Saturday, February 2, 2019

அமுதும் நஞ்சும்

By கிருங்கை சேதுபதி | Published on : 31st January 2019 01:49 AM |


இளைஞர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போது மின்னலாய் ஒரு கேள்வி வந்துவிழுந்தது.

கண்களுக்கு மூடி இமைகள்; வாய்க்கு மூடி இதழ்கள்; மூக்குக்கும் செவிகளுக்கும் ஏன் மூடி இல்லை? இருந்திருந்தால்... என்று கற்பனை செய்துகொண்ட ஒருவர் சொன்னார்: எவ்வளவு திட்டினாலும் கவலைப்படாமல் காதை மூடிக் கொண்டு விடலாம். அதுமாதிரி துர்நாற்றம் வந்தாலும்... சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவர் குறுக்கிட்டார்: அவசரப்பட்டு மூடி, பின்னர் திறக்கமுடியாமல் மாட்டிக்கொண்டால்...?
மூச்சுத் திணறி... முன்னவர் சொல்லுகிறபோதே மூச்சுத் திணறல் ஏற்பட்ட நடுக்கம் எங்களுக்கு.

ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான் ஆண்டவன் என்று பாட்டி சொல்லுவார். அதுபோலத்தான் இந்த மூடிகளும்போல... என்றார் ஒருவர்.

இல்லாதவற்றைப் பேசுவதைவிட, இருப்பதன் முக்கியத்துவத்தை முதலில் பேசுவோம் என்று வரையறுத்துக் கொடுத்தார் மற்றொருவர். பேச்சு கண்களைச் சூழ்ந்துகொண்டது.

நம்மைப் பொருத்த அளவில் நாம் கண்களாக மட்டும் அவற்றைக் கருதவில்லை; அன்பின் பெருக்கத்தில் அருமைக்குரியவர்களைக் கண்ணென்றுதான் குறிப்பிடுகிறோம். அம்மாவும் அப்பாவும் பாசத்தின் மிகுதியில் கண்ணே என்றுதான்கொஞ்சுகிறார்கள்.
காதல் மிகுதியில் இரு பாலரும் அழைத்துக் கொள்ளும் சொல்லும் அதுதான்; கண்ணன் என்றே கடவுளைக் குறிக்கிற வழக்கமும் உண்டு.
ஐம்பொறிகளில் கண்ணுக்கு அவ்வளவு முக்கியத்துவம். ஏனைய பொறிகளைச்செயல்படுத்துவதில் இது தலையாயது என்பதால்தான், இதற்குத் தலையில் தலைமையிடம் போலும்! 

ஆபத்து நேருங்கால் உடன் பாதுகாத்துக்கொள்ள, இமைகள் தாமே வந்து இணைந்து காப்பது எத்தனை அழகு? என்று அனுபவித்துச் சொன்னார் ஒருவர். காணத்தகாதவற்றைக் கண்டாலும் உட்புகவிடாமல் தடுத்துக் கொள்ளவும் இமைகள் உதவும். ஆனால், அதற்கு இதயம் துணை நிற்க வேண்டும் என்றார் இன்னொருவர் தத்துவார்த்தமாக.
இதற்கிடையில், கண்கள் என்று சொல்வதா? கண்ணென்று சொல்வதா? என்றும் ஒரு கேள்வி எழுந்தது. கண்கள் என்பதுதான் சரி. ஆனால், கண்கள் இரண்டு என்றாலும் காட்சி ஒன்றாகத் தோன்றுவதாலே, கண்ணென்று சொன்னாலும் தப்பில்லை என்ற பதிலும் வந்தது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று திருவள்ளுவர் கண்ணென்றுதானே காட்டியிருக்கிறார் என்ற சான்றையும் இணைத்துத் தந்தார். 

