Tuesday, January 15, 2019

'சர்கார்' முதல் நாள் வசூலை முந்தாத 'பேட்ட' + 'விஸ்வாசம்' வசூல்: என்ன காரணம்?

Published : 14 Jan 2019 19:07 IST

ஸ்கிரீனன்




'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூலை 'பேட்ட' + 'விஸ்வாசம்' வசூல் இணைந்து முறியடிக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. முதல் முறையாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி - அஜித் படங்களின் நேரடி மோதலால் வசூல் எப்படியிருக்குமோ என்று விநியோகஸ்தர்கள் முதலில் கொஞ்சம் தயங்கினார்கள்.

ஆனால், இரண்டு நடிகர்களின் படமுமே நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் என அனைவருமே பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த இரண்டு படங்களின் வசூலால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள். காரணம் என்னவென்றால், முதல் நாள் வசூலில் இரண்டு படங்களுமே 'சர்கார்' மற்றும் 'மெர்சல்' படத்தின் முதல் நாள் வசூலைத் தாண்டவில்லை. ஏன், 'பேட்ட' - 'விஸ்வாசம்' ஆகிய படங்களின் முதல் நாள் தமிழக மொத்த வசூல் என்பது 28 கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், 'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூல் 32 கோடி.

ரஜினி மற்றும் அஜித் ஆகிய நட்சத்திரங்கள் இணைந்துமே, விஜய் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க முடியவில்லை என்று கொண்டாடி வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சில விநியோகஸ்தர்களிடம் கேட்டோம்.

அதற்கு அவர்கள் கூறியதவாது:

''முதலில் 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' இரண்டுமே தனியாக வெளியான படங்கள். இரண்டுக்குமே எந்தவொரு படமும் போட்டியாக வெளியாகவில்லை. 'சர்கார்' மட்டும் தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகள் வரை வெளியானது. ஆனால், 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' தனித்தனியாக சுமார் 450 திரையரங்குகள் வரை வெளியாகியுள்ளது.

'மெர்சல்' மற்றும் 'சர்கார்' இரண்டுமே படம் வெளியான அடுத்த நாளே சர்ச்சை தொடங்கிவிட்டது. இதனை முன்வைத்து மக்கள் கூட்டம் அதிகரித்தது. 'சர்கார்' படம் வெளியான சில நாட்களுக்கு முன்பு வரை சர்ச்சைகள் தொடர்ந்து. வெளியான அடுத்த நாளே அரசாங்கத்தை விமர்சித்துள்ளனர் என்று மீண்டும் சர்ச்சையானது. அதற்குப் பிறகு அக்காட்சியை படத்திலிருந்தே நீக்கினார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு படத்துக்குமே ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதியளித்தது. ஆனால், 'பேட்ட' - 'விஸ்வாசம்' இரண்டுக்குமே ஸ்பெஷல் ஷோவுக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.

அதே போல், 'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூலைப் போல் இன்னொரு விஜய் படம் வசூல் செய்யுமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஏனென்றால், அரசை விமர்சித்தது உள்ளிட்ட காரணத்தைக் கணக்கில் கொண்டு அனுமதியளிக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

'சர்கார்' படத்தின் முதல் நாள் வசூல் என்பது முறியடிக்கக் கூடியது தான். ஆனால், அதற்கு ரஜினி அல்லது அஜித் படங்கள் தனி வெளியீடாக வந்திருக்க வேண்டும். இரண்டுமே சேர்ந்து வந்ததால் தான் முறியடிக்க முடியாமல் போனதாக கருதுகிறோம். 'தெறி', 'மெர்சல்' கூட்டணி இணைந்திருக்கும் 'தளபதி 63' கூட்டணி கண்டிப்பாக 'சர்கார்' முதல் நாள் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024