ஆப் முன்னோட்டம்: வருது வருது கும்பல் அரட்டை
Published : 09 Mar 2018 11:13 IST
மிது கார்த்தி
காலையில கண் விழிச்சதும் வாட்ஸ்அப்புல ஒவ்வொரு குரூப்புக்கும் காலை வணக்கம் போட்டதிலிருந்து, நைட்டு குட் நைட் மெசேஜைத் தட்டிவிட்டுட்டு தூங்கப்போற வரைக்கும் வாட்ஸ்அப்போடு வகை வகையா உறவாடும் கணவான்களுக்காக ஓர் இனிமையான அறிவிப்பை வெளியிட்டிருக்கு வாட்ஸ்அப்.
இதுவரைக்கும் தனியா வீடியோ கால் போட்டுப் பேசுன நீங்க, இனி கும்பலா பேசலாம். அதான்பா, ஒரே நேரத்துல பலருக்கும் வீடியோ கால் போடலாம். வீடியோ கான்பரன்சிங் மூலமா ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்கலாம். இதுவல்லவோ, வாட்ஸ்அப் சேவைன்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல சொல்றது எங்களுக்கும் கேக்குது.
விஷயம் என்னான்னா, காலை ஜப்பானில் ஜாக்கிங், மாலை நியூயார்க்கில் டான்ஸிங், இரவில் தாய்லாந்தில் டேட்டிங் என நீங்களும் உங்க ஃபிரென்ட்ஸும் எங்க, எப்படி இருந்தாலும், பேசணும்னு நினைச்சா உங்களையெல்லாம் வீடியோ கான்பரன்சிங் கால் மூலம் ஒரே குடைக்குள்ள கொண்டு வரப்போகுது வாட்ஸ்அப்.
எப்போதிருந்து இந்த சேவையை வாட்ஸ்அப் தொடங்கப் போகுதுன்னு நெட்டுல தேடி அலையாதீங்க. இப்போதான் சோதனை முறையில ‘ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷன்’ முறையில சோதிச்சுக்கிட்டு இருக்காங்க. சோதனை சக்ஸஸ்புல்லா முடிஞ்சா, உங்க ஸ்மார்ட் போன்ல வாட்ஸ்அப் அப்டேட்டுன்னு மெசேஜ் பளிச்சின்னு வரும். அப்போ, சட்டுப்புட்டுனு அப்டேட் பண்ணி உங்க நண்பர்களோடு சேர்ந்து அரட்டையைத் தொடங்குங்க.
ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க. எப்பவும் புதுசா ஒரு விஷயம் வரப்போ, அதே பாணியில இருக்குற பழைய சங்கதிகள அம்போன்னு விட்டுடுறது நம்மளோட பழக்கம் இல்லையா? அதுபோல வாட்ஸ்அப்புல வீடியோ கான்பரன்சிங் வசதி வந்த பிறகு, அதே பாணியில ஏற்கெனவே இருக்குற ஐ.எம்.ஓ., ஸ்கைப் போன்ற செயலிகள பயன்படுத்துறத விட்டுறாதீங்க. ஏன்னா, உலகில அதிக அளவில் பயன்படுத்துற செயலியா வாட்ஸ்அப்தான் முதலிடத்துல இருக்குது. அதனால, வீடியோ கான்பரன்சிங் வசதி வாட்ஸ் அப்புல வந்தா, ஐ.எம்.ஓ., ஸ்கைப் பயன்படுத்துறவங்க எண்ணிக்கை குறைஞ்சிடும்னு ஆருடம் சொல்லியிருக்காங்க. அதனால, எந்தச் செயலியும் ஒரு கட்டத்துல நம்ம கையைவிட்டுப் போகாம இருக்கணும்னா, நீங்கதான் சூதானமா நடந்துக்கோணும்.
அப்புறம் இன்னொரு தகவல், ஃபேஸ்புக் நிறுவனத்தோடு துணை நிறுவனம்தான் இந்த வாட்ஸ்அப்புங்கிற சங்கதி உங்களுக்குத் தெரியுமில்லையா? அதனால, ஃபேஸ்புக்குல இருக்குற மாதிரி விதவிதமான ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப்புலேயும் கொண்டுவரப்போறாங்க. உங்களோட சாட்டிங்கைச் சுவாரசியமா ஆக்குறதுக்காக இந்த ஏற்பாடாம். இந்த வசதியும் முதல்ல ஆண்ட்ராய்ட் போன்கள்லதான் கிடைக்கப்போகுது. ஐ.ஓ.எஸ். (முன்னால ஓ.எஸ். போனுன்னு சொன்னோமே அந்த போன்), விண்டோஸ் போன்கள நீங்க வைச்சிருந்தா, இந்த வசதி கிடைக்கக் கொஞ்ச நாள் வெயிட் பண்ணணும்.
No comments:
Post a Comment