Monday, February 17, 2020


மருதகாசி 100: மக்கள் மொழியே இவரது வழி!

Published : 14 Feb 2020 12:12 pm


69-வது வயதில் மருதகாசி

சந்திப்பு: ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ்த் திரைப்பாடலில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு முன்பே, மண் வாசனையை வீசச் செய்தவர், திரைக்கவித் திலகம் அ.மருதகாசி. ஐம்பது, அறுபதுகளின் இசையமைப் பாளர்களும் நட்சத்திரங்களும் இவருடைய வரிகளுக்காக வரிசையில் காத்திருந்தார்கள்.

அப்படிப்பட்டவரின் மகனான மருதபரணி தமிழ் சினிமாவில் கதை, வசனகர்த்தாவாக முத்திரை பதித்தவர். சுமார் ஆயிரம் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தவர். மருதகாசி நூற்றாண்டின் நிறைவில் அவரது தந்தையார் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி இங்கே..

விவசாயம், விவசாயி தொடங்கி உழைப்பின் மேன்மையை, கிராமிய வாழ்வின் சித்திரங்களை ஆழமும் அழகும் மிளிரும் எளிய மொழியில் பாடல் வரிகளாகப் பதிந்தவர் உங்கள் தந்தையார். இந்த ஈடுபாட்டின் பின்னணிக்குக் காரணம் என்ன?

அடிப்படையில் அவர் ஒரு விவசாயி என்பதே முக்கிய காரணம். கொள்ளிடம் ஆற்றின் அக்கரை தஞ்சை மாவட்டம் என்றால், இக்கரை திருச்சி மாவட்டம். அங்கே பழுர் மேலக்குடிக்காடு என்ற விவசாய கிராமத்தில் அய்யம்பெருமாள் - மிளகாயி தம்பதியின் மூன்றாவது பிள்ளையாக 13.02.1920-ல் பிறந்தவர். எனது தாத்தா 35 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட நிலச்சுவான்தார். கிராமத்து நாட்டாமையாகவும் முன்சீப்பாகவும் இருந்தவர்.

தனது மகனைச் சிறந்த கல்விமானாக ஆக்கியவர். பரிசலில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்துசென்று, அக்கரையில் நிறுத்தப்பட்டியிருக்கும் வில்லு வண்டியில் மகனை ஏற்றி கும்பகோணத்துக்கு தொடக்கக் கல்வி பயில அனுப்பினார். நகராட்சிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும் பின்னர் அங்குள்ள சிறு மலர் உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு வரையும் படித்தார். அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் ராஜகோபால். இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடிப் பாடலாசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரர். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகியின் தந்தை. இவரிடம்தான் முறையான தமிழ் இலக்கணப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

எனது பாட்டி மிளகாயி அம்மாள், பாடல்களை இட்டுக்கட்டிப் பாடுவதில் வல்லவர். தாயாரின் இந்தப் பாட்டுத் திறன் மகனைப் பற்றிக்கொண்டதில் ஆச்சரியமில்லை. ஒரு மகனாக நான் அவதானித்தவற்றைக் கூற விரும்புகிறேன். அப்பா திரையில் பாடல் எழுத வந்த காலகட்டத்தில், புராண, இதிகாசங்களின் ஆதிக்கத்தால், திரைப்பாடல்களில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்திருந்தன. அவற்றைத் தவிர்த்து மக்கள் புழங்கும் மொழியிலிருந்து எளிய சொற்களை எடுத்தாண்டது அவரது வெற்றியையும் வீச்சையும் உறுதிப்படுத்தியது.

‘மக்களைப் பெற்ற மகராசி’யில் ‘மணப்பாற மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி’ பாடலில் ஒவ்வொரு ஊருக்கும் உரிய மண்ணின் சிறப்பை அவர் கூறியிருப்பார். அதேபாடலில், ‘சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு’ என்று கிராமிய வாழ்க்கை முறையின் முக்கிய கூறு ஒன்றை வெளிப்படுத்தியிருப்பார். மக்களின் மொழியே அப்பாவின் வழி. அறுபதுகளின் இறுதிவரை 21 விவசாயப் பாடல்கள்தான் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் 17 பாடல்களை அப்பா எழுதியிருக்கிறார்.

‘ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே.. என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே’ என்று எழுதியிருக்கிறார். அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை, அவரது இந்த வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். வளர்ச்சியின் பெயரால் நம் விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கும் வீட்டுமனைகளுக்கும் கொடுத்துவிடக் கூடாது.



அவரது திரையுலக பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

நாடக உலகம்தான் அவரைத் திரைக்கு அடையாளம் காட்டியது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே நாடகம் எழுதி, அவற்றுக்குப் பாடல்கள் எழுதி ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார். இதனால் அவருக்கு நாடக உலகம் மீது ஈடுபாடு எழுந்தது. எனது தாத்தாவுக்கு பர்மாவில் ரப்பர் தோட்டம் இருந்தது. அதனால் வீட்டில் செல்வத்துக்குப் பஞ்சமில்லை. விவசாயம் வேலைகளை எல்லாம் விரைந்து முடித்துவிட்டு, தனது வில்லு வண்டியில் கும்பகோணத்துக்குக் கிளம்பிவிடுவார் அப்பா.

