Saturday, January 12, 2019


கற்றல் என்னும் பெருங்குணம்!

By இரா. கதிரவன் | Published on : 12th January 2019 02:10 AM 

நம்மில் பெருவாரியானோர் கல்வி கற்பதே, ஒரு வேலையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடுதான். பலருக்குக் கல்வி என்பது ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஏதோ ஒரு வேலை கிடைத்தவுடன் நிறைவுபெற்று விடுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த பின்னர், அவர்களது திறன் மேம்பாடு குறித்து அந்த நிறுவனங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளும்; காரணம், நேற்றைய தொழில் நுணுக்கங்களை இன்று பயன்படுத்தினால் நாளைய சந்தையில் நிலைத்திருக்க இயலாது எனப் பெரும் மாற்றங்கள் இடைவிடாது நிகழ்வதுதான்.

எனவே, தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் தொழில்நுணுக்கம் மற்றும் மேலாண்மைத் திறனை இடைவிடாது வளர்த்துக் கொள்வதை, இடைவிடாக்கற்றல் என்னும் தொடர் நிகழ்வு மூலம் செயல்படுத்துகின்றன. புதிய தொழில்நுட்பங்கள், உற்பத்தித்திறன் வளர்ச்சி, தர மேம்பாடு ஆகியனவற்றை இடைவிடாது மேற்கொள்ள நிறுவனத்தின் ஒவ்வொருவரையும், மாற்றங்களுக்கும்-குறிப்பாக கற்றல் என்ற தொடர் நிகழ்வுக்கும் உட்படுத்தும்.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும், அங்கு பணிபுரிபவர்களின் வளர்ச்சியும் இணைகோடுகள். எனவே, ஊழியர்களது அறிவு மற்றும் செயல்திறன் வளர்ச்சிக்காக பட்டறைகள், வகுப்புகள், மேல்படிப்புக்கான ஊக்கம் ஆகியனவற்றைத் தரும்.

நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்தச் செயல்முறை ஒரு நாட்டுக்கும் தனி மனிதனுக்கும் பொருந்தும். தனி மனிதனுக்கு கற்றல் என்பது ஒரு இடைவிடாத செயலாகும்போது என்ன பலன்களைத் தரும்? முதலாவதாக வீண் பொழுதுபோக்கு, வெட்டிப் பேச்சு, அக்கம்பக்கம் சச்சரவு, சூதாட்டம், அதீத தொலைக்காட்சி, குடிப்பழக்கம் ஆகிய தீங்குகளைத் தவிர்த்து நல்ல சூழலை ஏற்படுத்தும்.

குறிப்பாக, பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது மனதை இலகுவாகவும், மூளையைச் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். பலர் பணிபுரியும் காலத்தில், பொருள் சேர்க்க ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்தவர்கள், பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவித மனக்குழப்ப நிலைக்கு ஆளாவதைப் பார்த்திருப்போம்; இவர்கள் இந்த நிலையில் சிக்காதிருக்க கற்றல் என்னும் பழக்கம் உதவும்.

இந்தியாவில் 60 வயது கடந்த சுமார் 35 லட்சம் பேர் மனஅழுத்தம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை நோக்கும்போது, இதன் முக்கியத்துவம் விளங்கும்.

அறுபது வயதுக்குப் பின்னர் புதிதாக ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது - கற்றல் என்ற பழக்கத்தைத் தொடங்குவது எளிதான ஒன்றல்ல. எனவே, இதனை இளமையிலேயே தொடங்குவதுதான் நல்ல பலன் தரும்.
எனவே, ஒருவர் இளமையிலேயே இசை, ஓவியம், இலக்கியம், சரித்திரம் குறித்துத் தெரிந்துகொள்வதுடன், வேறு ஏதாவது ஒரு துறையில் தங்களது அறிவைப் பெருக்கிக் கொள்வதே பெரும் பலனளிக்கும் .
ஏராளமான, அருமையான விஷயங்களை உலகம் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றையாவது கற்பதற்கும் ரசிப்பதற்கும்கூட ஒருவரின் ஆயுட்காலம் போதாது.
வளர்ந்த நாடுகள் இடைவிடாத கற்றலை, வாழ்நாள் கல்வியாக எல்லா வயதினருக்குமான முறைசாரா கல்வியாக, தேர்வுகளற்ற ஒன்றாக வழங்குகிறது.

நிர்வாகம், கல்வி, மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் பங்களிக்கவும் - பங்கேற்பவர்கள் தங்களது அனுபவத்தினைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், வாரம் சில மணி நேரங்கள் கொண்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இங்கு நம்மிடையே அத்தகைய வசதிகள் இல்லாவிடினும்கூட, தங்களுக்குப் பிடித்தமான துறை சார்ந்த பத்திரிகைகள், கணினி நூல்கள் வாசிப்பது பெரும் பயனளிக்கும்.

இவற்றைவிட கற்றலின் இன்னொரு மிக முக்கிய வெளிப்பாடு, சமுதாயத்தின் அங்கமாக பலரோடும் ஒன்றிணைந்து வாழக் கற்றுக் கொள்வதுதான்.
தான் வாழும் பூமியை, அதன் சுற்றுச்சூழலை, பிற ஜீவராசிகளை, சக மனிதர்களை, இயற்கையைப் பேணுவது மற்றும் நேசிப்பது, பிறர் கருத்துகளை, உரிமைகளை, உணர்வுகளை, சுதந்திரத்தை
மதிப்பது ஆகியவை தனி மனிதனின் கற்றலின் வெளிப்பாடுதான்.
இடையறாது கற்கும் ஒருவன், நாட்டின் பிரஜை என்ற இடத்திலிருந்து நல்ல குடிமகன் என்ற இடத்துக்கு உயருகிறான்.
அடுத்ததாக ஒரு நாடு என்ற அளவில், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளுவதைப் போன்று, இயற்கையில் நிகழும் மாற்றங்களுக்கு நாளைய பேரிடர்களுக்கு, புவி வெப்பமயத்துக்கு, கடல் மட்ட உயர்வுக்கு எனப் பல விஷயங்களுக்கு ஏற்ப அதனைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக ஒரு நாடு பிற நாடுகளின் வெற்றி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம்.

மேலும், கற்றல் என்ற தனிமனிதனின் பெருங்குணம் ஒரு நாட்டின் பொதுகுணமாகும்போது, அந்த மக்களின் கல்வித் தரம்-பண்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியினையும் உயர்த்தும். அங்கு ஓர் இணக்கமான, பிணக்கற்ற அமைதியான சூழல் நிலவும்; பல்வேறு மொழி-இன- மத மக்கள் நிறைந்த நாடுகளுக்கு இது மிக அவசியமான ஒன்று.
வளர்ந்த எல்லா நாடுகளிலும் கற்றல் என்பது அவற்றின் பொதுகுணமாக இருப்பதை நாம் காண முடியும். இத்தகைய கற்றலின் அருமையை உணர்த்தத்தான் யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
என்றாரோ திருவள்ளுவர்?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024