Thursday, July 25, 2019

சித்தா மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை குறையும்

Added : ஜூலை 24, 2019 22:28

காலதாமத அறிவிப்பு மற்றும் கவுன்சிலிங் காரணமாக, சித்தா மருத்துவ படிப்பில், இந்தாண்டும் மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்புள்ளது.நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதேபோல், 'சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும்' என, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

இதுகுறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், 2018 - 19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழக அரசு நடத்தியது.இந்தாண்டு, 'யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை தவிர, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டது.பிளஸ் 2 அடிப்படையில் நடத்த அனுமதி கோரிய, தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிடவில்லை. அதற்கு மாறாக, கடந்தாண்டுபோல, பிளஸ் 2 அடிப்படையில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மாணவர்களை நம்ப வைத்தது.நீட் நுழைவு தேர்வு, மே மாதம் நடந்தது. தமிழகத்தில், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 78 பேர் எழுதினர். இவர்களில், 59 ஆயிரத்து, 785 பேர் தகுதி பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அலோபதி மருத்துவ படிப்பில் சேரவே, நீட் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால், சித்தா மருத்துவ படிப்பில் சேர நினைத்த, மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும், காலதாமத அறிவிப்பு மற்றும் கவுன்சிலிங் காரணமாக, இந்தாண்டும் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024