அங்கே முகாமிட்டிருந்த தேவி நாடக சபாவில் அப்பாவை அறிமுகப்படுத்தி வைத்தவர், அவரது பள்ளித் தோழரான ஸ்ரீராமுலு. ஒரு கட்டத்தில் அப்பாவை தேவி நாடக சபாவின் முதலாளி கே.என்.ரத்னம் தனது குழுவில் எழுத்தாளராக சேர்த்துக்கொண்டார். அங்கே, ஏ.கே.வேலன் எழுதிய ‘சூறாவளி’ என்ற நாடகத்துக்கு முதன்முதலாக பாடல் எழுதியிருக்கிறார். அதேபோல தேவி நாடக சபா நடத்தி வந்த இளைஞர் மு.கருணாநிதியின் ‘மந்திரி குமாரி’, ‘ஒரே முத்தம்’ போன்ற நாடகங்களுக்கும் பாடல்கள் எழுத, அவற்றுக்கு இசையமைத்தவர் திருச்சி.

லோகநாதன். காரைக்குடியில் தேவி நாடக சபா முகாமிட்டிருந்தபோது அரு.ராமநாதன் எழுதிய ‘வானவில்’ என்ற நாடகத்துக்கு திருச்சி லோகநாதன் தந்த மெட்டுக்களுக்காக அப்பா பாடல்களை எழுதினார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பின்னணிப் பாடல் உத்தியைப் பயன்படுத்த எண்ணி, பல பாடகர்களைக் குரல் தேர்வுக்காக அழைத்தது. அப்படி அந்த நிறுவனத்தின் படம் ஒன்றுக்கு லோகநாதன் பாடச் சென்றபோது, இவர் வானவில் நாடகப் பாடலைப் பாடிக் காட்டியிருக்கிறார்.

அந்தப் பாடலில் இருந்த வரிகளை எழுதியது யார் என்று டி.ஆர்.சுந்தரம் கேட்க, உடனே அப்பாவின் பெயரைச் சொல்லியிருக்கிறார் லோகநாதன். அவ்வளவுதான், மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து உடனே சேலம் கிளம்பி வரும்படி தந்தி வர, அப்பா தனது நண்பர் கா.மு.ஷெரீப்பையும் உடன் அழைத்துக்கொண்டு சேலம் சென்றிருக்கிறார். அங்கே இருவருடைய வாழ்க்கையும் நாடகத்திலிருந்து திரைக்கு இடம்பெயர்ந்துவிட்டது.



கவி.கா.மு.ஷெரீப்பும் மருதகாசியும் இணைபிரியா நண்பர்கள் என்ற நிலை எப்போது ஏற்பட்டது; பின்னர் அவர்கள் ஏன் பிரிந்தனர்?

கும்பகோணத்தில் தேவி நாடக சபாவுக்கு அப்பா அறிமுகம் ஆகும்போதுதான் கவி.கா.மு.ஷெரீப் அப்பாவுக்கு அறிமுகமானார். அப்பாவைவிட நான்கு வயது மூத்தவர். நாடகக் கம்பெனியிலேயே உயிர் நண்பர்களாக ஆகிவிட்டார்கள். திரையுலகில் நுழைந்தபோது இரட்டையர்கள்போல் ஒரு படத்துக்கான பாடல்களைப் பகிர்ந்து எழுதுவது என்று ஒருமனதாக முடிவெடுதார்கள். பல படங்களில் பாடல்கள்: மருதகாசி -கா.மு.ஷெரீப் என்றே இடம்பெற்றது.

பின்னர் எந்தப் பாடலை யார் எழுதியது என இருவருமே அறிவித்துவிட்டார்கள். ஒரு கட்டத்தில் திரையுலகின் தேவை அதிகமாக இருந்ததால் இருவரும் தனித்தனியே பாடல்கள் எழுதுவது என்று முடிவெடுத்து தனியாக எழுதத் தொடங்கினார்கள். ஆனால் கடைசிவரை அவர்களின் நட்பு தொடர்ந்தது.

திரையுலகில் புகழ்பெற்ற இசைக் கூட்டணிகள் உண்டு. மருதகாசி - கே.வி.மகாதேவன் கூட்டணியும் அப்படி அமைந்ததுதானே?

ஆமாம்! முதன் முதலில் அப்பா அறிமுகமானது இசை மேதை ஜி.ராமநாதனின் இசையமைப்பில். மெட்டுக்குப் பாடல் எழுதுவதுதான் ஜி.ராமநாதனுக்குப் பிடிக்கும். ‘முல்லை மலர் மேலே’, ‘வசந்த முல்லை போலே வந்து’ தொடங்கி பல வெற்றிகளை இந்தத் தொடக்கக் கூட்டணி கொடுத்தாலும் கே.வி.மகாதேவன் புகழ்பெற்ற பிறகு அவருடன் இணைந்து அப்பா எழுதிய பாடல்கள் அவருக்கு பெரும் ராஜபாட்டையாக அமைந்தன. கே.வி.எம். இசையில் சுமார் 150-க்கும் அதிகமான படங்களுக்கு எழுதியிருக்கிறார். திரையிசையின் முதல் பொற்காலம் இவர்களுடைய கூட்டணியால் உருவானதுதான்.

விரிவான பேட்டியை வாசிக்க: www.hindutamil.in

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...