Sunday, July 7, 2019

வேலியே பயிரை மேய்ந்த பரிதாபம்.. வேதியியல் ஆய்வகத்தில் மாணவி பலாத்காரம் உதவி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 07, 2019 05:20

சேலம்:பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய, அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர், பாலாஜி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர்.பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் பாலாஜி, 42; உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாற்றுத்திறனாளியான அவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 முடித்த மாணவி ஒருவரின் பெற்றோர், சமீபத்தில், தலைமை ஆசிரியரை சந்தித்து, புகார் ஒன்றை தெரிவித்தனர். 

அதில், பிப்ரவரியில், பாலாஜி, வேதியியல் ஆய்வகத்தில், மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால், மாணவி தற்போது, கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.புகார் கிளம்பியதும், மருத்துவ விடுப்பில் சென்ற பாலாஜி, தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியர், அமுதா, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.அதனடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, பாலாஜியை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுக்கம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தலைமை ஆசிரியர், பெரும்பாலான நாட்கள், பள்ளிக்கு வருவதில்லை. அதனால் பாலாஜி தான், அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல், அதிகாரம் செலுத்தி வந்தான்.வளாகத்தில், ஆசிரியர்கள் சேர்ந்து, மது அருந்துவது, காதல் விவகாரங்களை கண்டுகொள்ளாமல் விடுவது என, பள்ளியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.இதில், வேலியே பயிரை மேய்வது போல, உதவி தலைமை ஆசிரியர், தன்னிடம் படிக்கும் மாணவியை, பலாத்காரம் செய்துள்ளான். இதற்கு பின்பும், எங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு எப்படி அனுப்ப முடியும்?இவ்வாறு, அவர்கள் கூறினர்.பாலியல் புகாரில் சிக்கியுள்ள, வேதியியல் ஆசிரியர், பாலாஜி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பள்ளி மீதான புகார்களுக்கு, உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.கணேஷ்மூர்த்தி,முதன்மைக்கல்வி அலுவலர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024