இனி என் முறை. சொல்லத் தொடங்கினேன்: கண் என்றதும் காண்பவர்க்கு இருக்கிற கண் என்றுதான் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், ஏற்கெனவே கண்ட ஒருவரின் கண்களில் இருந்து பெற்ற அனுபவத்தை மனக்கண் கொண்டு காணவும் அவ்வாறே கண்டு கற்றுப் பயணித்து உணரவும் இந்த எண்ணும் எழுத்தும் துணை நிற்பதனால் அதனைத் தந்தவரின் கண்ணையும் இணைத்துக் கருதலாம் என்று தோன்றுகிறது.
அதிலும் வாழும் உயிர்க்கு என்ற முடிப்பு இருக்கிறதே, அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வாழ்ந்த அனுபவத்தின் பதிவாய் வரும் எழுத்தும் எண்ணும் வாழும் உயிருக்கு எந்த வாதையும் வராமல் காப்பதால், கண் ஆகியிருக்கிறது அல்லவா?

எண்ணும் எழுத்தும் கண்ணென்று கருதிப் பார்ப்பது மனிதர்க்கே பொருந்தும் என்பதற்கு இந்தப் பழமொழியும் திருக்குறளும் தக்க சான்றுகள். ஆனால், நடைமுறையில் இவற்றை அறிந்தவர்களே, நிலை தடுமாறி, கண்ணையும் கருத்தையும் தன்போக்கில் மாற்றிச் செல்லவிட்டு அல்லல்படுவதை நினைக்கிறபோதுதான் வாய்க்கு மூடி வைத்த வகையையும் உணர முடிகிறது.

வாய்தான் அனைத்திற்குமான வாயில்; உண்பதற்கு மட்டுமின்றி, உலகத்தோடு ஒட்ட ஒழுகுதற்கும் உரையாடுவதற்கும் அதுதான் பெருந்துணை! இந்த இடத்தில் செவிக்கும் வாய்க்கும் இடையில் உணவை வைத்து ஓர் உண்மையை உணர்த்துகிறது திருக்குறள்.
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் என்கிற குறளில் வயிறுதான் சொல்லப்படுகிறதேயன்றி, வாய் சொல்லப்படவில்லை. நாக்கு இருப்பதாகவே தெரியவில்லை. காரணம் சுவைத்துச் சொல்லவேண்டிய நாவின் பணியைச் செவிகள் தமதாக ஏற்றுக் கொண்டுவிட்டன.
அதனால்தான், 

செவியின் சுவை உணரா மாக்கள்
அவியினும் வாழினும் என்
என்றும் கேட்கிறது குறட்பா.
செவியின் சுவை உணராதவர்களை மக்கள் என்றே ஒப்புக் கொள்ள இசையவில்லை திருவள்ளுவர். அவர்கள் கால்முளைத்த உயிர்கள் ஆகிய மாக்கள் என்று (கால்நடைகள்) விலங்குகளின் பட்டியலில் சேர்க்கிறார்.
காரணம், ஓசைகளையும் ஒலிகளையும் கேட்டுக்கொள்கிற காதுகள் பிற உயிர்களுக்கு இருந்தாலும், உயிர்ப்பு நல்குகிற சுவையோடு கூடிய உணர்வு தருகிற வாய்ச்சொல்அமுது உண்கிற பேறு, மனிதவுயிர்களுக்கு மட்டுமே வாய்க்கும்.

ஆனால், வாழ்பவர்களுக்கோ இவை வழங்கும் சுவைகள் பல. வாய் நுகரும் சுவைகள் ஆறு. அவை, அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பாகிய இனிப்பு என்பதாக அமையும். ஆனால், செவி நுகரும் சுவைகள் இரண்டு. ஒன்று சொற்சுவை, மற்றொன்று பொருட்சுவை.
அவ்வளவுதான் என்று நினைத்துவிட முடியாதபடிக்கு, பொருட்சுவையை ஒன்பதாகக் கொண்டு காட்டுவார் பரிமேலழகர். அவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பதாக விரிகிறது. இந்தச் சுவை, சமைத்துத் தருகிற உணவால் அமைவதன்று. தானே சமைந்த சுவை. அதனால்தான், செவிநுகர் கனிகள் என்று கம்பன் சொல்லிக்காட்டுகிறான். இதற்கும் வேர் திருக்குறள்தான்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
என்கிறது.

