Sunday, November 3, 2019

குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி கைது : பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை

அபார்ட்மெண்டுக்கு குடிநீர் இணைப்புத்தர ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட குடிநீர் வழங்கல் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பெண் அதிகாரி குறித்து சம்பந்தப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து கையுங்களவுமாக பிடித்தனர்.

சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 94 வீடுகளுக்கு கழிவுநீர் , குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் சங்க நிர்வாகிகள் முறைப்படி ஆவணங்களை அளித்து இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் ஐந்து மாதங்களாகியும் இணைப்பு வழங்காமல், அதுகுறித்து கேட்டும் பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட சங்கத்தினர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது அலுவலகத்திலிருந்தவர்கள் உங்கள் ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது, ஆனால் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமாரி மேடம் உங்கள் கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

என்ன காரணம் கோப்பை நிறுத்திவைத்துள்ளார் என்று கேட்டபோது முக்கியமான பேப்பர் இல்லை என்று மேடம் சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். என்ன பேப்பர் என்று கேட்டபோது மேடத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் அனுப்பியுள்ளனர்.

குடியிருப்பு சங்கத்தினர் கண்காணிப்பு பொறியாளரான விஜயகுமாரியிடம் போய் மேடம் ஒரு பேப்பர் குறையுது என்று சொன்னீர்களாம் எல்லா பேப்பரையும் சரியாக வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். முக்கியமான பேப்பர் இல்லீங்க , உங்கள் கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் பணம் தரணும் அந்தப்பேப்பரைத்தான் சொன்னேன் என்று விஜயகுமாரி கூறியுள்ளார்.

அந்தப்பேப்பரை கேட்கிறீர்களா அதுகுறித்து எங்களுக்குள் பேசிவிட்டு கலக்ட் பண்ணிக்கொண்டு வருகிறோம் என்று கூறி வெளியே வந்துள்ளனர். பின்னர் நேராக சங்கத்தினர் அனைவரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் விஜயகுமாரி கேட்ட ரூ.1 லட்சம் லஞ்சம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் நாங்கள் சொல்வதுபோன்று பேசுங்கள். நாங்கள் தருகிற ரூபாய்த்தாளை கொண்டுபொய் கொடுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.

அதேபோன்று குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கண்காணிப்பு அதிகாரி விஜயகுமாரியிடம் பேசி ஒரு லட்சத்தில் ஏதும் குறைக்க முடியுமா என கேட்க ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அப்படியானால் முதலில் முன்பணமாக ரூ.50000 தருகிறோம், வேலை முடிந்தப்பின் மீதிபணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட விஜயகுமாரி வேலை முடியும்முன் மீதிப்பணத்தைக்கொடுத்தால்தான் இணைப்பு கிடைக்கும் என்று கூறி பணத்தை மாலை 5 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து தரும்படி கூறியுள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.50,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

அவரது அறையில் அவர் கையில் 50 ஆயிரம் ரூபாயை கொடுக்க அவர் அதை வாங்கி எண்ணும்போது ஏற்கெனவே தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் உள்ளே நுழைந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீஸார் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது அலுவலகமும் சோதனையிடப்பட்டது. போலீஸாரின் விசாரணைக்கு பிறகு தான் விஜயகுமாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்பது தெரிய வரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024