Monday, September 17, 2018

'ஆரிராரோ.. ஆராரிராரோ...' 18 ஆண்டுகளாய் காத்திருக்கும் மகள் : படுக்கையில் கிடக்கும் மகளுக்கான பாசப்போராட்டத்தில் தாய்

Updated : செப் 17, 2018 00:22 | Added : செப் 16, 2018 23:00




மதுரை: ''18 ஆண்டுகளாய் படுக்கையில் கிடக்கும் ஒரு மனுஷிக்கு இதை விட வேறு என்ன கஷ்டம் தான் வந்துவிடப் போகிறது,'' என கதறும் ஒரு தாய். ''அம்மாவின் குரலை ஒரு முறைகூட கேட்கவில்லை,'' என 18 ஆண்டுகளாக பதறும் மகள், என ஒரே குடும்பத்தில் மூன்று பெண்களின் சோக, பாசப்போராட்டம் நெஞ்சை பிழிகிறது.

வலியின் வாழ்க்கை :
 
குமரி மாவட்டம் பொன்மனை அருகே உள்ள இடைக்காட்டன்காலை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா,60. இவரது கணவர் சோமன். போலீஸ் ஏட்டாக பணிபுரிந்தார். இவர்களது மூத்த மகள் ஷோபா, 38. பிளஸ் 2 படித்திருந்த ஷோபாவிற்கும், அதே பகுதியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ரமேஷ்பாபுவிற்கும் 1998ல் திருமணம் நடக்க, மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.''எங்களுக்கு வாய்த்த இந்த கொடிய வாழ்க்கை உலகில் யாருக்கும் வாய்க்கக்கூடாது... இந்த வலிகளை தாங்கி தாங்கி இனி அழுவதற்கு என்னிடம் இனி கண்ணீரும் இல்லை,'' என தன் வலிகளை வார்தைகளாக்குகிறார் வனஜா...

''மகள் ஷோபாவின் பிரசவத்திற்காக எல்லோரும் சந்தோஷமாக குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் 2000 மார்ச் 3ல் கூடியிருந்தோம்.'சிசேரியன்' என்றார்கள். முடிந்ததும் அறையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த மகிழ்ச்சி. சில மணி நேரம் ஆகியும் இருவரையும் எங்களிடம் காட்டவில்லை. சண்டை போட்டு அறையின் உள்ளே சென்று பார்த்தால் மகள் ஜன்னியால் துடித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் மாறிவிடும் என்றனர். உடல் அசைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டாள். மருத்துவ சிகிச்சையில் எங்கோ தவறு நடந்து விட்டது என்பதை மட்டும் எங்களால் உணர முடிந்தது. வேறு மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அன்று அது நிஜமாகவே சிவராத்திரியாகவும் இருந்தது.

துரத்தும் மருத்துவம் : 

''நாகர்கோயிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது கோமா நிலை மாறுமா என்று எல்லோரும் ஏக்கத்தோடு காத்திருந்தோம். அவள் பெற்றெடுத்த மகளை (ஆதர்ஷா) அப்போது யாரும் கவனிக்கவில்லை. ஷோபாவுக்கு கபம் ஏறிவிட்டது. தொண்டை கழுத்து, பக்கவாட்டில் ஓட்டை போட்டு சிகிச்சை அளித்தார்கள். 40 நாட்கள் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

எங்களது மொத்த சம்பாத்தியமும் தீர்ந்தது. அங்கு இந்த சிலர் குழந்தை நன்றாக தானே இருக்கிறது. அவளை கவனியுங்கள் என சொல்ல எனது அக்கா ேஹமாவதி அங்கு பராமரித்தார். அதன் பின் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லுாரி, நெய்யாற்றின்கரை தாலுகா மருத்துவனை என 6 மாதங்கள் மருத்துவமனை வாழ்க்கையானது.

செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. நாங்கள் நலமாக்கிக் காட்டுகிறோம் என சில டாக்டர்கள் சொல்ல அவர்களது மருத்துவமனை என இப்படி பல ஆண்டுகளை கடந்தோம். 2012 ல் அனந்தபுரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கும் கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. பேத்தி ஆதர்ஷாவின் நிலையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கும். கடன் பிரச்னை, கஷ்டம் இப்படி எல்லாம் இழந்த நான் அப்பா குஞ்சன்பிள்ளை வீட்டில் அடைக்கலமானேன். அங்கு என்து அம்மா குட்டியம்மா, ஆதர்ஷாவை முழுமையாக அரவணைத்துக் கொண்டார். வீட்டில் ஷோபாவை கவனிக்கும் வகையில் சிறு வசதிகளை ஏற்படுத்தினோம்.

அதிர்ச்சிக்கு பஞ்சமில்லை : 

மகளின் இந்த நிலையை பார்த்து துவண்டுபோன எனது கணவர் சோமனும் 2003 ம் ஆண்டில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார். மூன்றாவது நாள் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கடிதம் வந்தது. மருத்துவ சிகிச்சை தொடர்பாக தக்கலை நுகர்வோர் கோர்ட்டில் ஆதர்ஷாவின் அப்பா ரமேஷ்பாபு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் எங்களுக்கு தெரியாமல் வேறு பெண்ணை ரமேஷ்பாபு திருமணம் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் பதிவானது. இந்த வழக்குகள் எல்லாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டன. நுகர்வோர் நீதின்றத்தில் ரமேஷ்பாபு தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு பதில் நான் ஆஜராக வேண்டிய நிலை வந்தது. இப்படி நீதிமன்றம், மகளின் மருத்துவம், பேத்தியின் தனிமை என மனசு முழுவதும் உடைந்து போனது.நெஞ்சம் உடைகிறது''ஷோபாவை கவனிப்பதில் உள்ள சிரமங்கள் சொல்லிமாளாது. இப்போது சாப்பிடுகிறாள். உணவு ஊட்டும் போது கையை கடித்து வைத்து கொள்வாள். அவை புண்களாகி, வடுக்களாகவும் மாறிவிட்டன. சிறு வயதில் மிகவும் அழகாக இருப்பாள்.

இப்போது பற்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. அவளை துாக்கி உட்கார வைக்க முடியவில்லை. எனக்கும் நெஞ்சு வலி, சுகர், பிரஷர் வந்து விட்டது. ஆதர்ஷாவின் பாசத்துக்குரிய எனது அம்மா குட்டியம்மாவும் இறந்துவிட்டார். சிலநேரம் ஷோபாவை நினைத்து கோபப்படுவேன். அதை பார்த்துவிட்டு ஆதர்ஷா 'எனது அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள்' என என்னிடம் கேட்டு அழுது கொண்டு குடியம்மா கல்லறையில் போய் உட்கார்ந்துவிடுவாள். அது என் நெஞ்சை அடித்து உடைத்தது போன்ற வலியை தரும். எனது கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. (என சொல்கையில், அருகில் இருந்து கேட்கும் நபர்களின் கண்களில் தண்ணீர் ஓடுகிறது). எனக்கு என் மகள் நலம்பெறுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என பேச்சை முடித்த போது, கல்லுாரிக்கு சென்றிருந்த ஆதர்ஷா வீட்டிற்குள் நுழைந்தார்.

மகளின் அவதாரம் :
ஆதர்ஷா தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள நுாருல் இஸ்லாம் கலைக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படிக்கிறார். தனது சோகங்களை தெய்வத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இதயத்தை கொண்டிருக்கிறார். ''குழந்தையாக இருந்து இதுவரையிலும் நான் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கவில்லை. வலிகளில் தான் வாழ்ந்துவருகிறேன்,'' என்றார். ஆறுதலாக இருந்த குட்டியம்மாவும் போய்விட்டார். அம்மாவுடன் சேர்ந்து அடிக்கடி 'செல்பி' எடுப்பதும், காதருகே பேசுவதும், சிரிக்கவைக்க முயற்சிப்பதுமாக இருக்கும் ஆதர்ஷாவுக்கு எதிர்காலம் பெரிய கேள்விக்குரியாகவே முன்னிற்கிறது.

