் அமைந்தால், ஒருவரது சட்டத்தை மீறிய செயல் பலரிடம் அச்சம் ஏற்படும் நிலையை உண்டாக்கினால் பொது அமைதி பாதிக்கப்பட்டது என்று எதிரி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு உட்படாது. தேசத்திற்கு விரோதமான செயல்கள் புரிவது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்றவை தேசவிரோத சட்டத்திற்கு உட்படும். அத்தகைய குற்றங்கள், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் . இவ்வாறு பொது அமைதி என்பதை மூன்று வகையாகப் பிரித்து உச்ச நீதிமன்ற நீதிபதி இதாயத்துல்லா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இதன் அடிப்படையில்தான் போக்கிரிகளின் கொட்டத்தை அடக்க காவல் துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புனையப்பட்ட வழக்குகள் மேற்சொன்ன விதிகளுக்கு உட்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் அடிபட்டுப்போகும். எடுத்த முயற்சிகள் வீணாகும்.
முன்பெல்லாம் போக்கிரிகளை அடக்க 'காவல்துறை பாணியில் நன்கு கவனித்து', கடை வீதி வழியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் விலங்கிட்டு அவன் கூனிக் குறுக நடத்தி அழைத்து செல்வார்கள். அதுவே போக்கிரியின் தலைச்செருக்கை உடைக்கும். தலை தொங்க அவன் செல்வதைப் பார்த்து மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை பிறக்கும்.

ஆனால் இப்போது நவீன காவல் வாகனங்களில் கமுக்கமாக அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். கைது செய்ததே யாருக்கும் தெரிவதில்லை. அவனும் ஏதோ ரிசார்ட்டுக்கு சென்று வந்ததுபோல சிறையில் இருந்து வெளியில் வந்து தனது மாமூல் ரெளடி பயணத்தை தொடர்கிறான்.

ஒரு நிர்பயா போன்ற பயங்கரம் நிகழ இருந்தது; சென்னையின் நல்ல காலம் லாவண்யா பிழைத்துக்கொண்டாள். புறநகர் காவல் ரோந்து சிரமமானது. அதிகமான கனரக வாகனங்கள், ஆறுவழி சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறைவான வெளிச்சம், இந்த சூழலில் வேவு பார்ப்பது கடினம்.
வழிப்பறிக் கொள்ளை 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் 1680 வழக்குகள், செயின் பறிப்பு 1799 வழக்குகள் பதிவாகின. 2017-இல் சிறிது அதிகமாகி, முறையே 1850, 2051 வழக்குகள்.

செயின் பறிப்பும் வழிப்பறியும் ரௌடிகளின் கைவரிசையாகவே கொள்ள வேண்டும். இதில் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும் முக்கிய பொறுப்பு. இரு சக்கர வாகனங்களில் வந்து செயின் பறிப்பு நிகழ்வதால் போக்குவரத்து போலீஸ் உடனடியாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறையில் எப்போதும் காவலர் பற்றாக்குறை பெரிய பிரச்னை. பிற பணிகளில் காவலர்கள் அனுப்பப்படுவதும் முக்கிய காரணம்.
மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட உயர்நிலை ஆய்வில், ஒப்பளிக்கப்பட்ட 40,000 காவலர்களில் 16,000 பேர் முக்கிய நபர் பாதுகாப்பு மற்றும் இதர பணிகளில் விரையமாகி, காவல் நிலைய ஷிப்ட் பணிக்கு 12,000 காவலர்கள்தான் தேறுகிறார்கள் என்ற நிலை தெரியவந்தது. அதாவது 30% காவலர்களை வைத்துதான் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்ற நிலை சென்னைக்கும் பொருந்தும். இது யானைக்கு சோளப்பொரி தீனி போல்!

அநாவசியப் பணிகளைக் களைந்து, தேவையின்றி முக்கிய நபர்கள் பாதுகாப்பில் காவலர்களை ஓரிடத்தில் குவிப்பதை தவிர்த்து, இருப்பதை வைத்து பரிமளிக்கச் செய்து, செயின் பறிப்பு போன்ற குற்றங்களைத் தடுப்பதில்தான் தனி ஆளுமை இருக்கிறது.
அதுதான் ஸ்மார்ட் போலீஸுக்கு இலக்கணம்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...