Sunday, November 3, 2019


மலிவுவிலை மருந்தகங்கள்: கண்டறிய செல்போன் செயலி

மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் 'மக்கள் நல மருந்தகங்கள்' எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது.

இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்லில் 13, நீலகிரியில் 8 'மக்கள் நல மருந்தகங்கள்' செயல்படுகின்றன.

எனவே, மக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மலிவுவிலை மருந்தகங்களின் விவரத்தையும், அங்குள்ள மருந்துகள் விவரத்தையும் அறிந்துகொள்ள Jan Aushadhi Sugam என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.



ஜெனரிக், பிராண்டட் மருந்துகளின் விலை ஒப்பீடு

இதுதொடர்பாக மக்கள் நல மருந்தக உரிமையாளர்கள் கூறியதாவது:

"சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிறு கோளாறுகள், காசநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. Jan Aushadhi Sugam செயலியில் மருந்தின் ஜெனரிக் பெயரை பதிவிட்டால் அந்த மருந்தின் விலை விவரம், அதே மருந்தை பிராண்டட் நிறுவனத்தில் வாங்கினால் எவ்வளவு விலை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல, தங்கள் மாவட்டத்தை குறிப்பிட்டால் தங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நல மருந்தகங்களின் விவரத்தை தெரிந்துகொள்ளலாம். செயலி தற்போது தொடக்க நிலையில் உள்ளது. தொடர்ந்து மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை வைத்து குறைபாடுகளை களைந்து, செயலியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுதவிர, http://janaushadhi.gov.in/StoreDetails.aspx என்ற இணையதளத்திலும் தங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நல மருந்தகத்தின் முகவரி, தொடர்பு எண் விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

'ஜெனரிக்' மருந்துகள்

எந்த பிராண்ட் பெயரில் மருத்துவர் மருந்து எழுதிக்கொடுத்தாரோ அதே பெயரில் மருந்து வாங்க வேண்டும் என நோயாளிகள் நினைக்கின்றனர். இன்னும் பெரும்பாலானோருக்கு 'ஜெனரிக்' மருந்துகள் குறித்த புரிதல் இல்லை. விலை அதிகமான மாத்திரைதான் அதிக பலன் அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.

'ஜெனரிக்' மருந்துகள் பிராண்டட் மருந்துகளைவிட எந்த வகையிலும் தரத்தில் குறைவானவை அல்ல. பிராண்டட் மருந்துகளில் உள்ள அதே மூலக்கூறுகள்தான் ஜெனரிக் மருந்துகளிலும் இருக்கும். உதாரணமாக, 'குரோசின்', 'கால்பால்' போன்றவை காய்ச்சலுக்கான பிராண்டட் மாத்திரைகள். அதே மாத்திரையை, அதன் மூலப்பொருளாக விளங்கும் 'பாராசிடமால்' என்ற பொதுவான (ஜெனரிக்) பெயரில் மருந்தகங்களில் பெறலாம்.

எனவே, நோய்களுக்கான மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும்போது, மூலக்கூறுகளின் பெயரையும் நோயாளிகள் கேட்டுப் பெற்று, மக்கள் நல மருந்தகங்களில் குறைவான விலையில் மருந்துகளைப் பெறலாம்"

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024