Tuesday, March 13, 2018

நினைப்பதெல்லாம் மறந்துவிட்டால்…

Published : 12 Mar 2018 10:09 IST

ஜுரி




'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்று ‘ஆனந்த ஜோதி’யில் தேவிகா (அதாவது பி. சுசீலா) பாடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் 'மறக்கத் தெரிந்த மனமே, உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று ஏங்குவோர்தான் நம்மில் அனேகம். திரைப்படங்களும் பாடல் வரிகளும் நினைவில் இருக்கும் அளவுக்கு, தேர்வுக்குப் படித்த மனப்பாடப் பகுதிகள் நினைவில் நிற்பதில்லை. இதற்கு ஒரே காரணம், அவை நல்ல ‘டியூ’னில் பாடப்படவில்லை என்பதல்ல, நமக்கு அதில் ஆழ்ந்த நாட்டமும் அக்கறையும் இல்லை என்பதே.

நினைவாற்றல் போட்டியில் அமெரிக்காவில் நான்கு முறை முதலிடம் பெற்ற நெல்சன் டெல்லிஸ் கூறுகிறார், "நினைவாற்றல் குறைவானவர்கள், நிறைந்தவர்கள் என்று மனிதர்களில் இரு பிரிவினர் கிடையாது; நினைவில் இல்லை என்று கூறுபவர்களும், நினைவிலிருந்து கூறுபவர்களும்தான் இருக்கின்றனர்" என்கிறார். (புரியுதா, ‘மய்ய’மா குழப்பிட்டேனா?)

நினைவாற்றல் பெருக அவர் எளிய சில யோசனைகளைத் தெரிவிக்கிறார்.

கவனம் செலுத்துங்கள்: ஒரு ஆவணத்தைப் படிக்கும்போதோ, விற்பனை தொடர்பாக மேலதிகாரியின் உத்தரவுகளைக் கேட்கும்போதோ, வாடிக்கையாளரின் குறைகளைக் கேட்கும்போதோ அதில் முழுக்கவனமும் செலுத்துங்கள். இந்த ஆவணம் எந்த நாளில் யாருக்காக, யார் தயாரித்தது, முக்கிய அம்சங்கள் என்ன என்று வரிசையாக நினைவில் பதியுங்கள். வாடிக்கையாளர் என்றால் அவருடைய நிறுவனம், பெயர், பதவி ஆகியவற்றை மனதில் எழுதுங்கள். முழுக் கவனமும் இருந்தால் எட்டு விநாடிகள் போதும் இவற்றை மனதில் பதியவைக்க!

காட்சியாகப் பாருங்கள்: நீங்கள் செய்ய வேண்டிய வேலையை காட்சியாக்கிப் பாருங்கள். காட்சியாக விரியும் கற்பனையே செயலாகப் பிறகு எளிதில் மாறிவிடும்.

மூளையில் ஏற்றுங்கள்: உங்கள் மூளை இருக்கிறதே அது நவீன 5 ஜி போனைவிட ஆற்றல் மிக்கது. எத்தனை ஜி.பி. தரவுகளையும் பதிந்துகொள்ளும். நீங்கள் செய்ய வேண்டிய வேலையை அல்லது நினைவில் வைக்க வேண்டியவற்றை வரிசைக்கிரமமாக அது கேட்கும்படி சொல்லிவிடுங்கள். வேலைகளை மறக்காமல் செய்ய முடிவதுடன் வரிசைப்படியும் பிசகின்றி செய்துவிடலாம்.

செல்போன், மூக்குக் கண்ணாடி, பைக் சாவி, ஹெல்மட், பர்ஸ் ஆகியவற்றை தினமும் ஒரே இடத்தில் வைப்பது - எடுப்பது (சேட்டுக் கடையில் அல்ல) என்று தொடர்ச்சியாகச் செய்யுங்கள். புறப்படும்போது பேசிக்கொண்டோ, எதையாவது நினைத்துக் கொண்டோ இயந்திர கதியில் இவற்றை எடுத்தால் மறப்பதற்கும் தொலைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அந்த சில விநாடிகள் அந்தந்த பொருட்களைக் கண்ணால் பார்த்து அதை எடுத்துக் கொண்டுவிட்டோம் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நடுவழியில் அலற வேண்டிய அவசியம் இருக்காது.

மறதி மறதி என்று கூறாதீர்கள்: 'எனக்கு நினைவாற்றல் குறைவு, எதையும் மறந்துவிடுவேன்' என்று எந்த வயதிலும் நினைக்காதீர்கள். 'நான் மறக்க மாட்டேன்' என்று மனதுக்குள் சிலமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.

புதிதாகச் செய்யுங்கள்: மறதி அதிகமாக இருப்பதாக நினைப்பவர்கள் புதிதாக ஒன்றைப் படிக்கவோ, செய்யவோ கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் மூளையைப் புதுப்பித்து நினைவாற்றலை வளர்க்கும். கார் ஓட்டுவது, நீச்சல் பழகுவது, சைக்கிள் ரிப்பேர் செய்வது, புது மொழியைப் படிப்பது என்று முற்பட்டால் வெற்றி நிச்சயம். நாற்பது, ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் படித்தால் நினைவாற்றல் பெருகி பட்டம்கூட வாங்கிவிடலாம்.

அமைதி அவசியம்: எதையாவது புதிதாகப் படித்தால் அல்லது செய்முறையாகக் கற்றுக்கொண்டால் சில நிமிடங்கள் அமைதியாக இருந்து மனதில் அதை அசைபோடவும். பிறகு மறக்காது.

உடற்பயிற்சி நல்லது: தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து நினைவாற்றல் வலுப்படும். சுகாதாரமான உணவும் அவசியம். மதுபானம், புகையிலை மற்றும் இதர லாகிரி வஸ்துகள் நினைவிழப்பையே அதிகப்படுத்தும். தவிர்ப்பது நல்லது!

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024