Friday, March 2, 2018

ஏப்ரல் மாதத்தோடு முடிகிறது ‘ஏர்செல் கதை’ : ட்ராய் முடிவு

Published : 01 Mar 2018 21:13 IST

சென்னை,



ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் மற்றும் டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாற டிராய் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும்போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், மக்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்கியது. இதனால், தொலைத்தொடர்பு சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றது.

கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனத்துக்கு 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன.

இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது. இந்த போட்டியை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து நாட்டின் யுனிநார் நிறுவனம், டாடா நிறுவனம, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை சேவைகளை நிறுத்தி மற்ற நிறுவனங்களுடன் இணைத்துவிட்டன.

ஜியோ, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களின் சலுகை விலையில் டேட்டாக்கள் , இலவச டாக்டைம், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி வரை டேட்டாக்கள் போன்ற சலுகைகளால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து படிப்படியாக விலகி வேறு நிறுவனங்களை நாடினர்.

அதேசமயம், ஏர்செல் நிறுவனத்தின் சேவையிலும், சிக்னல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையிலும் வாடிக்கையாளர்கள் எம்.என்.பி சேவை மூலம் வேறு நிறுவனங்களுக்கு மாறினார்கள்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அழைப்புகளும் செல்லவில்லை, யாருடைய அழைப்புகளையும் ஏற்கவும் முடியவில்லை.

அவசரமான சூழலுக்கு கூட யாரிடமும் தகவல் தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், ஏர்செல் நிறுவனத்தின் 9 ஆயிரம் டவர்களில் 7 ஆயிரம் டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த சிக்னல் குறைபாட்டால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை காரணம் காட்டி எம்என்பி மூலம் வேறு நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களால் மாற முடியவில்லை.

இதனால்,நீண்ட காலமாக வைத்திருந்த செல்போன் எண்ணை மாற்றிவிட்டு புதிய எண்ணை வேறு நிறுவனத்தில் இருந்து பெறுவதா, அல்லது, பொறுமையாக இருந்து எம்என்பி மூலம் மாறுவதா என வாடிக்கையாளர்கள் குழம்பினர்.

மேலும், வங்கி பரிவர்த்தனை, வியாபார தொடர்புகளுக்கும் நீண்டகாலமாக ஏர்செல் எண்ணை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களும் பெரிய சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் நாளை மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்தார்.

இதற்கிடையே தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்தது.

ஏர்செல் நிறுவனத்துக்கு ஏறக்குறைய ரூ.15,500 கோடி கடன் இருப்பதால், அதை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தீர்ப்பாயத்தை அணுகியது.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி வடமாநிலங்களான குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்(மேற்கு) ஆகிய பகுதிகளில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

ஆந்திரபிரதேசம், அசாம், பிஹார், டெல்லி, ஜம்மு காஷ்மீர், தமிழகம், கர்நாடகம், கேரளா, மும்பை, வடகிழக்கு மாநிலம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆிகய மாநிலங்களில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு செயல்போஸ்ட் பெய்ட், ப்ரீ பெய்ட் சேவை அளித்து வந்தது. இனிமேல், இந்த வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திவால் மனுத் தாக்கல் செய்துள்ளதால், ஏர்செல் நிறுவனத்தின் சேவை விரைவில் முடிவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் சேவையை மாற்றிக்கொள்ளும் படியும், அதற்கு ஏர்செல் நிறுவனம் உதவ வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அடுத்த சேவையை மாற்றித் தரவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் டிராய் அறிவித்துள்ளது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை மாற்ற எம்என்பி கோட் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்பினால் போதுமானது.

அந்த எண்ணுடன் உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் எண்ணின் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15க்குப் பிறகு இந்த சேவையை பெற இயலாது.

சென்னை வட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஐவிஆர் எண், 9841012345க்கு தொடர்பு கொள்ள வேண்டும். அதில் தங்களுக்கு தேவையான மொழியைத் தேர்வு செய்து, நிறுவனத்தின் பெயரையும் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களின் 10இலக்க எண்ணை டைப் செய்து அனுப்பினால், யுபிசி கோட் எண் கிடைக்கும். இதை வைத்து மற்ற நெட்வொர் சிம்கார்டு வாங்கிட முடியும்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...