Monday, July 8, 2019

தொலைந்த மொபைல் போன் கண்டுபிடிக்க புதிய வசதி

Added : ஜூலை 07, 2019 22:33

புதுடில்லி : தொலைந்த மொபைல்போன்களை கண்டுபிடிக்கும் புதிய வசதியை, மத்திய அரசு, அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல்போன்களை, வேறு எவரும் பயன்படுத்த முடியாத தொழில்நுட்பத்துடன், அவற்றை கண்டுபிடிக்க உதவும் வசதியை உருவாக்க, சி.டி.ஓ.டி., எனப்படும், தொலைத்தொடர்பு வளர்ச்சி மையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

சோதனைகடந்த, 2017ல் துவங்கிய இந்தப் பணி முடிந்து, தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதத்தில், இதை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தொலைத் தொடர்பு துறை உயரதிகாரிகள் கூறியதாவது:காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை, புதிய, 'சிம் கார்டு' மூலம் வேறொருவர் பயன்படுத்தும் நிலை உள்ளது. இது, பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால், சிம் கார்டு மாற்றினாலும், மொபைல் போனின், ஐ.எம்.இ.ஐ., எனப்படும், சர்வதேச மொபைல் சாதன அடையாள எண்ணை மாற்றினாலும், காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல்போனை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பம் தயாரிக்கப் பட்டுள்ளது.

பதிவேடு
இதற்காக, சி.இ.ஐ.ஆர்., எனப்படும், மத்திய சாதன அடையாள பதிவேடு உருவாக்கப்படும். இதன் மூலம், நாடு முழுவதும் விற்கப்படும் மொபைல் போன்கள் குறித்த தகவல்கள், ஒரே இடத்தில் இருக்கும். அதுபோல், காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் போனை செயலிழக்க செய்ய, மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனம் கொடுக்கும் தகவல், இந்த பதிவேட்டில் பதியப்படும். அதன் மூலம், அந்த மொபைல் போனில், வேறொரு மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனத்தின், சிம் கார்டை பயன்படுத்த முடியாது. அத்துடன், போலி மொபைல் போன்கள் விற்கப்படுவதையும் தடுக்க முடியும்.

இம்மாதம், 26ம் தேதி வரை பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கிறது. அதனால், அடுத்த மாதத்தில் இந்த புதிய சேவை துவக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024