Tuesday, March 6, 2018

கலங்கி நின்ற நீதிமன்றம்!

Published : 05 Mar 2018 10:27 IST

அ.அருள்மொழி





நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனைப் பற்றி சில செய்திகள்தான் நமக்குத் தெரியும். அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நிகழ்வுகள் பல உண்டு. அதில் ஒன்று இந்தச் சம்பவம். குற்றவியல் வழக்குகளில் ஆட்கொணர்வு மனுக்களை விசாரணைசெய்யும் பொறுப்பில் ரத்தினவேல் பாண்டியன் இருந்தபோது நடந்த ஒரு வழக்கு பற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவர் சொன்ன நேரடி அனுபவச் செய்தி இது.

ஒரு பெண், தனது கணவரைவிட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் திருநெல்வேலியில் வசித்துவந்தார். தன் குழந்தைகளைத் தனது மனைவி கடத்திச் சென்று விட்டார் என்று கூறி அந்தப் பெண்ணின் கணவர் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல்செய்தார்.

குழந்தைகளை நீதிமன்றத்துக்கு அழைத்துவர அப்பெண்ணுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இரண்டு முறையும் நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட அந்தப் பெண் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து, அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருமாறு அந்த ஊர்க் காவல் துறை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த நாளில் குழந்தைகளோடு அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்தியது காவல் துறை. நீதிபதிகள் பொதுவாக தங்கள் கேள்விகளை அரசு வழக்கறிஞரிடம்தான் கேட்பார்கள். அவர்கள்தான் அந்த நபர்களிடம் பதிலை வாங்கி நீதிபதியிடம் சொல்வார்கள். தேவைப்படும்போதுதான் நீதிபதிகள் வழக்காடிகளை அருகில் அழைத்துப் பேசுவார்கள்.

இந்த வழக்கு விசாரணை தொடங்கியபோது நீதிமன்றச் சூழல், நடைமுறை ஆகியவற்றால் மிரண்டுபோயிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், கணவருக்குத் தெரியாமல் குழந்தைகளை ஊருக்கு அழைத்துப்போனது ஏன் என்று கேட்டார். அப்போது, தனது கணவர் செய்த கொடுமைகளைச் சொன்ன அந்தப் பெண், “அவரிடமிருந்து தப்பி, பத்திரமாக இருந்து குழந்தைகளைக் காப்பாற்றத்தான் அழைத்துச் சென்றேன்” என்று சொல்லி அழுதார்.

நீதியரசர் அந்தப் பெண்ணை தன் முன்னால் அழைத்து நேரடியாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

“சரிம்மா, நீதிமன்றத்திலிருந்து இரண்டு முறை நோட்டீஸ் வந்ததா?”

“வந்ததுங்க அய்யா”

“நோட்டீஸ் வந்தும் நீ ஏன் நீதிமன்றத்துக்கு வரவில்லை?”

“வண்டிக்குக் குடுக்க காசில்லை அய்யா”

“சரி, இப்ப எப்படி வந்தாய்?”

“போலீசு வண்டில கூட்டிட்டு வந்தாங்க அய்யா”

நீதிமன்றம் நிசப்தமானது.

“எப்படித் திரும்பி ஊருக்கு போவாய்?”

“தெரியல அய்யா. போலீசு வண்டியிலேயே கொண்டுவந்து விடச் சொல்லுங்கய்யா”

மீண்டும் ஒரு துயரம்தோய்ந்த இறுக்கம் நீதிமன்றத்தை நிறைத்தது.

அந்தப் பெண்ணை அருகில் அழைத்த நீதியரசர் சொன்னார்:

“நான் தப்பு பண்ணிவிட்டேன் அம்மா. நீ பஸ்சுல போ” என்று சொல்லியபடி தன் பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். “குழந்தைகளுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து அழைத்துப் போம்மா" என்றார்.

உடன் இருந்த நீதியரசரும் தன் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

அந்தப் பெண் கும்பிட்டு நன்றி சொல்ல, வழக்கறிஞர்கள் கண்கலங்கினர். அத்துடன் வழக்கை முடிக்கவில்லை நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன். வழக்கு போட்ட அந்தக் கணவரை அழைத்து, இப்படி உண்மைகளை மறைத்துப் பொய்வழக்கு போட்டு மனைவியையும் குழந்தைகளையும் அலையவிட்டதைக் கடுமையாகக் கண்டித்து, எச்சரிக்கைசெய்து அனுப்பினார்.

வாழ்க்கைப் பாடம் என்பது அனுபவத்தில் விளைவது. அதற்குப் படிப்பு மட்டும் போதாது. பட்டறிவு வேண்டும் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைப் பயணம் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனுடையது.

- அ.அருள்மொழி, வழக்கறிஞர்.

No comments:

Post a Comment

Doctors call for early detection of breast cancer, highlight risk factors

Doctors call for early detection of breast cancer, highlight risk factors Chennai accounts for the highest crude incidence rate of breast ca...