Friday, February 21, 2020

மதுரையுடன் அறிவித்த பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளில் ‘எம்பிபிஎஸ்’ மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழகம் புறக்கணிக்கப்பா?

மதுரை 21.02.2020

மதுரையுடன் அறிவித்த பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் கட்டுமானப்பணிகள் இன்னும் முடியாதநிலையிலும் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மதுரைக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் அமைகிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த மருத்துவமனை கட்டுமானப்பணி தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இந்த மருத்துவமனையுடன் அறிவித்த இந்தியாவின் பிற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கான மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா(JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்தின் நிதியுதவியுடன் பணிகள் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனம், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒதுக்கிய இடத்தைச் சுற்றி வேலி அமைப்பது, நான்கு வழிச்சாலையில் இருந்து சாலை வசதி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மட்டும் மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் நடக்கிறது. ஆனால், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணிக்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துமவனைகள் கட்டுமானப்பணிகள் நடந்தாலும் இன்னும் மருத்துவமனை தொடங்கப்படவில்லை. ஆனால், அந்த மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்க தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் தற்காலிக கட்டிடத்தில் வைத்து மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவிடப்படவில்லை.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை 2023-ம் ஆண்டு தொடங்கப்பட வேண்டும். அதனால், அதற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை இப்போதே தொடங்கியிருக்க வேண்டும்.

மதுரையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மங்களகிரி மற்றும் பீபீ நகரில் அமையவுள்ள எய்ம்ஸ்க்கான மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தற்காலிக தனி கட்டிடம் மற்றும் 300 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை இணைப்பு தேவை. அதற்கான வாய்ப்புகள் மதுரையில் அதிகம் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு மாநில அரசு முன்முயற்சி எடுக்கவேண்டும்.

தமிழக முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து அடுத்த ஆண்டாவது மருத்துவ மாணவ சேர்க்கையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகமும் (NIPER) மதுரை வளர்ச்சியின் இரு கண்கள். இவை இரண்டையும் திட்டமிட்டபடி கொண்டுவர தொடந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன், ’’ என்றார்.

ஏற்கெனவே மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நிர்வாகப்பிரிவு அலுவலகம், டெல்லியில் தொடங்கப்படும் நிலையில் நோயாளிகள் வருகை, தற்காலிக கட்டிட வசதியிருந்தும் மாணவர் சேர்க்கை தொடங்க மதுரைக்கு அனுமதி வழங்காதது, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan The Governor reaffirms his commitment  to upholding the constit...