Tuesday, November 13, 2018

சர்ச்சைக்குரியவரா சர்தார்?

By சுதாங்கன் | Published on : 13th November 2018 02:36 AM |

உலகத்திலேயே உயர்ந்து நிற்கிறார் சர்தார் வல்லபபாய் படேல், சிலையாக நர்மதை நதிக்கரையில்!

சிலை செதுக்க ஆரம்பித்த நாளிலிருந்து, இன்றைய நாள் வரை தான் எத்தனை விதமான சர்ச்சைகள், விவாதங்கள், கேள்விகள்!
படேல் சிலையை வரவேற்பவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ். முத்திரையை குத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தியாகங்கள். அதில் மிக முக்கியமானவர் சர்தார் வல்லபபாய் படேல்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு எழுதப்பட்டபோது, செய்யப்பட்ட பல வஞ்சனைகளின் விளைவுதான் இன்று படேலுக்கு மத முத்திரை குத்தப்படுவது. விமர்சிப்பவர்கள் அந்தச் சிலையில், பல தியாகங்களைச் செய்து, இந்த தேசத்தை ஒன்றாக்கிய சர்வ வல்லமையான படேலின் ஆளுமையை காணவில்லை. அவர்கள் மோடியின் முகத்தை மட்டுமே அங்கே காண்கிறார்கள். அங்கே தாமரை சின்னம்தான் அவர்களுக்குத் தெரிகிறது. அதுதான் பிரச்னை.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், நேரு தலைமையிலான மத்திய அரசு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு எழுத ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இந்திய சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் வடக்கே இருந்து தான் துவங்கியது என்பதை இந்தக் குழு ஏற்றுக் கொண்டது. எப்படி இந்த கருத்து உருவானது?

இதை உருவாக்கியவர் வீர சாவர்க்கர் இவர் தனது நூல் ஒன்றிலே 1857-இல் வடக்கே நடந்த சிப்பாய் புரட்சிதான் முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறார். அதையே ராதாகிருஷ்ணன் குழு ஏற்றுக் கொண்டது. அந்த வீர சாவர்க்கர் தான் இன்றைய பாரதிய ஜனதாவின் ஞான குரு!
சிப்பாய்ப் புரட்சிதான் இந்திய விடுதலைப் போரின் தொடக்கம் என்பதை கேரள, கர்நாடக அரசுகள் ஏற்க மறுத்தன. ஆனால் அப்போது தமிழகத்தில் இருந்த காங்கிரஸ் அரசு, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒரே ஒருவர் குரல் எழுப்பினார். அவர்தான் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. "தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சைப் புரட்சியிலிருந்துதான் விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்பட வேண்டும்' என்று ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. அதற்கு கட்டபொம்மன் பற்றிய குறிப்பும் இடம் பெறும் என்று கழகத்திற்கு பதில் கிடைத்தது. கேரள, கர்நாடக அரசுகள் தங்கள் அரசு சார்பில் தங்கள் சுதந்திர போராட்ட வரலாற்றை தாங்களே எழுதி வெளியிட்டன.

1950-ஆம் வருடம் படேல் இறந்தார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் அவர். உள்துறை அவர் வசம் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, ஐ.சி.எஸ் என்றழைத்தார்கள். அதாவது இந்தியன் சிவில் சர்வீஸ். அதை இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ் என்று மாற்றியவர் படேல். இந்த அதிகாரிகள் படேல் இறந்த போது சொன்னார்கள். "படேலின் இறந்த உடலை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாலும், அது இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்' என்று.

நேரு நாட்டை கவனித்துக் கொண்டார். ஆனால், அகில இந்திய காங்கிரûஸ கட்டுக்கோப்பாக வைத்திருந்த பெருமைக்குரியவர் படேல். அவர் முகத்தை கண்டாலே எல்லோருக்கும் ஒரு பணிவு வந்துவிடும். மன்னர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் அவரை ஒரு பவ்யத்தோடு தான் சந்தித்தார்கள்.

