ஒரு ஓட்டுச்சாவடி தயார் செய்ய ரூ.1000 போதாது: தேர்தல் கமிஷனிடம் வி.ஏ.ஓ.,க்கள் முறையீடு
Added : மார் 05, 2021 01:29 |
மதுரை:'சட்டசபை தேர்தலில் ஒரு ஓட்டுச்சாவடி தயார் செய்ய தற்போது வழங்கும் ரூ.1000ஐ ரூ.3000 ஆக உயர்த்தி ஒரே தவணையாக வழங்க வேண்டும்' என மாநில தேர்தல் கமிஷனிடம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்(வி.ஏ.ஓ.,) முன்னேற்ற சங்கம் முறையிட்டுள்ளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யும் பணி வி.ஏ.ஓ.,க்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு சாவடிக்கு ரூ.1000 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா முன்னெச்சரிக்கையாக அதிக வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
எனவே ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தலா ரூ.3000 வழங்குவதுடன், ஓட்டுச்சாவடி முன்பாக வாக்காளர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க சாமியானா பந்தல் அமைக்க ஓட்டுச்சாவடி ஒன்றுக்கு ரூ.4000 வீதம் வழங்க வேண்டும்.கடந்த சட்டசபை தேர்தலில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,களுக்கு அரை மாத சம்பளம் மதிப்பூதியமாக வழங்கப்பட்டது.
ஆனால் இதே வருவாய்த்துறையிலிருந்து பணிபுரிந்த மற்றவர்களுக்கு ஒரு சாத சம்பளம் மதிப்பூதியமாக வழங்கப்பட்டது.வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே விதமாக ஒரு மாத சம்பளத்தை மதிப்பூதியமாக வழங்க தலைமை தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மாவட்ட நிர்வாகிகள் ஜெய்கணேஷ், செல்வக்குமார், கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment