Saturday, March 10, 2018

அதிகரிக்கும் குற்றங்கள்: பெண்களை மதிக்கத் தவறுகிறோமா?

Published : 07 Mar 2018 10:10 IST

பெண்கள் எவ்வாறு மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள் என்பது தான் ஒரு சமூகம் அடைந்திருக்கும் நாகரிக வளர்ச்சி யின் அடையாளம். தமிழகத்தில் சமீபகாலமாக நடந்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், இந்த நிலை தாழ்ந்துகொண்டிருப்பதன் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. கடந்த சில வாரங்களில், பெண்கள் கொலைசெய்யப்படுவது, வல்லுறவு, மிரட்டல், கேலி, வழிப்பறி என்று பெண்களுக்கு எதி ரான எல்லா வகைக் குற்றங்களும் நடக்கின்றன. பெண்ணுரிமைகளைப் பேணுவதில் நாம் எவ்வளவு பின்னடைவைச் சந்தித்து வருகிறோம் என்பதையே இந்தக் குற்றங்கள் காட்டுகின்றன.

சென்னையைச் சேர்ந்த 21 வயதான வித்யா, திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் அமில வீச்சுக்கு ஆளாகி மரணம் அடைந்தார். மதுரையைச் சேர்ந்த 14 வயதுப் பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் அந்த மாணவி உயிரிழந்தார். விழுப்புரம் அருகே வெள்ளம் புத்தூரில் சிறுவன் கொலைசெய்யப்பட்டு, அவனுடைய தாயும் 14 வயதுச் சிறுமியும் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. தென்காசியில் பெண்ணை செல்பேசியில் படம் எடுத்துக் கேலிசெய்ததாக இரண்டு வழக்கறிஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களிலும் செல்பேசிப் பறிப்புச் சம்பவங்களிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சங்கிலிப் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகள், பெண்களின் உயிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் இரக்கமின்றி நடந்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சாலையில் செல்லும் பெண்களின் மீது தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. பணிபுரியும் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போதும் வீட்டுக்குத் திரும்பும்போதும் அச்ச உணர்வோடு சென்று திரும்பு கிறார்கள்.

ஆனால் தமிழக அமைச்சர்கள், இந்தியாவிலேயே சென்னை மாநகரம்தான் அமைதியான நகரம், பாதுகாப்பான நகரம், அதனால்தான் தொழில் நிறுவனங்கள் சென்னையை நோக்கிவருகின்றன என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கிறார்கள்.

சென்னை பாதுகாப்பான நகரம் என்ற நம்பிக்கையோடுதான் தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும், ஏன் மற்ற மாநிலங்களிலிருந்தும்கூடப் பெண்கள் படிக்கவும் பணிபுரியவும் இங்கு வருகிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கை இப்போது சிதறுண்டுபோயிருக்கிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தாமல், நம்பிக்கை வார்த்தைகளால் எந்த சமாதானத்தையும் சொல்லிவிட முடியாது.

தமிழகம் என்பது சென்னை மட்டுமே அல்ல. சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல. நாம் அடைந் திருக்கும் பண்பாட்டு வளர்ச்சியின் கண்ணாடிப் பிரதிபலிப்பு. அரசு இந்தக் குற்றங்களை அலட்சியப்படுத்தக் கூடாது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024