Tuesday, November 13, 2018


"கஜா' புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும்: 80-90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

By DIN | Published on : 13th November 2018 02:57 AM | 




வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள "கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரியின் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் திங்கள்கிழமை கூறியது: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் "கஜா' புயல் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மையம் கொண்டது. இது சென்னைக்கு கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இது மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து இப்புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ.15) நண்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புயல் கரையைக் கடக்கும் வரையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை நண்பகல் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் வீசும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: கஜா புயல் காரணமாக, மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும்.

கடல் அலை: நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பைவிட ஒரு மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பும். "ரெட் அலர்ட்' நிர்வாக தரப்புக்காக தரப்படும் விஷயம். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. புயல் நகர்வு காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படும் என்றார் பாலச்சந்திரன்.

பெயர் வைக்கும் முறை

இந்தியப் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் தொடங்கியது. ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் உருவாகும்போது, ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில், வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் புயல்களுக்கு வரிசையாக தலா 8 பெயர்களை வைத்துள்ளன. தற்போது உருவாகியுள்ள புயலுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் இலங்கை அளித்த பெயராகும். இதற்கு அடுத்து உருவாகும் புயலுக்கு தாய்லாந்து அளித்துள்ள "பேத்தை' பெயர் வைக்கப்படவுள்ளது.




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024