Sunday, July 7, 2019

அத்தி வரதரை தரிசிக்க, 'ஆன்லைன்' முன்பதிவு: சனி, ஞாயிறு கிடையாது

Updated : ஜூலை 07, 2019 07:27 | Added : ஜூலை 07, 2019 07:02




காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் கூட்டத்தை, கட்டுப்படுத்தும் வகையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சகஸ்ரநாம அர்ச்சனை தரிசனத்திற்கான 'ஆன்லைன்' பதிவு கிடையாது என, அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில், கடந்த, 1ம் தேதியில் இருந்து, அத்தி வரதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த வைபவத்தைக் காண, பல்வேறு மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.



மேலும், வெளியூர்களில் இருந்து, வரும் பக்தர்கள் வசதிக்காக, சகஸ்ரநாம அர்ச்சனை தரிசனத்திற்காக, 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு, இரு நாட்கள் முன் பதிவு செய்ய வேண்டும் என, அறநிலையத் துறை அறிவித்திருந்தது.ஒரு நாளைக்கு, 500 பேர் தான், ஆன்லைனில் பதிவு செய்ய முடியும் என்பதால், நாடு முழுவதும், பக்தர்கள் பதிவு செய்வது, 20 நிமிடத்தில் முடிந்து விடுகிறது.

மேலும், ஆன்லைன் மூலம் பதிவு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிடையாது. மற்ற நாட்களில் தரிசனம் செய்யலாம். வழக்கத்தை விட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.அதை தவிர்க்கும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே போல், ஆன்லைன் பதிவு, ஒரு நாளைக்கு, 500ல் இருந்து, அதிகரிக்கவும், அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.நீண்ட வரிசை பொது தரிசனத்திற்கு செல்லும் மக்கள், கிழக்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு சென்று, மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியில் செல்வர். நேற்று, பொது தரிசனத்திற்கு செல்லும் கூட்டம், வடக்கு மாடவீதியில் இருந்து, செட்டித் தெரு, ஆணைகட்டி தெரு வழியாக, கிழக்கு ராஜகோபுரம் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.இதனால், பல மணி நேரம் மக்கள் காத்திருந்து, அத்தி வரதரை தரிசனம் செய்தனர். நேற்று, மொத்தம், 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

நடைபயணமாக வந்த பஜனை குழு

விழுப்புரம் மாவட்டம், தேப்பரம்பட்டு, ஆண்டாள் பஜனை குழுவைச் சேர்ந்த, 15 பேர், காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தை காண, நேற்று, காலை, 5:00 மணிக்கு, நடைபயணமாக புறப்பட்டனர்.

பஜனை பாடல்களை பாடியபடியும், ஆஞ்சநேயர் வேடமிட்டவர் நடனம் ஆடியபடியும், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக, நேற்று, மாலை, 6:00 மணிக்கு, சின்ன காஞ்சிபுரம் வந்தனர்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பஜனை பாடல்களை பாடியபடியே அத்தி வரதரை தரிசிக்க சென்றனர்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...