அதிர்ந்த ஆதர்ஷா : 

தனது நிலை பற்றி ஆதர்ஷா அரசுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். கவர்னர் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது தான் கல்லுாரி முதல்வருக்கே ஆதர்ஷாவின் நிலை தெரிந்திருக்கிறது. தவறான சிகிச்சையால் தனது தாய் கோமா நிலையில் இருப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷூக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 'ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், டாக்டர்கள் குழு அமைத்து பரிசோதிக்க வேண்டும். சிகிச்சையின் அடிப்படையில் குணப்படுத்த முடியுமா அல்லது கருணை கொலை செய்ய வேண்டுமா,' என செப்., 25ல் அறிக்கை தாக்கல் செய்ய செப்., 11ல் நீதிபதி உத்தரவிட்டார்.

'கருணை கொலை' வார்த்தையால் துடிதுடித்துப்போனார் ஆதர்ஷா. பள்ளி, கல்லுாரியில் பெறும் வெற்றிகளை வீட்டின் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் சென்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஆதர்ஷா, அந்த கோயில் முன் அழுது புரண்டார். அவரை ஆறுதல்படுத்தி தேற்றியுள்ளனர்.

தெய்வமே துணை : 

அம்மாவின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஆதர்ஷா பேசுகிறார்... அம்மாவை நான் தினமும் பார்க்கிறேன். ஆனால் அவரது குரலை ஒரு நாள் கூட கேட்டது இல்லை. அம்மாவின் தாலாட்டை கேட்க சின்ன வயசில் ஆசைப்பட்டிருக்கிறேன். எனக்கு நடனம் மீது ரொம்ப ஆசை. பல நிகழ்ச்சிகளில், போட்டிகளில் ஆடியிருக்கிறேன். அப்போது என்னோடு ஆடும் பிள்ளைகளின் பெற்றோர் வந்து ஊக்கப்படுத்துவதும், முத்தம் கொடுப்பதை ஏக்கத்தோடு பார்ப்பேன்.

எனக்கு யாருமே இருக்க மாட்டார்கள். அந்த தனிமை என்னை ரொம்பவே பாதித்தது. கோ - கோ விளையாட்டிலும் நான் இதை உணர்ந்தேன். அதன் பின் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பறையில் எங்கள் ஆசிரியை ஒரு பெண் கோமா நிலையில் பல ஆண்டுகள் படுத்துகிடப்பதாகவும், அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் எனது கதையை பற்றி ஒரு மீடியாவில் வந்ததை பார்த்து சொன்னார். அப்போது என் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாணவி அந்த கதைக்குரிய மாணவி இவர் தான் என சொன்ன போது அந்த ஆசிரியை அழுதுவிட்டார்.

என்கதை என்னோடு என்று இருந்துவிடுவேன். யாரிடமும் என் அம்மா, அப்பா பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை. அம்மாவை விட்டு அப்பா போய்விட்டாலும், நான் இன்னமும் அப்பாவின் பாசத்தை எதிர்பார்க்கிறேன். இப்போது தான் எனது கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்தேன்.

சோகங்களை பாடல்கள் கேட்டும், அருகில் உள்ள இசக்கி அம்மன் கோயிலும், பூட்டியின் கல்லறையிலும் சொல்லி என்னை தேற்றிக்கொள்கிறேன். சில நேரங்களில் பெற்றோரே இல்லாதவர்களை நினைத்து ஆறுதலடைவேன். ஆனாலும் எனக்கு உள்ள ஒரே நம்பிக்கை, என் அம்மா எழுந்து நடப்பார்கள் என்பது தான். அனைவருக்கும் அம்மா எப்போதும் மதிப்புக்குரியவள். அவள் இல்லாத உலகம் வெறுமையானது. அம்மா ஐ லவ் யூ.

தொடர்புக்கு:
94424 72865aadharshababu@gmail.com- டபிள்யு.எட்வின்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024