மக்களை துல்லியமாக எடை போடுவதில் வல்லவர் படேல். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் சபையில் ஒரே நீதிதான். அதில் இரண்டு பேருக்கு மட்டுமே விதிவிலக்கு. ஒருவர் காந்தியடிகள். அவர் படேலின் குரு. அடுத்தவர் நேரு. அவருடைய பரிவான பிரதமர். நேருவின் அணுகுமுறை மீது படேலுக்கு ஒரு பெருமிதமே உண்டு.
சீடரில்லாமல் எந்த இறைத்தூதரின் புகழும் பரவியதில்லை. அப்படிதான் காந்திக்கு ஒரு படேல். இந்தியாவில் காந்தி நடத்திய அத்தனை சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கும் கள வடிவமைப்பு செய்து கொடுத்தவர் படேல். அவர்தான், காந்தியின் முதல் தளபதி. படேல் காந்தியின் சீடரானது 1917-ஆம் வருடம். நேருவும், ராஜாஜியும் பின்னால் வந்தார்கள்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றை இந்தியாவோடு இணைத்த பெருமை படேலைச் சாரும் என்று இன்று பேசுகிறோம். ஆனால், இந்த சமஸ்தானக் கொடுமைகளையெல்லாம் சுதந்திரத்திற்கு முன்பே பேசிய முதல் இந்தியத் தலைவர் சர்தார் வல்லபபாய் படேல் தான்.

1960-களுக்குப் பிறகு தமிழகத்தில் "மாநில சுயாட்சி' கோஷம் திமுகவினரால் எழுப்பப்பட்டது. ஆனால் மாநிலங்களுக்கு சுயாட்சியும், சுதந்திரமும் வேண்டும் என்று படேல் பேசத்துவங்கிய வருடம் 1927. "இந்திய மாநிலங்கள் மக்கள் பிரநிதிகளைக் கொண்ட ஸ்தாபன அமைப்பாக இருக்க வேண்டும்' என்றார். இதே கருத்தைத்தான் 1947-ஆம் வருடம் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தபோதும் தனது உறுதியான கொள்கையாக முன்வைத்தார் படேல்.
1929-ஆம் வருடம் ஐந்தாவது கத்தியவார் அரசியல் மாநாடு நடந்தது. இதில் பேசிய படேல், "சமஸ்தானங்களின் பாதுகாப்பு என்பது பிரிட்டிஷ் அரசு தரும் பாதுகாப்பல்ல, மக்களின் நேசத்தில்தான் இருக்கிறது. அதனால்தான், இந்தியா என்பது ஒரு தேசம். இந்த மன்னர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சினேகம் இருந்தால் போதும் என்று நினைத்தால் அது பரிதாபத்திற்குரியது' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்தபின் படேலிடம் அதிகாரம் வந்தது. மன்னர்கள் படேலிடம் தோற்றுப்போய் சரணடைந்தார்கள். விழுந்த எதிரியைப் படேல் மிதித்ததே இல்லை. அரவணைத்துக் கொண்டார். இவர்களில் முக்கியமானவர்கள் சிலர். போபால் நவாப், ஜின்னாவின் தூண்டுதலால் இந்தியாவைத் துண்டாட நினைத்தார். ஹைதராபாத் நிஜாம், ஜின்னாவின் மறைமுக ஆதரவால் இந்தியா மீது போர் தொடுத்தார். அதே போல் சி.பி.ராமஸ்வாமி ஐயர், அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான். இவர்தான் முதன் முதலில் திருவிதாங்கூர் தனி நாடாக விளங்கும், எந்த அரசுக்கு கட்டுப்படாது என்றார்.

