Saturday, March 10, 2018

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தண்ணீர் குடித்த ராகுல் காந்தி: சிங்கப்பூரில் நடந்த ருசிகர சம்பவம்

Published : 09 Mar 2018 20:38 IST



ராகுல் காந்தி: கோப்புப் படம்

சிங்கப்பூர் சென்று இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பார்வையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி, தண்ணீர் குடித்துவிட்டு அமர்ந்த சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூருக்கு 3 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். அங்கு உள்ள லீ குவான் யூ கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அதன்பின் தனியார் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நேற்று கலந்து கொண்டார்.


அப்போது பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் கேள்விகள் கேட்க, அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்து வந்தார். இதனால், கலந்துரையாடல் அமைதியாகச் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பி.கே. பாசு என்ற எழுத்தாளர் ஒரு கேள்வி எழுப்பினார். இவர் ஆசியா ரீபார்ன் எனும் நூலை எழுதியுள்ளார். இந்த நூல் ஒட்டுமொத்த ஆசியப் பொருளாதாரம், அதன் அரசியல் வரலாறு குறித்ததாகும்.

பி.கே.பாசு பேசுகையில், ‘ இந்தியாவில் உங்கள் குடும்பத்தார் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தீர்கள், ஆனால், உங்கள் ஆட்சியில், உலகின் தனிநபர் வருமானத்தின் சராசரியோடு ஒப்பிடும்போது இந்தியாவின் தனிநபர் சராசரி மிகக்குறைவாகவே இருந்தது. ஆனால், உங்கள் குடும்பத்தார் பிரதமர் பதவியில் இருந்து அகன்றபின், நாட்டின் தனிநபர் வருமானத்தின் அளவு, உலக சராசரிக்கு மிக அருகே வேகமாக வந்துவிட்டது அது எப்படி?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்று ராகுல் காந்தியால் தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டுவிட்டு அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து அமர்ந்தார்.

மற்றொரு கேள்வியை பாசு எழுப்பினார். அவர் கேட்கையில், ‘ இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தனிநபர் வருமான மிக மிக குறைவாக இருந்தது. மக்களின் வாழ்நாள் சராசரியும் 32 வயதாக இருந்தது. இது உலக அளவில் மிகவும் குறைவு.ஆப்பிரிக்க நாடுகளில் கூட 38 வயதாக இருந்தது. இந்தியா அப்போது மிகவும் ஏழ்மையான நாடாக இருந்தது. உங்கள் குடும்பத்தாரின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியை வேகமாக அதிகப்படுத்தி, மக்களின் ஆயுள் சராசரியையும், தனிநபர் வருமானத்தின் அளவையும் உலக சராசரிக்கு இணையாக உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால், உங்கள் குடும்பத்தாரின் ஆட்சியில் செய்யவில்லை ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், ராகுல் காந்தி பாசுவிடம் எதிர்கேள்வி எழுப்பினார். ராகுல் பேசுகையில் ‘ நான் கடந்த 2004ம்ஆண்டில் இருந்து இந்திய அரசியலில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறுகிறீர்களா? ஆமாம், என் கொள்ளுத்தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி, என் அப்பா ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி ஏன் உலக சராசரிக்கும் குறைவாக இருந்தது . இந்த கேள்விக்கு என்னால் பதில் கூற முடியவில்லை’ என்று கூறி அமர்ந்தார்.

ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ராகுல் காந்தி பதில் கூறுங்கள், பதில் கூறுங்கள் என்று கூச்சலிட்டனர். அதற்கு ராகுல் காந்தி நான்தான் பதில் கூறிவிட்டேனே என்று கூறி ஒருவிதமான பதற்றத்துடன், இறுக்கமான முகத்துடன் அமர்ந்தார். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரத்துக்கு சலசலப்பு நீடித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024