Monday, July 1, 2019

திருவல்லிக்கேணியில்ஒரு கிலோ தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்




 திருவல்லிக்கேணியில் ஒரு கிலோ தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

பதிவு: ஜூன் 30, 2019 05:12 AM

சென்னை,

சென்னையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக இரவு முழுவதும் தூங்காமல் தண்ணீர் லாரியை எதிர்பார்த்து பலர் காத்துக்கிடக்கின்றனர். பல இடங்களில் ஒரு குடம் தண்ணீரை ரூ.5 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழை பெய்த போதும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு சென்னை திருவல்லிக்கேணி பண்டி வெங்கடேசன் தெருவில் இட்லி, தோசை மாவு கடை நடத்தி வரும் பார்த்தசாரதி என்பவர் மாவு வாங்க வரும் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி, ‘ஒரு கிலோ இட்லி, தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்’ என்று அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை பேனர் மூலம் தனது கடை முன்பு அவர் வைத்துள்ளார். மேலும், அந்த அறிவிப்பில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், மாவு வாங்க வரும்போது குடம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குடிநீரை வடிகட்டி காய்ச்சிய பிறகு உபயோகப்படுத்தவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த பொதுமக்கள் பலர் இவரது கடைக்கு மாவு வாங்க குடங்களுடன் படை எடுக்க தொடங்கி உள்ளனர். இதனால், குடிநீர் லாரியில் தண்ணீர் பிடிக்க குடங்களை வரிசையாக வைத்திருப்பது போன்று இவரது கடையிலும் குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இந்த அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்தி வரும் மாவு கடை உரிமையாளர் பார்த்தசாரதி கூறும்போது, ‘கடந்த 24 ஆண்டுகளாக மாவு கடை நடத்தி வருகிறேன். ஆனால், இதுபோன்று தண்ணீர் பிரச்சினையை சந்தித்தது இல்லை. தண்ணீர் பிரச்சினையால் மக்கள் திண்டாடுவதை பார்த்து இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டேன். வெளியில் இருந்து பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024