மதுரையில் தீவிரமாகும் ‘டெங்கு’: அரசு மருத்துவமனையில் அலைமோதும் காய்ச்சல் நோயாளிகள்- போலீஸார் பாதுகாப்புடன் மருந்துகள் விநியோகம்
மதுரை 2.11.2019
மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களைப் போல், இந்த ஆண்டும் ‘டெங்கு’ காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.
இதனால், மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தைவிட காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. கூட்டத்தை சமாளிக்க போலீஸார் பாதுகாப்புடன் மருந்து, மாத்திரைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளும், பாதாள சாக்கடை வசதிகளும் முழுமையாக இல்லாத கிராமங்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளது.
அதனாலேயே, இங்கு மிதமான மழை பெய்தால்கூட மழைநீர் தேங்கி வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவுகிறது.
ஆண்டுதோறும் ‘டெங்கு’ காய்ச்சலையும், அதனால், ஏற்படும் உயிரிழப்புகளையும் மதுரை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘டெங்கு’, ‘பன்றி’ காய்ச்சல்களை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டாமல் அதை மூடிமறைப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த காலங்களைப் போல், தற்போதும் மதுரையில் ‘டெங்கு’ தீவிரமடைந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு புறம் டெங்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினாலும் மறு புறம் நோயாளிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதனால், எப்போதும் அங்கு15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு நிரந்தரமாக சிகிச்சை பெறும் சூழல் இருக்கிறது.
டெங்கு தவிர, 100-க்கும் மேற்பட்டோர் மற்ற வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதில், குழந்தைகள், பெரியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரழிப்பும் ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதால் வழக்கத்தைவிட மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கு ரேஷன் கடை வரிசை போல் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். அதனால், நெரிசலை தவிர்க்க போலீஸார் பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு மருத்துவப் பணியாளர்கள் மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் ‘டெங்கு’ காய்ச்சலுக்கு யாரும் மரணமடையவில்லை என்று சுகாதாரத்துறை கூறி வந்தனர். நேற்று முதல் முறையாக ஒரு டெங்கு நோயாளி சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.
அதுபோல், தனியார் மருத்துவமனைகளில் சத்தமில்லாமல் ‘டெங்கு’ நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து வருகின்றனர்.
ஆனால், சுகாதாத்துறை அதிகாரிகள் ‘டெங்கு’ மரணங்களை மற்ற உடல் உபாதைகளால் இறந்துவிட்டதாக கணக்கு காட்டி சமாளிக்கின்றனர்.
இந்த ஆண்டு ‘டெங்கு’ தாக்கம் அதிகமிருந்தால் அடுத்த ஆண்டு வராமல் தடுப்பதே அரசு இயந்திரங்களின் பணி. ஆனால், ஆண்டுதோறும் டெங்கு பாதிப்பு அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
No comments:
Post a Comment