Tuesday, November 13, 2018


நாகை, கடலுாருக்கு புயல் அபாயம் தயார் நிலையில் மின் வாரியம்

Added : நவ 13, 2018 00:51

புயல் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும், நாகை, கடலுாருக்கு, பிற மாவட்டங்களில் இருந்து, கூடுதல் ஊழியர்களை அனுப்பும் பணியில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.சென்னையில், சில இடங்களில், தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், கன மழை, புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து விழுவது தொடர்கிறது.அக்டோபர் இறுதியில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கினாலும், மின் தேவை அதிகம் உள்ள, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், போதிய மழை இல்லை. இதனால், தினசரி மின் தேவை குறையவில்லை.இந்நிலையில், அந்தமான் அருகே உருவான, 'கஜா' புயல், கடலுார்மற்றும் பாம்பன் இடையே, 15ல், கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மேற்கொள்ள வேண்டிய முன்ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் பகிர்மான இயக்குனர் ஹெலன், நேற்று சென்னை மண்டல தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன், ஆலோசனை நடத்தினார்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புயல் பாதிப்பில், மின் வாரியத்திற்கு தான், அதிக சேதம் ஏற்படுகிறது. கஜா புயலால், கடலுார், நாகை மாவட்டங்களில், அதிக பாதிப்பு ஏற்படும் என,தகவல் கிடைத்துள்ளது. இதனால், அங்கு சேதம் ஏற்பட்டால், விரைவாக சீரமைக்க, பிற மாவட்டங்களில் இருந்து, கூடுதல் ஊழியர்கள் 
அனுப்பப்படுகின்றனர்.உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகளை கண்காணிக்க, தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தி, கடலுார், நாகைக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024