மாற்றாரும் போற்றும் அறிஞர் அண்ணா!
By பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் |
"வெள்ளம் அழித்திடும்; - வாய்க்கால் வளமூட்டும். செல்வம் சிலரிடம் சென்று குவிந்து விடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும். சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான் செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக் கூடிய வழிமுறை கண்டாக வேண்டும் என்று சிந்தனையாளர்கள் கூறினர். நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது. நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது' - அறிஞர் அண்ணா. "தமிழர் திருநாள்' என்ற தலைப்பில் பொங்கல் திருநாளையொட்டி 12.01.1969 அன்று காஞ்சி பத்திரிகையில் தம்பிக்கு எழுதிய கடிதத்தின் பகுதி இது.
அறிஞர் அண்ணா, தான் இறப்பதற்கு முன்பு கடைசியாக எழுதிய கடிதம் இதுதான். அதுமட்டுமல்ல, தான் இறந்து விடுவோம் என்று உணர்ந்த பிறகு எழுதிய கடிதமும்கூட. கடைசியாகத் தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டிய தனது கருத்துகளை இந்தக் கடிதத்தின் மூலம் விளக்குகிறார். இந்தக் கடிதத்தில் அவர் தெரிவிக்கும் கருத்துகளை அவரது மரண சாசனம் என்றே கொள்ளலாம்.
அறிஞர் அண்ணா சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, பணக்காரர்களுக்கு வரி விதித்து, ஏழைகளுக்கு வசதி தரவேண்டும் என்றார். ஆனால், நடைமுறையில் வரி செலுத்துவது எழைகளாகவும், வசதியைப் பெறுவது பணக்காரர்களாகவும் ஆகிவிட்டனர். உலகப் பெரும் பணக்காரர் வாரன் பஃபெட், தன்னைவிட தனது வேலைக்காரர் அதிகம் வரி செலுத்துகிறார் என்று அமெரிக்காவில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க பெரும் பணக்காரர்கள் கெட்டிக்காரர்களாகச் செயல்படுகின்றனர்.
இந்நிலை மாற என்ன வழி? அறிஞர் அண்ணா இது பற்றிக் குறிப்பிடும்போது, "சமத்துவம் என்பது சமமாக நடத்துவது அல்ல, சம வாய்ப்பை அனைவருக்கும் அளிப்பதுதான்' என்றார். சம வாய்ப்பு சமுதாயத்தை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் சம பலன்களைப் பெற வழி வகுப்பதுதான் உண்மையான சமதர்ம சமுதாயம் அமைய வழி பிறக்கும். ஓரளவுக்கு நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைத்துள்ளதே இதற்குச் சான்றாகும்.
அறிஞர் அண்ணா இரண்டாண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி நடத்தினார். அதிலும் அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தது வேறு. இருப்பினும், அவரது ஆட்சிக் காலத்தில் புஞ்சை நிலங்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டது. ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் ரூபாய்க்கு படி அரிசித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆண்டு வருமானம் ரூ.1,500-க்குக் குறைந்த நிலையில் இருந்த குடும்பத்துப் பிள்ளைகளுக்கு புதுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சமுதாயத்தில் அடித்தளத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு வழிவகைகள் காணப்பட்டன.
அறிஞர் அண்ணாவின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. அவரது எழுத்து, சொற்பொழிவு, நாடகங்கள், சினிமாக்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்துநிற்கக் கூடியவையாக உள்ளன. அவரது சொற்பொழிவுகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவது மட்டுமல்ல, அவரை வைத்து நிதி சேர்க்க திரையரங்குகளில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தினால் மக்கள் பெருந்திரளாக நிதி தந்து, டிக்கெட்டுகளைப் பெற்று கூடுவதும் உண்டு.
அவரது தமிழ்த் தொண்டுக்கு முத்தாய்ப்பாக அமைந்ததுதான் முதலமைச்சராக இருந்தபோது அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இருமொழித் தீர்மானம். தமிழும், ஆங்கிலமும் போதும் என்ற அவரது கருத்து நமக்குத் தமிழும், பிற உலகினரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும் என்ற அடிப்படையில்தான்.
அவரை இந்தி எதிர்ப்பாளர் என்றே அடையாளம் காட்டினர். ஆனால், உண்மையில் அவர் சமத்துவ வாய்ப்பாளர். இந்தியாவில் இந்தி பேசும் பகுதியில் பிறந்த ஒருவருக்கு அவரது தாய்மொழியில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு, அதே இந்தியாவில் தமிழ் மொழி பேசும் பகுதியில் பிறந்த ஒருவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்தாக இருந்தது. இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படை நியாயமும் இதுவே.
தேசியத்தின் பெயரால் ஆங்கிலத்தை அறவே புறக்கணிப்பது தீங்கு விளைவிக்கக் கூடியதாகும் என்றார். அன்றைய தினம் அறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், மற்ற தமிழ்ப் பெரியோர்களும் சேர்ந்து ஆங்கிலத்தை நிலைநிறுத்தியதின் பயனை இன்றைய தலைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
பிறந்த நாட்டுக்கு "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டும் முயற்சியில் அறிஞர் அண்ணா ஆரம்பம் முதலே ஈடுபட்டார். ஆனால், அந்தக் கனவும் அவர் முதலமைச்சராக இருந்தபோது ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்கு "தமிழ்நாடு' என்ற பெயர் மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அடுத்து வந்த 1969-ஆம் ஆண்டு பொங்கல் புதுநாள் முதல் "தமிழ்நாடு' என்ற பெயர் செயல்படுத்தப்பட்டது.
நீதிக் கட்சியில் இருந்த அண்ணா, தந்தை பெரியார் ஆசியோடு 1944-இல் "திராவிடர் கழகம்' என மாற்றம் செய்தார். சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக இயங்கிய திராவிடர் கழகத்தில் தொடர்ந்து அறிஞர் அண்ணாவால் இருக்க முடியவில்லை. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. தந்தை பெரியார் "துக்க நாள்' என்றார். அறிஞர் அண்ணா அதை "மகிழ்ச்சிக்குரிய நன்னாள்' என்றார். கருத்து வேற்றுமை தொடங்கியது.
1949-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி, செப்டம்பர் 17-ஆம் நாள் "திராவிட முன்னேற்றக் கழக'த்தைத் தொடங்கினார். முதலில் அவர் பணியாற்றியது திராவிடர் கழகம். அது இனத்தை அடிப்படையாகக் கொண்டது. "திராவிட முன்னேற்றக் கழகம்' என்பது இடத்தை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர் கழகம் சமுதாய சீர்திருத்தத்தை வலியுறுத்தும் இயக்கம். ஆனால், அறிஞர் அண்ணா கண்டது தென்னாட்டுக்கான அரசியல் இயக்கம்.
1962-இல் இந்தியா மீது சீன படையெடுப்பு நடந்தது. அதுவரை திராவிட நாடு விடுதலை கோரிக்கையை வற்புறுத்தி வந்த அறிஞர் அண்ணா ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், அறைகூவல் விடப்பட்டதை உணர்ந்தார். "வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் அரசியல் நடத்த முடியும்' என்று முழங்கிய அறிஞர் அண்ணா, பிரிவினைக் கோரிக்கையை கைவிட முடிவெடுத்தார். பிரிந்தால் தென்னாட்டு மக்கள் எந்தெந்த நன்மைகளையும், உரிமைகளையும் பெற முடியுமோ, அவற்றை "இந்தியா' என்ற அரசியல் அமைப்புக்குள் இருந்துகொண்டே நிறைவேற்றப் பாடுபடுவோம் என்ற அரசியல் நிலையை அறிஞர் அண்ணா மேற்கொண்டார்.
1967-ஆம் ஆண்டு தேர்தல் நேரம்; நாங்கள் எல்லாம் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அறிஞர் அண்ணா சென்னையிலிருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டையில் மதிய உணவுக்குப் பிறகு தொழுதூர் செல்லும் சாலையில் ஒரு புளிய மரத்தின் கீழே காரை நிறுத்துகிறார். ஓய்வெடுக்க வேண்டி புளிய மரத்தின் நிழலில் துண்டை விரித்துப் போட்டு, புளிய மரத்தின் வேரையே தலையணையாகக் கொண்டு படுத்து விட்டார். எங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நாங்கள் அங்கே சென்று, அவர் விழித்த பிறகு அவரைச் சந்தித்து உரையாடினோம். எண்ணி 15 நாள்களுக்குள் இந்த நாட்டின் முதலமைச்சராக வரும் அறிஞர் அண்ணா, நெடுஞ்சாலையில் ஒரு புளிய மரத்தின் நிழலில் துண்டை விரித்துப் போட்டு ஓய்வெடுக்க சிறிது நேரம் உறங்குகிறார் என்ற காட்சி அவருடைய எளிமைக்கு நிலைத்துநிற்கும் சாட்சியாகும்.
அதே போன்று அவர் முதலமைச்சராக ஆன பிறகும் ஆடம்பர சொகுசு கார்கள் கூடாது என்று தவிர்த்து விட்டார். சாதாராண காரையே பயன்படுத்தினார். அமைச்சர்களுக்கு அன்று மாதச் சம்பளம் ரூ.1,000 என்று இருந்ததை, ரூ.500-ஆகக் குறைத்து விட்டார். முதலமைச்சர் பின்னால் வண்டிகள் வரிசையாக வருவதைத் தவிர்த்தார். சாலை நெடுகிலும் காவலர்கள் நிற்பதை அடியோடு நிறுத்தினார். "மக்களுக்கு நாம் தொண்டர்களே தவிர, எஜமானர்கள் அல்ல' என்ற மகத்தான ஜனநாயக நெறியை நிரூபித்துக் காட்டினார்.
மாற்றாரும் போற்றும் அறிஞர்
அண்ணா, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே மறைந்தது தமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவ்வளவு சீக்கிரம் மறைந்து விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 1969 பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி அறிஞர் அண்ணா மறைந்தார் என்ற செய்தி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு பேரிடியைத் தந்தது. அனைத்து மக்களும் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு குடும்பமும் தனது உறவினர் ஒருவரை இழந்ததாகவே கருதியது.
சென்னை மாநகர் நோக்கி தமிழகமே திரண்டது. அறிஞர் அண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களின் எண்ணிக்கை இதுவரையில் கண்டிராதது மட்டுமல்ல, உலக வரலாற்றுச் சாதனையாக கின்னஸ் சாதனையில் பதிவு பெற்றது. திருவள்ளுவர் மொழியில் சொல்லப் போனால்,
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
தாம் எந்த மக்களுக்காகத் தொண்டு செய்தோமோ, அந்த மக்களின் கண்ணீர், தமது சாவுக்குப் பின் அமையுமானால், அத்தகைய சாவை பிச்சை எடுத்துப் பெற்றாலும் பெருமை உடையதே என்கிறார் வள்ளுவர். சாவிலும் செயற்கரிய சாதனை படைத்தவர் அறிஞர் அண்ணா!
நாளை அண்ணாவின் 50-ஆவது நினைவுநாள்.
கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.
No comments:
Post a Comment