Sunday, July 7, 2019

நாளை முதல் கவுன்சிலிங் துவக்கம் :மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Added : ஜூலை 07, 2019 03:09



சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 5,400 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 3,968 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, 852 இடங்களும் உள்ளன. மீதமுள்ள, 580 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கின்றன.அதேபோல, பல் மருத்துவம் எனப்படும், பி.டி.எஸ்., படிப்பிற்கு, 1,940 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டில், 1,223 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 690 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 27 இடங்கள் உள்ளன. 

இவற்றில், மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.இந்தாண்டு, 'நீட்' நுழைவு தேர்வில் தகுதி பெற்ற, 68 ஆயிரத்து, 20 பேர், இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில், 60 ஆயிரத்து, 997 பேர், விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில ஒதுக்கீட்டிற்கு, 31 ஆயிரத்து, 353 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, 25 ஆயிரத்து, 651 மாணவர்களும் தகுதி பெற்று உள்ளனர்.இது தொடர்பான தரவரிசை பட்டியலை, சென்னை, ஓமந்துாரார், அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட, துறை செயலர் பீலா ராஜேஷ், மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜன் ஆகியோர் பெற்றனர்.மாநில அரசு ஒதுக்கீட்டில், நீட் தேர்வில், 685 மதிப்பெண் பெற்ற, ஸ்ருதி, முதலிடத்தை பிடித்தார்; 677 மதிப்பெண் பெற்ற, அஸ்வின் ராஜ், இரண்டாம் இடத்தையும், 676 மதிப்பெண் பெற்ற, இளமதி, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கை, நாளை முதல் துவங்குகிறது. நாளை, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.நாளை மறுநாள் முதல், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கி, ஞாயிற்றுக்கிழமை உட்பட, 10 நாட்கள் நடைபெறும்.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான, 10 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள் குறித்து, அனைத்து கட்சிகள் கூட்டம், நாளை மாலை, 5:30 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திற்கு பின், முடிவு தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வெளிமாநிலத்தில் படித்த 2,096 பேர் தகுதிமருத்துவ படிப்பில், வெளி மாநிலத்தவர்கள், ஒதுக்கீட்டில் இடங்கள் பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, இந்தாண்டு, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில், பெற்றோரின் ஜாதி, பிறப்பு சான்றிதழ் கேட்கப்பட்டது. இதில், சில குழப்பங்களும் ஏற்பட்டன.அதன்படி, அரசு ஒதுக்கீட்டில் தகுதி பெற்ற, 31 ஆயிரத்து, 353 பேரில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, ஆறு முதல், பிளஸ் 2 வரை, தமிழகத்தில் படித்தவர்கள், 29 ஆயிரத்து, 101 பேர். வெளிமாநிலங்களை பூர்வீகமாக கொண்டு, தமிழகத்தில், ஆறு முதல், பிளஸ் 2 வரை படித்தவர்கள், 156 பேர்; தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு, வெளி மாநிலங்களில் படித்தவர்கள், 2,096 பேர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024