Wednesday, November 14, 2018

`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி


எஸ்.மகேஷ்   vikatan 




``சேலம் - சென்னை ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணத்தில் 5.78 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்க ஒரு வாரமாக ரிகர்செல் செய்தோம். நேரமில்லாததால்தான் குறைவான தொகையைக் கொள்ளையடித்தோம். அந்தப் பணத்தில் மூன்று மாதங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'' என ரயில் கொள்ளைத் தலைவர் மோஹர்சிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சேலம் - சென்னை ரயிலின் கொள்ளைச் சம்பவத்தை துப்பு துலக்கி மோஹர்சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காலியா என்கிற கிருஷ்ணா என்கிற காபு, பில்டியா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்களை கடந்த 30.10.18 முதல் 12.11.2018 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``5.78 கோடி ரூபாய் ரயில் கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியான மோஹர்சிங்கின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள கேஜ்ராசாக் என்ற சிறிய கிராமம். அவருடன் பிறந்தது 3 சகோதரர்கள், 3 சகோதரிகள். மோஹர்சிங்கின் தந்தையின் சகோதரர் பிரேம்டா பார்தி. அவருக்கு கிரண், சங்காராம், ருசி, மகேஷ், பாசு, அமீன், தரம் ஆகிய 7 மகன்கள். இவர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மோஹர்சிங், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இந்தக் கும்பல் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.
 
இந்தக் கும்பலுக்குத் தலைவனாக கிரண் இருந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு கிரண் தனது சகோதரர்கள் சங்காராம், ருசி, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸார், கிரணைத் தவிர மற்றவர்களை கைது செய்தனர். கிரணை போலீஸார் தேடி வந்தநிலையில் 2012-ம் ஆண்டு அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் கொலை வழக்கில் 2015-ம் ஆண்டு சங்காராமுக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. ருசியும், மகேஷும் 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் கடந்த 2015- ம் ஆண்டு விடுதலையாகினர்.



கிரண் இறந்துவிட்டதால் மோஹர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைமை ஏற்றுள்ளார். அவரின் தலைமையில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை பல கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில் மோஹர்சிங் கும்பல் குறித்து ருக்சத் பார்தி, நாவல் பார்தி என இருவர் உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம், மோஹர்சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்தக் கொலைக்கு மோகர்சிங் மற்றும் அவரின் சகோதரர்கள் ராம்பூஜன், கஜராஜ், அவரின் சகோதரி சுலோசனா, மோஹர்சிங்கின் மனைவி பன்வாரா பாய் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இந்தக் கொலைக்குப் பிறகு உள்ளூர் போலீஸார் மோஹர்சிங் மற்றும் அவரின் குடும்பத்தினரை தீவிரமாகத் தேடினர். இதனால் அங்கிருந்து குடும்பத்துடன் மோஹர்சிங் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார். மோஹர்சிங் தலைமையிலான டீம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியது.


2016-ம் ஆண்டு மோஹர்சிங் தலைமையிலான டீம் தமிழகத்துக்கு வந்தது. விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், புதுச்சேரி, அரக்கோணம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். ரயில்வே தண்டவாளங்களின் அருகிலும் மேம்பாலங்களிலும் குடில் அமைத்து தங்கினர். இந்தச் சமயத்தில்தான் சேலத்திலிருந்து சென்னைக்குக் கோடிக்கணக்கில் ரூபாய் ரயிலில் எடுத்துச் செல்லும் தகவல் மோஹர்சிங்கிற்கு கிடைத்துள்ளது. இதனால் மோஹர் சிங் தலைமையில் ருசி, காலியா, பில்டியா ஆகியோர் அயோதியாபட்டினம் -விருத்தாசலம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் ஒரு வாரமாகப் பயணித்து நோட்டமிட்டுள்ளனர். சின்னசேலத்திலிருந்து விருத்தாசலம் ஆகிய ரயில் நிலையங்கள் வரை 45 நிமிடங்களுக்கு மேலாக எங்கும் நிற்காமல் ரயில் செல்வதை கொள்ளைக் கும்பல் கண்டறிந்து பணத்தைக் கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டுள்ளனர். சின்னசேலத்தில் மோஹர்சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல் ரயிலின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துள்ளது. பிறகு ரயிலின் மேற்கூரையில் துளைபோட்ட அந்தக் கும்பல் பெட்டிக்குள் இரண்டு பேர் இறங்கியுள்ளனர். லுங்கியில் பணத்தை மூட்டையாகக் கட்டி மேலே எடுத்து வந்துள்ளனர். திட்டமிட்டப்படி விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டரில் உள்ள வயலூர் மேம்பாலத்தில் மகேஷ்பார்தி மற்றும் கூட்டாளிகள் காத்திருந்தனர். அவர்களிடம் பண மூட்டையைக் கொடுத்துவிட்டு மோஹர்சிங் தலைமையிலான கும்பல் ரயில் வளைவுப் பகுதியில் மெதுவாகச் செல்வதைப் பயன்படுத்தி ரயிலின் மேற்கூரையிலிருந்து குதித்து தப்பியுள்ளது'' என்றார்.



போலீஸ் காவலின்போது மோஹர்சிங், ``ரயிலில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு செல்லும் தகவல் கிடைத்ததும் அதே ரயிலில் பயணித்து ஒரு வாரம் ரிகர்செல் செய்தோம். அப்போது எப்படிக் கொள்ளையடிப்பது என்று திட்டமிட்டோம். அதன்படி கொள்ளையடித்தோம். 45 நிமிடங்களுக்குள் ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு அதில் உள்ள பணத்தைக் கொள்ளையடித்தோம். நாங்கள் கட்டியிருந்த லுங்கியில் 5.78 கோடி ரூபாயைத்தான் மூட்டையாக கட்டமுடிந்தது. இதனால் மீதமுள்ள பணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிவிட்டோம். கொள்ளையடித்த பணத்தை சரிசமமாகப் பிரித்துக்கொண்டோம். கொள்ளையடித்த மூன்று மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு என்று அரசு கூறியதால் கொள்ளையடித்த பணத்தைச் செலவழிக்க முடியாமல் தவித்தோம். இருப்பினும் அந்த மூன்று மாதங்களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல். இதனால் செலவழிக்க முடியாத ரூபாய் நோட்டுக்களை தீ வைத்து கொளுத்தினோம்" என்று வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார். அதன்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சவாலான வழக்கை திறமையாகக் கண்டுபிடித்த சிபிசிஐடி சிறப்புக் குழுவினருக்குச் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய போபால் சிபிசிஐடி போலீஸாருக்கும், குறிப்பாக அந்தப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரம்வீர்குஸ்வாவுக்கும் தமிழக காவல்துறை நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ரயில் கொள்ளையர்களைப் பிடித்த சிபிசிஐடி போலீஸ் டீம் மற்றும் முகமூடி அணிந்த கொள்ளையர்களின் புகைப்படத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024