Thursday, November 15, 2018


நவம்பரில் 31ம் தேதி இருக்கா ஆபீசர்ஸ்? : சென்னை போக்குவரத்து கழகத்தில் கூத்து!

Added : நவ 14, 2018 23:24

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக முன்னாள் நடத்துனரின் கேள்விக்கு, நவ., 31ல் பதில் அளிப்பதாக, போக்குவரத்து இணை கமிஷனர் அனுப்பிய கடிதம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின், குரோம்பேட்டை பணிமனையில், ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் முதல்வராக உள்ளவர், சரிதா. இவர், ஏற்கனவே, தார்பாய் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியவர்.தற்போது, பயிற்சி பள்ளி முதல்வராக இருக்கும் இவர், தண்டனை பெற்ற ஓட்டுனர்களுக்கு, பேருந்துகளை இயக்கி காட்டி விளக்கம் அளிக்க வேண்டியது, அவரின் பொறுப்பு.ஆனால் அவர், ஒரு நாள் கூட, பேருந்தை இயக்கியதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், சரிதாவின், 'ஹெவி லைசென்சை' ஆய்வு செய்வதோடு, அவர் வாகனம் ஓட்டுவது தொடர்பாக, ஆய்வு நடத்தக் கோரி, முன்னாள் நடத்துனரான கோதண்டன், மார்ச்சில், மீனம்பாக்கம் போக்குவரத்து இணை கமிஷனருக்கு மனு தாக்கல் செய்தார்.அதற்கு, சென்னை, தெற்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, 3ம் தேதி, ஒரு கடிதம் வந்தது.அதில், நவ., 31ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, புகார் குறித்த ஆதாரங்களையும், விளக்கத்தையும் அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், நவ., 8ம் தேதி, மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 'நவ., 3ம் தேதி நடந்த விசாரணைக்கு, நீங்கள் ஆஜராகவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது.இந்த முரண்பட்ட தகவல்களால் கோதண்டன் கிறுகிறுத்தார்.இது குறித்து, கோதண்டன் கூறியதாவது:எம்.டி.சி., பயிற்சி பள்ளி முதல்வரின், 'லைசென்சின்' உண்மைத் தன்மை மற்றும் அவரின் திறமை குறித்து ஆய்வு செய்யும் படி, நான் மனு அளித்திருந்தேன். என்னை, நவ., 31ல் ஆஜராகும் படி அழைத்திருந்தனர். நவம்பரில், 31ம் தேதியே கிடையாது என்பது கூட, அதிகாரிகளுக்கு தெரியவில்லை.மீண்டும் வந்த கடிதத்தில், 'குறிப்பிட்ட நாளில் ஆஜராகவில்லை' என, என் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த விஷயத்தை மூடி மறைக்க, அதிகாரிகள் முயற்சிக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024