Sunday, February 3, 2019


துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

Added : பிப் 03, 2019 04:10

சிதம்பரம்:'இட மாறுதல் காலக்கெடுவை நீட்டிக்க கூடாது' என, அண்ணாமலை பல்கலைக் கழக இடமாறுதல் ஊழியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2015 வரை, 13 ஆயிரம் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியில் இருந்தனர்.முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடியால், அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 2013ல் சிவ்தாஸ் மீனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நிதி நெருக்கடியை சீரமைக்க, பல்கலையில் பணியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை அரசு துறையில், பணி நிரவல் திட்டத்தில் இடமாறுதல் செய்ய அவர், பரிந்துரை செய்தார்.கடந்த, 2015 முதல், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு, மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகள் முடிந்த ஆசிரியர்களுக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்து, அரசு உத்தரவிட்டதால், அவர்கள் அதே இடத்தில் பணியில் உள்ளனர்.இந்நிலையில், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தங்களுக்கு இடமாறுதல் கால நீட்டிப்பு செய்யக்கூடாது என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

*அண்ணாமலை பல்கலைக் கழக பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்கலைக் கழகத்தில் பணி செய்த, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை, மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக பணிக்கு அழைத்துக்கொள்ள வேண்டும். 

பணி நிரவல் செய்யப்பட்ட, 70க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.அவர்கள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பணப்பயனை அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்.

*பணி நிரவல் முறையில் இடமாறுதல் செய்யப்பட்ட, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, ஒப்பந்த காலம் முடிந்த பின், மேலும் பணி நீட்டிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக பொது நுாலகம் அருகில், 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின், ஊர்வலமாக சென்று, துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டனர். இதனால் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024