Saturday, November 2, 2019

10 நாட்களில் 4 முக்கிய தீர்ப்புக்கள் : அதிரடிக்கு சுப்ரீம் கோர்ட் 'ரெடி'

Updated : நவ 02, 2019 09:12 | Added : நவ 02, 2019 08:34

புதுடில்லி : வரும் நவம்பர் 4 ம் தேதி முதல் 10 நாட்களில் 4 முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வுகள் வழங்க உள்ளது.

அயோத்தி வழக்கு, சபரிமலையில் அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உள்ளிட்ட 4 வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ள தீர்ப்புக்கள் நாட்டில் சமூக, மத மற்றும் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அயோத்தி வழக்கில், 1885 ம் ஆண்டு முதல் நடந்து வரும் மிக நீண்ட வரலாற்று சிறப்பு மிக்க வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. இந்து-முஸ்லீம் இடையே மிகப் பெரிய பிரிவினையை ஏற்படுத்தியது அயோத்தி வழக்கு.

ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அயோத்தி பிரச்னை நடந்து வருகிறது. 1934 ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் பாபர் மசூதியின் 3 மாடங்கள் இடிக்கப்பட்டது. அதனை இந்துக்களிடம் இருந்து வசூலித்த அபராத தொகையை கொண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் கட்டிக் கொடுத்தனர். 1950 ம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்ற இந்து பக்தர், ராமர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கும்படி முதன் முறையாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 1961 ல் வஹ்பு வாரியம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அயோத்தி வழக்கில் இதுவரை வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தவிர தலைமை நீதிபதி தலைமையிலான மேலும் 3 அமர்வுகள் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறில்லை என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி அலுவலகத்தையும் தகவல் அறியும் உரியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பான மனு ஆகியவை மீதும் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024