Saturday, November 2, 2019

உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?

Added : நவ 01, 2019 23:34

சென்னை : 'உயிரை காப்பாற்றும் டாக்டர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா; போலீசார், துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நாடு என்னவாகும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நோயாளியை கவனிக்காத அரசு டாக்டர் தாக்கப் பட்டதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டதை எதிர்த்தும், ௨௦௧௭ல் குமரன் என்பவர் வழக்கு தொடுத்தார். மனு தாக்கல்பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து, வழக்கறிஞர் வேலன் என்பவர், வழக்கு தொடுத்திருந்தார்.தற்போது நடக்கும் டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வர, நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச்சு நடக்கிறது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: போராட்டம் நடத்தக்கூடாது என, முழுமையான தடை ஏதும் இல்லை. அதேநேரத்தில், உயிரை காப்பாற்றும் பணியில், டாக்டர்கள் உள்ளனர்.

அவர்களை, கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் பார்க்கின்றனர். அவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா; போலீசார், துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னவாகும்.அவர்களுக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் உள்ளன. சேவை துறையில் அவர்கள் உள்ளனர். நீதித்துறையும், சேவைத்துறை தான். வழக்கறிஞர்களும், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்ட முறையை மாற்றலாம். ஜப்பானில் உள்ளது போல், ஏன் பின்பற்றக் கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தள்ளிவைப்புவழக்கறிஞர் சூரியபிரகாசம், ''டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், டாக்டர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல,'' என்றார்.

அதற்கு நீதிபதிகள், 'சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். சாலைகளில் குப்பை கிடக்கிறது. முதல்வர் வீட்டின் அருகே கூட, குப்பை குவிந்து கிடக்கிறது. நாங்களும், அந்தப் பகுதியில் தான் இருக்கிறோம். குப்பையை அகற்றா மல் உள்ளனர்' என்றனர்.உடனே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024