தமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள், அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வினர், மாநிலம் முழுவதும், ஜன., 22 முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சஸ்பெண்ட்
:'போதிய நிதி இல்லாததால், தற்போது, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இயலாது. போராட்டத்தை கைவிட வேண்டும்' என, அரசு தரப்பில், பல முறை வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணிகளை புறக்கணித்து, மறியலில் இறங்கினர். அதனால், கைது செய்யப்பட்டனர்; பின், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதோடில்லாமல், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை என, அரசு தரப்பில், அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பணிக்கு வராதவர்களின், பணியிடங்கள்
காலியானதாகவும் அறிவிக்கப்பட்டன. அதன்பின், பணிக்கு திரும்பி வந்தாலும், அதே இடத்தில் பணிபுரிய இயலாது; வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என்றும், அரசு எச்சரித்தது.
அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர். எனினும், அவர்கள் மீதான பிடியை தளர்த்தாமல், அரசு இறுக்கி வருகிறது. அரசு விதித்த கெடுவுக்குள், பணிக்கு வராத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை :
அதன்படி, கல்வி மாவட்ட வாரியாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, பணியிடம் மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 383; அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில், 43; இலுப்பூர் கல்வி மாவட்டத்தில், 159 பேர் என, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத, ஐந்து ஆசிரியர்கள், கட்டாய பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், 400 ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழகம் முழுவதும், அரசு விதித்த கெடுவிற்குள், பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசிடம் தீர்வு கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர். இதையடுத்து, 'போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை, கைவிட வேண்டும்' என, அனைத்து சங்கங்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment