Monday, September 17, 2018

'ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது' : கவர்னருக்கு 14 பேர் குடும்பத்தினர் மனு

Added : செப் 16, 2018 23:02

சென்னை; 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, இ - மெயில் வாயிலாக, மனு அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்; இவர், 1991 மே, 21ல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, விடுதலை புலிகளின் தற்கொலை படையினரால், கொடூரமாக கொல்லப்பட்டார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 14 பேர் பலியாகினர்.இந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஏழு பேரை விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, தமிழக அரசுபரிந்துரை அனுப்பியுள்ளது.இந்நிலையில், 'ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது' என, அவருடன் பலியான, 14 பேர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'

நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்த ஏழு பேரையும் விடுதலை செய்தால், அது, தவறான முன் உதாரணம் ஆகிவிடும். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவுடன், எங்கள் உறவினர்கள், 14 பேரை பலி கொடுத்து உள்ளோம். அவர்கள் என்ன பாவம் செய்தனர்' என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், 14 பேர் குடும்பத்தினரும், ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கவர்னருக்கு, 'இ - மெயில்' வாயிலாக, மனு அனுப்பி உள்ளனர்; நேரில், மனு அளிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, 14 பேர் குடும்பத்தாரை ஒருங்கிணைத்து வரும், அப்பாஸ் கூறுகையில்,''ராஜிவ் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். அவருடன், ஒரு பாவமும் அறியாத, 14 பேர் பலியாகி உள்ளனர். கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்வது, குற்றத்தை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்,'' என்றார்.

விடுதலை கிடைக்குமா : ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக 2014-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பலாம்' என சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வே இந்த வழக்கையும் விசாரிக்கிறது. அதனால் ஏழு பேர் விடுதலை தொடர்பாக இன்று முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024