'பிகில்' காட்சிகள் ரத்து படத்தால் நஷ்டமா?
Added : நவ 03, 2019 03:01
சென்னை:நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்திற்கு, ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால், முன்பதிவு செய்த காட்சிகளை, தியேட்டர் உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி உள்ளனர்.
பிகில் படத்தால், 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி என, இரண்டு படங்கள் வெளியாகின. இதில், பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டன. முதல் ஐந்து நாட்கள் வரை, பிகில் படத்திற்கு இருந்த வரவேற்பு, தற்போது மிகவும் குறைந்துள்ளது.
வார இறுதி நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில், ரசிகர்கள் போதிய ஆதரவு தராததால், பிகில் படம் திரையிடப்பட வேண்டிய தியேட்டரில், கைதி படம் திரையிடப்படுகிறது. சமீபத்தில், சென்னை, தேவி பாரடைஸ் தியேட்டரில், பிகில் படத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட மதிய காட்சி, திடீரென ரத்து செய்யப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்களை, தேவி தியேட்டருக்கு மாற்றியது சர்ச்சையானது.
பல தியேட்டர்களில், பிகிலுக்கு பதில் கைதி மாற்றப்பட்டது. பிகில் படத்தை வாங்கி வெளியிட்ட வகையில், 40 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில், முதல் முறையாக, பிகில் படம் இன்று திரையிடப்படுகிறது. அங்கோலா தமிழ் சங்கத்தினர், பிகில் படத்தை இன்று மதியம் திரையிடுகின்றனர். அங்கு தமிழ் படம் திரையிடுவது, இதுவே முதல் முறை.
No comments:
Post a Comment