Thursday, November 15, 2018

கருவூலத்துறை அதிகாரியிடமே லஞ்சம் கேட்கும் சக அதிகாரிகள்!

எம்.கணேஷ்
   vikatan

``29 வருடம் நேர்மையாக வேலைபார்த்தேன். என்னிடமே லஞ்சம் கேட்கிறார்கள்!” – ஓய்வுபெற்ற அரசு அதிகாரி




நேர்மையாக வேலைபார்த்த தன்னிடமே ஓய்வூதியப் பலன்களை வழங்க லஞ்சம் கேட்கிறார்கள் என்று முன்னாள் கருவூலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தேனி மாவட்ட அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.

என் பணம் அவர்களிடம் எப்படிச் சென்றது?

இதுகுறித்து, கருவூலத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான ரவிச்சந்திரன், ``என் பெயர் ரவிச்சந்திரன். 29 ஆண்டுகளாக கருவூலத்துறையில் வேலைபார்த்து, ஆண்டிப்பட்டி கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலராகப் பதவி உயர்வு பெற்று, கடந்த ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெற்றேன். ஓய்வுபெற்ற பின்னர் எனக்குக் கிடைக்க வேண்டிய பலன் தொகையைக் இப்போதுவரை என்னை அலைக்கழித்து, லஞ்சம் கேட்கிறார்கள். பொதுவாக ஓய்வு பெற்ற பின்னர். ஈட்டிய விடுப்புத்தொகை என்ற முறையில் பணம் வரும். அது வந்தது. அதைத்தொடர்ந்து பணிக்கொடை, பொது சேமநல நிதி, அகவிலைப்படி நிலுவைத்தொகை என மொத்தமாக 8 லட்சத்து 89 ஆயிரத்து 897 ரூபாய் எனக்கு வர வேண்டும். அதைக் கேட்டால், எங்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு உன் பணத்தை வாங்கிக்கொள் என்றார்கள். 29 வருடங்களாக நேர்மையாக வேலை பார்த்தேன். அதற்குப் பரிசாக என்னிடமே லஞ்சம் கேட்கிறார்கள். இப்படிப் பணம் கேட்கிறார்கள் என்ற செய்தியை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல திட்டமிட்டேன். அதை அறிந்துகொண்டு, அவசர அவசரமாக எனது வங்கிக்கணக்கில் அந்தப் பணத்தை நவம்பர் 7-ம் தேதி டெபாசிட் செய்தார்கள். பணம் வந்துவிட்டது என்று என்னால் சந்தோசப்பட முடியவில்லை.




காரணம், என்னுடைய வங்கிக்கணக்கிற்கு தனி நபரின் வங்கிக்கணக்கிலிருந்து பணம் வந்திருந்தது. அந்த வங்கிக்கணக்கு யாருடையது என்று பார்த்தால், உதவிக் கருவூல அலுவலர் புனிதா ராணியின் வங்கிக்கணக்கு என்று தெரியவந்தது. அதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. எனக்குக் கிடைக்க வேண்டிய பணம் எப்படி அவரது வங்கிக் கணக்கிற்குச் சென்றது என்று எனக்குப் புரியவில்லை. உடனடியாக வங்கிக்குச் சென்று அந்தப் பணத்தை கருவூல வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டேன். இப்போது கேட்டால் பணம் தரமுடியாது என்கிறார்கள். என் மகளின் திருமணத்திற்கு இந்தப் பணத்தை நம்பிதான் இருக்கிறேன்” என்றார்.



சட்டப்படிக் குற்றம்:

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை சக அதிகாரி கையாள முடியுமா என்று தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்த போது ஆச்சர்யத் தகவல்கள் பல கிடைத்தன. ``பொதுவாக அனைத்துத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவருக்குமே இந்த அனுபவம் இருந்திருக்கும். கருவூல அதிகாரிகள்தான் இறுதியாகக் கிடைக்க வேண்டிய பெனிஃபிட் பணத்தைக் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும்போது அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய எழுதப்படாத நடைமுறைதான் இங்கே பின்பற்றப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கருவூல அதிகாரிக்கே இந்த நிலை ஏற்பட்டதுதான்” என்றனர்.

புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன்:

ஓய்வுபெற்ற அரசு கருவூல அதிகாரி ரவிச்சந்திரனின் புகாரை மாவட்டக் கருவூல அலுவலர் சீதா ராமனிடம் எடுத்துச்சென்றோம். ``ஒரு தனிநபர் வங்கிக் கணக்கிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வங்கிக் கணக்கிற்கு கருவூலப்பணம் பரிவர்த்தனை என்பது குற்றம். பாதிக்கப்பட்டவர் எழுத்துபூர்வமாகப் புகார் அளிக்கவில்லை. அளித்தால், கலெக்டரின் பார்வைக்கு இவ்விவகாரத்தை எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ரவிச்சந்திரனின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்திய உதவிக் கருவூல அலுவலர் புனிதா ராணியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர், ஆண்டிப்பட்டியிலிருந்து நிலக்கோட்டைக்குப் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. சட்டத்திற்குப் புறம்பாக கருவூலத்துறையில் நடக்கும் முறைகேடுகள் இனியேனும் களையப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

வரும் கல்வியாண்டு முதல்.. டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் தேவையில்லை.. யுஜிசி மேஜர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல்.. டிகிரி படிக்க இனி 3 வருசம் , 4 வருசம் தேவையில்லை.. யுஜிசி மேஜர் அறிவிப்பு  By Velmurugan P  Published: Thursday, N...