Monday, July 29, 2019

வைகை,பல்லவன் அதிவிரைவு ரயில் வண்டிகளில் பொதுப் பெட்டிகள் குறைப்பு : பயணிகள் கடும் அவதி

By DIN | Published on : 28th July 2019 08:53 AM |




வைகை ,பல்லவன் அதிவிரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள், உடல் ஊனமுற்றோர் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி- சென்னை ரயில் வழித்தடத்தில் பல்வேறு விரைவு ரயில்களும், அதி விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் செல்லும் பெரும்பாலான ரயில்கள் இந்த வழித்தடத்தில் அரியலூர் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி,தஞ்சை,பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து தங்களது பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு ரயில்களில் சென்று திரும்புகின்றனர். 

இருப்பினும் அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லக்கூடிய பல்லவன், வைகை அதிவிரைவு ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த இரு ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட மூன்று குளிர்சாதனப் பெட்டிகளும், 14 இருக்கை வசதியுடன் பெட்டிகளும், ரயிலின் முன்பகுதியில் 2 பொதுப்பெட்டிகளும், கடைசியில் 2 பெட்டிகளும், முன்-பின் பகுதியில் மகளிர், லக்கேஜ் கொண்ட பெட்டிகள் தலா ஒன்று என 22 பெட்டிகள் இணைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு மாற்றப்பட்ட புதுப்பெட்டிகளுடன் வைகை அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து தலா 2 பொது, மகளிர் பெட்டிகளையும்,இரண்டு லக்கேஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,உடல்
ஊனமுற்றோருக்கான பெட்டிகளையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நீக்கிவிட்டது. தற்போது 2 பொதுப்பெட்டிகள் மட்டுமே உள்ளன.
இதே போல் கடந்த 10 நாள்களுக்கு முன்பு புதுப்பெட்டிகளுடன் பல்லவன் அதிவிரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

அதிலும் மேற்கண்ட பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. இதே போல் வாரம் ஒரு முறை சனிக்கிழமை இயக்கப்படும் புதுச்சேரி-மங்களூர் ரயிலிலும் இரண்டு பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கூட்ட நெரிசலில் பெரும்அவதிக்கிடையே பயணம் செய்து வருகின்றனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் பல்லவன்,வைகை ரயில்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆகையால் இந்த ரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என கூறிவரும் நேரத்தில், பெட்டிகளைக் குறைத்துள்ளதால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக உடல் ஊனமுற்றோர் அமரக்கூடிய பொதுப் பெட்டிகள் இல்லாததால் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ரயில்களில் குறைக்கப்பட்ட பெட்டிகளை மீண்டும் பொருத்தி இயக்க வேண்டும்.

அதே போல் இந்த இரு ரயில்களிலும் மேலும் ஒரு கூடுதல் பெட்டிகûளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மேலும் அரியலூர் ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024