ஜாம்நகரின் நவாப், பிரிட்டிஷ் அரசின் சர்வ வல்லமை பொருந்திய சர் கொனார்ட் கார்பீல்டின் ஆசியுடன், இந்தியாவுக்கு வெளியே ஒரு தேசத்தை உருவாக்க நினைத்தார். எதிர்த்தவர்கள் எல்லோரும் படேலின் ஒரு பார்வையில் அடங்கிப் போனார்கள். ஹைதராபாத் விவகாரத்தில் மட்டும் படேல் ராணுவத்தை அனுப்பி அடக்க வேண்டியிருந்தது. அப்போது கூட நேரு இந்தியாவில் இல்லை. ஐரோப்பா சுற்றுப்பயணம் போயிருந்தார். பொறுப்புப் பிரதமராக இருந்த படேல், ராணுவத்தை அனுப்பி ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

பெருந்தன்மையின் மறு உருவம் படேல். இந்த மன்னர்கள் விவகாரத்தில் நேருவுக்கும், படேலுக்கும் பார்வைகள் வேறுபட்டதாக இருந்தது.
ஜாம் நகர் நவாப் சாஹேப், 1949-இல் ஐ.நா.வுக்கு போன இந்தியக் குழுவின் உறுப்பினரானார். "நவாப் சாஹேப் போனால் எனக்குதான் அவமானம். அவரும் அவருடைய வைர சட்டைப் பொத்தான்களும்' என்று சீறினார் பிரதமர் நேரு. இதை அயலுறவுச் செயலர் கே.பி.எஸ். மேனன், படேலிடம் தெரிவித்தார். சில வினாடிகள் யோசித்துவிட்டு படேல் சொன்னார் "நான் முடிவெடுத்துவிட்டேன்'. நேரு மறுவார்த்தை பேசவில்லை.
இந்தியாவோடு சேரமாட்டேன் என்று முதலில் குரல் கொடுத்த சி.பி.ராமஸ்வாமி ஐயரை, இந்தியாவின் அமெரிக்கத் தூதராக படேல் தேர்வு செய்தார். அதை மறுபரிசீலனை செய்ய நேரு படேலிடம் கெஞ்ச வேண்டியதாயிற்று.

ஒவ்வொரு சமஸ்தானமும் தங்கள் மாநில கஜானாவைச் சுரண்டி, கேளிக்கைகளில் ஈடுபட்டு, பிறகு நிதிப் பற்றாக்குறைக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பணிந்து கிடந்தது. அன்று அந்த சமஸ்தானங்களை இணைக்காமல் இருந்திருந்தால் இந்த தேசம் என்னவாகியிருக்கும்?
காந்திக்கு நினைவகம் பல ஊர்களில், பல ஏக்கர் நிலங்களில் உருவானபோது யாரும் குரல் எழுப்பவில்லை. நாடெங்கிலும் நேருவுக்கு நினைவகங்கள். அப்போதும் யாரும் பேசவில்லை. சமஸ்தானங்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்து, இந்திய அரசின் வருவாயைப் பெருக்கி, மாநில உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் மரியாதை வாங்கிக் கொடுத்தவரை, சுதந்திரமடைந்த இந்த எழுபதாண்டுகளில் நாம் மறந்தே போனோம்.

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஜனவரி 30 காந்தி நினைவு தினம். நவம்பர் 14 குழந்தைகள் தினம், நேருவின் பிறந்தநாள். இவை நினைவிருக்கின்றன, கொண்டாடப்படுகின்றன. அக்டோபர் 31 படேல் பிறந்த தினம் என்பதை இந்த எழுபது ஆண்டுகளில் யாராவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
இந்தியா என்பது ஒரு நாடா? என்று கேலி செய்தவர்கள் ஏராளம். அதை ஒருங்கிணைத்த சிற்பிக்குதான் இத்தனை பெரிய சரித்திர புகழ் பெற்ற சிலை. சிலையை வைத்தது யார் என்பது முக்கியமல்ல? யாருக்கு வைக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அதற்குச் செலவு ரூ.3,000 கோடியா என்று கணக்குப் பார்ப்பதை விடக் கேவலமான நன்றிகெட்ட பார்வை இருக்க முடியாது!

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...