Wednesday, November 14, 2018

'ரெட் அலர்ட்' பயன்பாடு வேண்டாம்  வானிலை மையத்திற்கு தமிழக அரசு

dinamalar 14.11.2018

சென்னை: 'மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை, அரசு அலுவலர்களுக்கு தெரிவிக்க, இணைய தளத்தில், ரெட் அலர்ட் என்ற, சிகப்பு குறியீடை பயன்படுத்த வேண்டாம்' என, தமிழக வருவாய் துறை சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில், அவ்வப்போது, வானிலை நிலவரம் வெளியிடப்படுகிறது. புயல் உருவாகும்போது, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதை தெரிவிக்கவும், அந்த பகுதிகளில், அரசு அலுவலர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு தயாராக வேண்டும்

என்பதை குறிக்கவும், 'சிகப்பு' நிற குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இது, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது.

இதை தவிர்க்க, சிகப்பு நிற குறியீடு பயன்படுத்துவதை தவிர்க்கும்படி, தமிழக வருவாய் துறை சார்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது: புயல் தொடர்பான தகவல்களுக்காக, 'TN-SMART' என்ற, 'மொபைல் ஆப்' உருவாக்கி உள்ளோம். அதில், புயல் கரையை கடக்கும் நிகழ்வுகளை தெரிவிக்க உள்ளோம். இதை, பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, புயல் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இணையதளத்தில், எவ்வளவு மழை பெய்யும் என்பதை, அரசு அலுவலர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என, நான்கு நிறங்களை பயன்படுத்துவர். இதை, மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர்.

எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் பேசி, 'நீங்கள் கொடுக்கும் தகவல், எங்களுக்கு தெரிகிறது. பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்வதால், நிறம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்' என, கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024