Friday, November 16, 2018

பல் மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவி

Added : நவ 16, 2018 02:13



சேலம்:கூலித் தொழிலாளியின் மகளான, பல் மருத்துவக் கல்லுாரி மாணவி, கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், கொல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 44; மூட்டை துாக்கும் தொழிலாளி.இவரது மனைவி வசந்தா, 38; மகன் அருண், 20, காரைக்குடி, அழகப்பா கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். மகள் சரிகா, பிளஸ் 2 வகுப்பில், 1,027 மதிப்பெண்கள் பெற்று, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் மருத்துவக் கல்லுாரியில், பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

கல்லுாரி கட்டணம், 25 ஆயிரம் ரூபாய், புத்தகம் மற்றும் மருத்துவ கருவிகள் வாங்க, 85 ஆயிரம் ரூபாய், விடுதிக்கு, 1.10 லட்சம் ரூபாய் என, ஆண்டுக்கு, 2.20 லட்சம் ரூபாய் என, நான்காண்டுகள் கட்ட வேண்டும்.ஆனால், கல்லுாரி கட்டணத்தை செலுத்தி, படிப்பில் சேர்ந்த சரிகாவால், மேற்கொண்டு பணம் செலுத்த முடியவில்லை.

இது குறித்து, மாணிக்கம் கூறியதாவது:அரை மதிப்பெண் பற்றாக்குறையால், மகளுக்கு, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரம், சென்னை, தாகூர் பல் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. பணம் கட்ட முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை உள்ளது. யாரேனும் உதவினால், பயனாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.உதவ, 63842 51070 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024