பழத்திற்கும் அடுத்த நிலை கனிதல். காய், பழுத்துப் பின்னர்க் கனியும். அந்தக் கனிவில் பெருகுவது கனிவு. அதன் வழிப் பிறப்பது கருணை. அது அருள்நிலை. அதனால் வாயினின்று வெளிப்படும் வாக்கு அருள்வாக்கு எனப் பெயர் கொள்கிறது. அதற்குத் துணையாகும் கருவி, நாக்கு. அமுது பரிமாறும் நிலையில் உயர்ந்துள்ள நாக்கு நஞ்சுபரிமாறல் தகாது என்று அருளாளர்கள் பலர் எச்சரிக்கிறார்கள். நாவினால் விளையும் தீமைகள் தீயினும் அஞ்சத்தக்க தீமைகளாகப் பெருகுகின்றன. இதனை, நாவினால் சுட்ட வடு என்று அடையாளம் காட்டுகிறது தமிழ். எதுவாக இருந்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாதே! என்று எச்சரிக்கை வாசகம் வந்தது.
கண்டதையும் பார்க்கும் கண்ணும், கண்டதையும் பேசும் வாயும் தந்தவற்றையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளல் தகாது என்பதால்தான், இந்த மூன்று பொறிகளையும் ஒருங்கிணைத்து பின்வருமாறு முன்மொழிந்தார் திருவள்ளுவர்:
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று! அதனால்தான்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்றும் சொன்னார்.
கண்டு, கேட்டு, உண்டு. உயிர்த்து, உற்று அறியும் ஐம்பொறி நுகர்ச்சிகளுக்கும் அப்பால் பெற வேண்டியது, செம்பொருள் காணும் அறிவு! அதற்குப் பிறப்பு என்னும் பேதைமை நீங்க வேண்டும்! எத்தாயர் வயிற்றில் பிறந்தாலும் ஏற்றத்தாழ்வு கருதாது, ஒத்த தன்மையோடு காணத்தெரிய வேண்டும்; ஆண் பெண், மேற்குடி கீழ்க்குடி என்று பிறப்பால் பேதைமை காண்பதைநீக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்!
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு என்கிறார் திருவள்ளுவர்!

இந்த அறிவு அற்றங்காக்கும் கருவி!
மூடி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கப் பழகிக்கொண்டால், எழுமையும் ஏமாப்புடைத்து அல்லவா?
அடக்குவதுகூட, ஆபத்தாய் வெடிக்கும்; அதனால்தான், பக்குவப்படுத்தல் எனும் பொருளில், அவித்தல் என்கிறார் திருவள்ளுவர்.
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்! என வாழ்த்துகிறார் என்றேன் நான்.
இக்குறளில் இடம்பெறும் வாயில், பொய் என்ற இரு சொற்களைக் கொண்டு, யா காவாராயினும் நா காக்க எனக் கொள்ளலாமா? என, இந்த உரையாடலை முடித்துவைக்க முயன்றார், தொடங்கியவர்!
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றேன் நான்! செம்பொருளா? மெய்ப்பொருளா? எனத் தொடங்கினார் மற்றொருவர்!
அதைப் பின்னர் பேசலாம்! என்று சொல்லாமலேயே எழுந்தோம்!
யா காவாராயினும்...! மௌனமாய் நினைத்ததை ஒருவர் நா காக்க என்று மொழிபெயர்த்தார்.

மேல் விளக்கம் தந்து நான் முடிக்க வேண்டியதாயிற்று.
மெய், வாய், கண், மூக்கு, செவி என இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் புறத்துறுப்புகள். இவற்றில் ஏதேனும் பழுதுநேர்ந்தாலும் பயன்படுத்துவதில் குறை நிகழ்ந்தாலும் சரிக்கட்டிக்கொள்ள இன்னொரு உறுப்பைத் திருவள்ளுவர் காட்டியிருக்கிறார் என்று நிறுத்தினேன்.
என்ன என்பதுபோல் அவர்களின் புருவங்கள் உயர்ந்தன. அது அன்பு என்று முடித்தேன். இதற்கு புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு? என்ற திருக்குறளே சான்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024